உடனடிச்செய்திகள்

Saturday, August 17, 2013

“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும்
தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
மே பதினேழு இயக்க ஆர்ப்பாட்டத்தில்
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!



“ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும், வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” என, சென்னையில் இன்று(17.08.2013), மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம்மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ச்சியாக மசூதிகள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றே தமிழர் சிக்கலுக்கான இறுதித் தீர்வு என வலியுறுத்தியும், இன்று (17.08.2013) மாலை, மே பதினேழு இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான் கண்டன முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.

.தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம்.சேரீப், எஸ்.டி.பி.ஐ(SDPI) மாநிலப் பொதுச் செயலாளர் திரு. நெல்லை முபாரக், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அன்பு தனசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர் பாசறைச் செயலாளர் திரு. சைதை கு.சிவராமன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் சிபி, தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அவரது பேச்சு:

தமிழீழ விடுதலைக் கோரிக்கைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக் கட்டைகள் போடும் வேலையை இந்தியாத் தொடர்ந்து செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தம் 1987-இல் ஏற்படுத்தப்பட்டது. நம்மில் பலர், அந்த இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தில், வடக்கு – கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகமாக ஏற்கப்பட்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் தமிழர்களும், அவர்களோடு வேறுபல சமூகத்தினரும் இருக்கின்றனர். அவர்களது தாயகமே அது என்றே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, அப்பகுதியில் நிலவும் இனச்சமநிலை என்பது இலங்கை முழுவதுமுள்ள இனச்சமநிலையை ஒத்திருப்பதைப் போல் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில், 90 விழுக்காடு சிங்களர்கள் இருக்கின்றனர் எனில், இதே இனவிகிதத்தில் வடகிழக்குப் பகுதிகளில் இனச்சமநிலையை ஏற்படுத்த வேண்டுமென அது குறிப்பிடுகிறது. இன்றைக்கு வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிங்களமயமாக்கல் அதனடிப்படையில் செய்யப்படுவது தான்.

இவ்வாறான இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, இந்திய அமைதிப்படையின் இராணுவ உதவியோடு 1987இல் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் வெறும் 20 ஓட்டுகளே பதியப்பட்டன, அதில் 2 ஓட்டுகள் செல்லாதவை. அதில், 10 ஓட்டு பெற்று ‘வெற்றி’ பெற்றவர், இந்தியாவின் கையாளாக நிறுத்தப்பட்ட வரதராஜபெருமாள் இதைச் சொன்னார்.

“நான் முதலமைச்சராக இருந்தாலும்கூட, என்னுடைய அலுவலகத்திற்காக ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்காகக்கூட, நான் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு போட வேண்டியிருக்கிறது. இந்தப் பதவிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என இந்தியாவால் நியமிக்கப்பட்ட கையாளான வரதராஜபெருமாளே சொன்னார். சொல்லிவிட்டு, இந்திய இராணுவத்தின் உதவியுடன் தப்பி பெங்களுரில் தஞ்சம் புகுந்தார்.

இதைத்தாண்டி, இந்த சட்டத்திருத்தம் மோசடியானது என்பதற்கு என்ன சான்று வேண்டும்?

இங்குள்ள காங்கிரசுக் கட்சியினரும், ‘இந்து’ ராம் போன்றவர்களும், இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரபாகரன் நிராகரித்தது தவறு என்றும், அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்திருக்கத் தேவையில்லை என்றும் பேசுகிறார்கள். காசுமீரின் சிங்கமெனப் போற்றப்பட்ட சேக் அப்துல்லா, மிசோரம் விடுதலைப் போராளி லால் டெங்கா ஆகியோரைப் போல், பிரபாகரன் தவறு செய்யவில்லை. பெங்களுரில் எம்.ஜி.ஆரை வைத்துக் கொண்டு பிரபாகரனிடம் பேசிப் பார்த்தார்கள். பிரபாகரன் முதலமைச்சர் பதவி எனது இலக்கில்லை என்றார். லால் டெங்கா இலண்டனில், “என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் பிரபாகரன் அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார்” எனப் பாராட்டிப் பேசினார். ஏனெனில், சேக் அப்துல்லா, லால் டெங்கா போன்ற மிகப்பெரும் போராளிகள் இடறி விழுந்த இடம் அது.

அண்மையில், ஐ.நா. மனித உரிமை அவையில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரித்து இங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், இங்கு சிலர் பேசினார்கள். அமெரிக்கத் தீாமானத்தை நிராகரித்துவிட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நிராகரிப்பு தான் வெற்றிடத்தை ஏற்படுத்தும். அந்த வெற்றிடம்தான் சரியான கோரிக்கையை வைப்பதற்கான இடமாகும். எனவே, இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தைத் தமிழர்கள் நிராகரித்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கையையே நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இலங்கை அரசின் இந்தச் சதிகளின் பின்னணியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான செய்தி, இந்தியா தமிழினப் பகை நாடு. இந்தியாவிடம் வாதாடிப் புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் போராடிப் பணிய வைக்கத்தான் முடியும். ஏனென்றால், உலகத் தமிழர்களின் முதன்மைப்பகை இந்திய அரசுதான்.

ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கை என்னவோ, அதன் நீட்சிதான் அதன் வெளியுறவுக் கொள்கை. உலகமயமாக்கலை, உள்நாட்டுக் கொள்கையாக ஏற்றுக் கொண்டதால்தான், தனது வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா வடிவமைக்கிறது. அதே போல, உள்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக, பல்வேறு சிக்கல்களில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ள இந்தியா தான், தனது வெளியுறவுக் கொள்கை மட்டுமோ, அல்லது சோனியாகாந்தி மட்டுமோ தான் தமிழர் சிக்கலுக்குக் காரணம் என்பதல்ல. ஒட்டுமொத்த இந்தியக் கட்டமைப்பே, தமிழர்களுக்கு எதிரானப் பகைக் கட்டமைப்புதான் என்ற உண்மையை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்ற இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் கோவேந்தன், செயலாளர் தோழர் வினோத், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.







போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT