தமிழீழ ஏதிலிகள் மூவரை நாடு கடத்தும்
இந்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறுக!
தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டுத்
தமிழர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாக
தமிழீழத் தமிழர்களின் உயிரையும், உரிமைகளையும் காவு கொள்ளத் துடிப்பதை 2009ஆம்
ஆண்டு முள்ளிவாய்க்கால் போரிலிருந்து நாம் உணர்ந்து வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாகத்தான்,
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்லாண்டு காலமாக இருந்து பின்விடுதலையாகி, தற்போது
தாம்பரத்தில் வசித்து வரும் திரு. செந்தூரன், தற்போது திருச்சி நடுவண்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு. ஈழநேரு, சென்னை புழல் சிறையில்
அடைபட்டுள்ள திரு. சவுந்தரராஜன் ஆகிய மூவரையும் இலங்கைக்கு நாடு
கடத்துகின்ற நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
சிங்களப் பேரினவாத
அரசின் ஒடுக்குமுறையிலிருந்து உயிர் பிழைத்து தமிழகத்திற்கு வந்த தமிழீழ ஏதிலிகளை, திரும்பவும் இலங்கை அரசின் இனவாதக் கொடுங்கரங்களிடம் ஒப்படைப்ப தென்பது, ஒரு கசாப்புக்கடையில் ஆடுகளை ஒப்படைப்பது போன்றதுதான்; அவர்களது உயிருக்கு
தெரிந்தே விளைவிக்கும் தீங்காகும்.
செந்தூரன் உள்ளிட்ட
இம்மூவரும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான எவ்விதக்
குற்றங்களிலும் இங்கு ஈடுபடவில்லை. தம்மை
பொய் வழக்குகளில் சிறைவைத்திருப்பதைக் கண்டித்தே தொடர்ந்து, அறவழிப் போராட்டங்களை நடத்தினர்.
மார்வாடி, குசராத்தி
சேட்டுகள், மலையாளிகள் என வந்தவனெல்லாம் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து
கொண்டிருக்க, பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்து தமிழகம் வரும் தமிழீழ ஏதிலிகளுக்கு சிறையும், நாடு கடத்தல் உத்தரவுகளும் வழங்கப்படுகின்றன.
திபெத், பர்மா உள்ளிட்ட
பல நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு இந்தியாவில்
பெரும் சலுகைகள் அளிக்கப்படுவதும், தமிழீழ ஏதிலிகளுக்கு எந்நேரமும்
கண்காணிப்பு – கெடுபிடிகளை அதிகப்படுத்தி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துத்
தர மறுப்பதும், இந்திய அரசின் தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.
எனவே, இந்திய அரசு
இம்மூவரையும் நாடு கடத்தும் உத்தரவினை திரும்பப் பெற வேண்டும். தமிழ்
உணர்வாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கோரிக்கையை
முன்னேடுத்து போராட வேண்டும். இம்மூவரையும் சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து, அவர்களைப்
பாதுகாக்க வேண்டும்!
இவண்,
பெ.மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சி.
|
Post a Comment