உடனடிச்செய்திகள்

Sunday, August 18, 2013

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு!

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்புத்
திருமணப் பாதுகாப்பு மாநாடு!

ஈரோட்டில் 18.08.2013 அன்று சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு சிறப்புற நடைபெற்றது.

முன்னதாக மாநாட்டிற்கு ஈரோடு காவல்துறை தடைவிதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்த முறையீடு செய்யப்பட்டு, அவ்வழக்கில் மாநாடு நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்த நிலையிலேயே மாநாடு வ.உ.சி. பூங்கா அருகில் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற முழுநாள் மாநாட்டின், மாலை அரங்கிற்கு, தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க.குணசேகரன் தலைமையேற்றார். தமிழினப் பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் தோழர் கி.வே.பொன்னையன் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் த.செ.மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன், திராவிடர் கழக வழக்கறிஞர் அருள் மொழி, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் தோழர் இரா.அதியமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. இந்திய தமிழ்ச் சமூகத்தில் பெருந்துயரமாகவும் கொடிய குற்றமாகவும் நெடுங்காலமாக நிலவி வரும் சாதிமுறையை எதிர்த்தும் அதன் ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு இம்மாநாடு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

  1. சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பண்பாட்டுப் புரட்சியில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் உயிர்பறிக்கப்பட்ட மதுரைவீரன் முதல் தருமபுரி இளவரசன் வரை உயிரிழந்த ஈகிகளுக்கு இந்த மாநாடு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

  1. தருமபுரி இளவரசன் கொலை செய்யபட்டிருந்தாலும் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருந்தாலும் இந்த மாநாடு அதை வன்மையாகக் கண்டிக்கிறது, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துக் கடுமையாகத் தண்டிக்கவேண்டுமென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிப் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் சாதி அடையாளங்களையும் அகற்ற உடனடியாக உத்தரவிடுமாறு தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

  1. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் சாதிக் கட்சிகளோடும சாதிச் சங்கங்களோடும் தேர்தல் கூட்டணி வைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்தகைய கூட்டணிகளைத் தவிர்க்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  1. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் தமது கட்சிகளில் சாதிய ஆதிக்கத்திற்குத் துணை போகும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. குறுகிய சுயநல அரசியல் இலாபத்திற்காகக் காதல்-சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பா.ம.க. உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும் சாதிச் சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதி வெறியர்களின் அச்சுறுத்தல்களிலிருந்தும் கௌரவக் கொலைகளிலிருந்தும் சாதி மறுப்பு இணையர்களைப் பாதுகாக்க, குடும்ப வன்முறைச சட்டம் போன்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களுக்கு இணையான  சிறப்புச் சட்டம் இயற்றி, அவர்களுக்கு முழுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு சட்ட, சமூக, பொருளியல் பாதுகாப்புக்கு வகை செய்யும் தனி ஆணையம் அமைக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. சாதிமறுப்பு இணையர்களை சாதி மறுப்பாளர்கள் என்றும், அவர்க்ளுடைய  குழந்தைகளை ஏதாவது ஒரு சாதியில் தள்ளி இழிவுபடுத்தாமல் சாதியற்றவர் என்றும்  பதிவு செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதியற்ற குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை அரசின் முழுப்பொறுப்பில் தரமான இலவசக் கல்வியை வழங்கு!மாறு தமிழக அரசை இந்த மாநாடு  கேட்டுக் கொள்கிறது.


  1. சாதிமறுப்புத் திருமணம் புரிந்தோர் சமூக அங்கீகாரம் பெறும் வகையில் அவர்களை நாட்டின் சிறப்புரிமை பெற்ற குடிமக்கள் என்று அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும் என்றும்,  இதை ஊடகங்கள் மூலமாக அரசுச் செலவில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமண இணையர்க்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கூடுதல் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று  இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமணம் புரிந்த ஏழைகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக் கருதி இலவயமாக ஒரு வீடும், கிராமப் புறங்களில் இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கவேண்டும்.


இம்மாநாட்டில், தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.










போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT