உடனடிச்செய்திகள்

Thursday, May 8, 2014

“கேரள அரசு அடாவடித்தனம் செய்யாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் அறிக்கை“கேரள அரசு அடாவடித்தனம் செய்யாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும்!” 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அறிக்கை!
 
நீண்ட நெடிய காலதாமதமானாலும் முல்லைப் பெரியாறு அணை உரிமையில் இன்று (07.05.2014) உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியத் தீர்ப்பு, தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக அமைந்துள்ளது. 

2006 பிப்ரவரி 27ஆம் நாள் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய வல்லுநர் குழுக்களின் அறிக்கையைப் பெற்று அணை வலுவாக இருக்கிறது என்றும், முதல் கட்டமாக தமிழக அரசு 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், சிற்றணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளை முடித்துக் கொண்டு முழு நீர்த்தேக்க அளவான 152 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு, கேரளத்தைக் கட்டுப்படுத்தாது என்று கேரள சட்டமன்றம் புதிய மசோதா ஒன்றை இயற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதலும் கொடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கேரளத்தின் இந்த அடாவடித் தனத்தை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 

மேற்கண்ட அரசமைப்பு சட்டத்திற்கு முரணான, கேரளச் சட்டம் செல்லாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டித் தர வேண்டும் என்றும் தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மறுவிசாரணைக்கு அனுப்பியது. மறுபடியும் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுநர் குழு அமைத்து, அணையின் வலுத்தன்மை பற்றி அறிக்கை தருமாறு அந்த அரசியல் சாசன அமர்வு கோரியது. 

வழங்கப்பட்ட நீதியை செயல்படுத்த இத்தனை தடங்கல்களும், உச்சநீதிமன்றத்தின் தாமதங்களும் இருந்திருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டு, தமிழக அரசு இப்பொழுது வந்துள்ள தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, ஆணையிட வேண்டும். 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று, இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 136 அடிக்கு மேல் ஓரங்குலம் தண்ணீர் உயர்ந்தால் கூட, அது வெளியே வழிந்து செல்லும் அளவிற்கு, 16 வடிகால் மதகுகளும் உயரத் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளன. திறந்து கிடக்கும் வடிகால் மதகுகளை உடனடியாக இறக்கி மூடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். 

அடுத்து, அணைப் பாதுகாப்புக்கு கேரளக் காவல்துறை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கேரள பாதுகாப்புத்துறையை விலக்கிக் கொள்ளச் செய்து, தமிழகக் காவல்துறை பொறுப்பில் அணைப் பாதுகாப்பை எடுத்துக் கொள்ள தமிழக அரசு ஆணையிட வேண்டும். 

கேரள அரசு, சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டு, இப்பொழுது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும். மாறாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் முழு அடைப்பு நடத்துவது, தமிழக கேரள இணக்கச் சூழ்நிலையைக் கெடுத்துவிடும். 2011இல் நடந்ததைப் போல, கேரளத்தில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படும் உருவானால், அது தமிழ்நாட்டில் எதிர்வினையை உருவாக்கி இருமாநிலங்களுக்கிடையே பதட்டச் சூழ்நிலையை உருவாக்கும் என்பதை இந்திய அரசு இந்தத் தடவையாவது உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர்,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
சென்னை.
Unknown said...

மணியரசன் எப்போதும் பக்கத்து மாநிலங்களுடன் சண்டையிட்டு கொண்டிருப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுப்போல அவா் செய்வது பிரிவினைக்கே வழி வகுக்கும். அவா்களுடைய அச்சம் அவா்களுக்கு

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT