உடனடிச்செய்திகள்

Saturday, July 11, 2015

“தமிழ்த்தேசியப்போராளி – தமிழறிஞர் அய்யா மா.செ.தமிழ்மணி - இனவுணர்வுள்ள ஒவ்வொரு தமிழர் வழியாகவும் வாழ்வார்!” - தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!


“தமிழ்த்தேசியப்போராளி – தமிழறிஞர்
அய்யா மா.செ.தமிழ்மணி - இனவுணர்வுள்ள
ஒவ்வொரு தமிழர் வழியாகவும் வாழ்வார்!”

அய்யா மா.செ. தமிழ்மணி அவர்களின்
இறுதி வணக்கக் கூட்டத்தில்
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!தமிழ்த் தேசியப் போராளியும், தமிழறிஞருமான அய்யா மா.செ.தமிழ்மணி அவர்கள், நேற்று (10.07.2015), திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூரில் இருந்த அவருடைய இல்லத்தில், சிறுநீரகக் கோளாறு காரணமாகக் காலமானார். அவருக்கு அகவை 75.

அய்யா மா.செ. தமிழ்மணி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று (11.07.2015) காலை 10.30 மணியளவில், அவருடைய மாத்தூர் இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார் தலைமையெற்றார். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே. ஆனைமுத்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், பாலாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் காஞ்சி அமுதன், மாணவர் களம் ஆசிரியர் தோழர் குணத்தொகையன், தமிழன்பர் திரு. இறையழகன் உள்ளிட்ட பலரும் இரங்கலுரையாற்றினர்.

கூட்டத்தில், தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய இரங்கலுரை:

“தமிழறிஞர் மா.செ.தமிழ்மணி அவர்களும் நானும் ஒருவகையில் ஒரு சாலை மாணக்கர்கள்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடைய தென்மொழி இதழ் வழியாகவும், கொள்கைச் செயல்பாட்டிலும், பாவாணர் – பாவலரேறு அவர்களின் உலகத் தமிழ்க் கழகத்தில் இயங்கிய நிலையிலும், நாங்கள் ஒரு சாலை மாணக்கர்கள்!

தான் ஏற்றுக் கொண்டக் கொள்கையை குடும்பத்தில் செயல்படுத்தி, எடுத்துக்காட்டான வாழ்வு நடத்தியதில் பெருஞ்சித்திரனாரைப் போலவே, அய்யா மா.செ. தமிழ்மணி அவர்களும், தன் குடும்பத்தில் பிள்ளைகளை – இல்லத்தாரை தமிழ் மொழி – தமிழ் இனப்பற்றுடன், தமிழர் அறம் சார்ந்த சமத்துவக் கொள்கையுடன் வளர்த்தவர், வழிநடத்தியவர்.

இந்த திடீர் இழப்பு, பேரதிர்ச்சியைத் தருகிறது. நன்றாக இயங்கிக் கொண்டிருந்தவர் திடீரென காலமாகிவிட்டார் என்ற செய்தி வந்த போது, பெரும் துன்பமாகவும், அதிர்வாகவும் இருந்தது. இனி நாம், ஆறுதல் அடைந்து கொள்வதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

மரணத்திற்குப் பிறகும் அய்யா மா.செ. தமிழ்மணி அவர்கள், தம் பிள்ளைகள் வழியாக மட்டுமின்றி தமிழின உணர்வாளர் ஒவ்வொருவர் வழியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

2003ஆம் ஆண்டு, அம்மையார் ஆட்சியில் கடற்கரையிலிருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்ட போது, மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை வைக்க வேண்டுமென்று நாங்கள் போராடிக் கைதானோம். அடுத்ததாக நாங்கள், கண்ணகி சிலையை மீண்டும் அங்கு அதே இடத்தில் வைக்க வேண்டுமென்று காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் சென்ற அதே பாதை வழியாக ஊர்திப் பரப்புரை செய்து, மதுரை செல்லும் பயணத்தை நடத்திய போது, அதில் பங்கேற்று ஒரு தளபதியைப் போல் கலந்து கொண்டார், தமிழ்மணி அய்யா. அவரோடு, அந்நாட்களில் பயணம் செய்தபோது, அவரின் கொள்கை உறுதியும், மென்மையான மனமும், தன்னடக்கமும், சமத்துவப் பண்பும், செயல் திறனும் வெளிப்பட்டதை பார்த்தேன்.

தமிழ்நாடு விடுதலை – மொழி விடுதலை – சமத்துவத் தமிழ்ச் சமூகம் என்ற மா.செ. தமிழ்மணி அய்யாவின் இலட்சியங்களை, நாம் நெஞ்சிலேந்தி முன்னேறிச் செல்வோம்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், அய்யா அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம், ஆசிரியர் காஞ்சி நடராசன் உள்ளிட்ட த.தே.பே. தோழர்களும், திரளான இன உணர்வாளர்களும் கலந்து கொண்டு, அய்யா மா.செ. தமிழ்மணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, மாத்தூரில் இன்று மாலை 3 மணியளவில், இறுதி வணக்க ஊர்வலம் நடைபெறுகின்றது.

அய்யா மா.செ. தமிழ்மணி அவர்களுக்கு வீரவணக்கம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT