உடனடிச்செய்திகள்

Monday, July 20, 2015

“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே! தமிழ்நாட்டு காவிரிப்படுகை பெட்ரோலியம் - எரிவளியை எடுக்காதே!” - போராட்ட அறிவிப்பு!


“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே! தமிழ்நாட்டு காவிரிப்படுகை பெட்ரோலியம் - எரிவளியை எடுக்காதே!”

செப்டம்பர் - 28 அன்று நரிமணம் - பனங்குடி எண்ணெய் நிறுவனங்கள் 24 மணி நேர முற்றுகை!
காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு!
“கர்நாடகம் காவிரியில் புதிய அணைகட்டாமல் தடை செய்!”, “தமிழ்நாட்டுக் காவிரியிலும் , தென்பெண்ணையிலும் கர்நாடகம் கழிவு நீரை விடாமல் தடை செய்!”, “காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமை!” ஆகிய மூன்று முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17.07.2015 அன்று முதல் நேற்று வரை - மூன்று நாட்களாக, காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய, “காவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரை” நேற்று (20.07.2015) மாலை, பூம்புகாரில் நிறைவுற்றது.


கடந்த 17.07.2015 வெள்ளிக்கிழமை அன்று முசிறி, பேராவூரணி, வேதாரணியம், காட்டுமன்னார்குடி வீராணம் ஏரிக்கரை ஆகிய இடங்களிலிருந்து தனித்தனியே நான்கு அணிகள் ஊர்திப்பயணமாகப் புறப்பட்டு - அதனதன் வழியே பல ஊர்களில் பரப்புரை செய்து, நேற்று (19.07.2015) பூம்புகாரில் வந்து ஒன்று சேர்ந்தனர். அங்கு, பல்லாயிரக்கணக்கான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் ஒன்று கூடி நடைபெற்ற, போராட்ட அறிவிப்புக் கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவலம் மு. சேரன் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி திரு. சோ. இராசராசன் வரவேற்புரையாற்றினார்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ.சின்னசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் நீதிக்கட்சித் தலைவர் திரு. சு.பா. இளவரசன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், மனித நேய மக்கள் கட்சித் தலைமை அமைப்பாளர் திரு. மன்னை செல்லச்சாமி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், விவசாயிகள் சங்கக்கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் திரு. ஆறுபாதி ப. கல்யாணம், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. பி. விநாயகமூர்த்தி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழக உழவர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் திரு. தங்க கென்னடி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. சுவாமிமலை விமலநாதன், தந்தை பெரியார் தி.க. நாகை மாவட்டச் செயலாளர் தோழர் ப. வ. பெரியார் செல்வம், வேதாரணியம் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி.வி.ராஜன் உள்ளிட்டோர் உரைவீச்சு நிகழ்த்தினர்.

போராட்ட அறிவிப்பு உரையாற்றிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், “காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே, தமிழ்நாட்டு நரிமணம் பெட்ரோலை எடுக்காதே!” என்ற முழக்கத்தை முன்வைத்து, வரும் செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் நரிமணம் - பனங்குடி ஆகிய பகுதிகளில் இயங்கும் இந்திய அரசு எரிவாயு - எரிவளி நிறுவனங்களுக்குள் ஆட்கள் - வாகனங்கள் எதுவும் உள்ளே சென்று வரமுடியாத அளவிற்கு, அப்பகுதியை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி மிக பெரிய அளவில் 24 மணி நேர முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

“காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழகத்திற்கான பங்கு நீரை பெற்று தாருங்கள் என்றோ, தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள் என்றோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பூம்புகாரில் கண்ணகி சிலை முன்பு ஆணையிட்டு ஓரணியில் திரண்டு காவிரியின் உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டும்” என்று தோழர் பெ.மணியரசன் பேசினார்.

மேலும் காவிரி டெல்டா பகுதிக்கு வரும் நடுவண் அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெறும் என்றும், தமிழகத்திற்கு காவிரி நீர் பெற்று தருவதில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தின் நிறைவில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. ஏ.வி.துரைராஜன் நன்றியுரையாற்றினார்.

இவ் எழுச்சிமிகு நிகழ்வில், திரளான உழவர்களும் தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு, காவிரி உரிமை மீட்க புதியதோர் நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT