“உயர்ந்து நின்ற ஒரு தமிழ்மகன்” அப்துல் கலாமுக்கு இறுதி வணக்கம்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், நேற்று (27.07.2015) முன்னிரவில், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது.
வரலாற்றில் தடம் பதித்த ஒரு தமிழராக வலம் வந்து கொண்டிருந்த அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்வழிக் கல்வி குறித்த அவரது அழுத்தமான கருத்துகள், திருக்குறளை அவர் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்ற பாங்கு, மரண தண்டனைக்கு எதிரான அவரது கருத்துகள் ஆகியவை என்றும் போற்றத்தக்கவை. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே எதிர்காலம் குறித்த துணிச்சலான உளவியலை உருவாக்குவதில் மாபெரும் பங்கு வகித்தார்.
அணுஉலை, நியூட்ரினோ போன்ற பேரழிவுத் தொழில்நுட்பத்தை ஆதரித்த அப்துல் கலாம் அவர்களுடைய நிலைபாட்டில் நமக்கு உடன்பாடில்லை என்ற போதிலும், உயர்ந்து நின்ற ஒரு தமிழ் மகனுக்கு நாம் இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment