“அம்மா அரிசியும் அல்ல மோடி அரிசியும் அல்ல” உழவர் அரிசி..! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கருத்து!
தேர்தல் சந்தை களைகட்டி விட்டது. ஐந்தாண்டுக்கு ஒரு தடவை கூடும் பெரும் சந்தை என்பதால் அழுகிப் போன சரக்குகளை விற்க அதிகமாக கூச்சலிடுகின்றன அரசியல் கட்சிகள்!
அண்மையில், பாரதிய சனதாக் கட்சியைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் பிரகாசு சவடேகர், “தமிழ்நாட்டில் இலவச அரிசியை “அம்மா அரிசி” என்று அ.இ.அ.தி.மு.க. கூறுகிறது; அது உண்மையில் நரேந்திர மோடி அரசி - தலைமையமைச்சர் அரிசி” என்று சொன்னார்.
“தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியில் ஒரு கிலோவிற்கு 32 ரூபாய் மானியம் நடுவண் அரசு வழங்குகிறது; தமிழ்நாடு அரசு கிலோவிற்கு 3 ருபாய் மட்டும்தான் வழங்குகிறது. அந்த 3 ரூபாயும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டவே சரியாகி விடுகிறது“ என்றார்.
சவடேகர் சொன்ன புள்ளி விவரம் சரியா தவறா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில், உழவர்கள் வயிற்றில் அடித்துதான் நெல் விலையை மிகவும் குறைவாக நிர்ணயித்து, கொள்முதல் செய்கின்றனர் ஆட்சியாளர்கள். இலாப விலை என்பதே இல்லாமல், “கட்டுப்படியான விலை” என்று ஒரு பெயர் சூட்டிக் கொண்டு, உழவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.
இதனால், கடனாளியாகி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தன்மானச் சிக்கலில் மாட்டி, உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். உண்மையில், “உழவர் அரிசி” என்று பெயர் சூட்டினால் அது பொருத்தமாக இருக்கும்.
நடுவண் அரசு கொடுக்கும் மானியம் என்பது, நடுவண் அரசு வேறு எங்கோ பொருள் ஈட்டி, அதிலிருந்து தருமமாகத் தமிழ்நாட்டிற்குத் தருவதன்று! பல்வேறு வகையான வரிகள் மூலம் ஓராண்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து
80,000 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறது நடுவண் அரசு. அதில், ஒரு சிறு தொகையை திருப்பித் தரும்போது, அதற்கு “மானியம்” என்ற பெயரை காலனிய ஆதிக்க மனப்பான்மையுடன் சூட்டிக் கொள்கிறது இந்திய அரசு!
அரசியல் சந்தைப் போட்டியில் கூச்சலிடும் தமிழ்நாட்டுக் கட்சிகள், இந்த உண்மைகளை வெளிப்படுத்த முன் வருவதில்லை. இவை தங்களுக்குள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதிலேயே முனைப்பு காட்டுகின்றன. விழிப்புணர்வுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
Post a Comment