மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் நுழைவுத்
தேர்வை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து
தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு செய்ய வேண்டும்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி., எம்.எஸ்.) மாணவர் சேர்க்கைக்கு அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு
(National Eligibility Cum Entrance Test – NEET) நடத்தும் சட்டத்தை
2013ஆம் ஆண்டு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்சமத் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
ஆனால்,
11.04.2016 அன்று நீதிபதி அனில் ஆர். தவே, ஏ.கே. டிக்கிரி, ஆர்.கே. அகர்வால், ஏ.கே. கோயல், ஆர். பானுமதி ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு
2013 தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதாகவும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் தடையில்லை என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வை மீண்டும் கொண்டு வருவதற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு கூறியிருக்கும் காரணம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, தகுதியற்ற மாணவர்களை சேர்க்கிறார்கள் என்பதாகும். இந்தச் சீரழிவைத் தடுப்பதற்கு மாநில உரிமையைப் பறிக்காமல் புதிய வழிகாட்டும் நெறிகளை உச்ச நீதிமன்றம் கூறியிருந்தால் நாம் வரவேற்கலாம்.
விரிவான முழுத் தீர்ப்பு முறையாக விவாதிக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என்று ஐந்து நீதிபதி அமர்வு கூறியிருக்கிறது.
மருத்துவக் கல்வி மாநில அரசின் அதிகாரப்பட்டியில் இருக்கும் போது, அதற்கான மாணவர் சேர்க்கை மட்டும் நடுவண் அரசால் அனைத்திந்திய அளவில் நடத்தப்படுவது மாநில உரிமைப் பறிப்பு ஆகும்.
அடுத்து, கிராமப்புற மாணவர்களும், முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் நுழைவுத் தேர்வில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகத்தான் நுழைவுத் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2
நீதிபதிகளின் பெரும்பான்மைக் கருத்து அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வை நீக்கி தீர்ப்பு வழங்கியது.
இப்பொழுது, ஐந்து நீதிபதிகளும் இவ்வழக்கை முழுமையாக விவாதிக்காமல் அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு பற்றிய தங்களின் பொதுவான கருத்தொற்றுமை அடிப்படையில், இடைக்காலத் தீர்ப்பு வழங்கி பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று கூறியிருப்பது உச்ச நீதிமன்றம் நீதி நெறிமுறையைப் பின்பற்றுகிறதா என்ற வினாவை எழுப்பியுள்ளது. இது, ஒரு தன்னோக்குவாத தீர்ப்பாகவே உள்ளது.
மாநில உரிமைக்கும் சமூகநீதிக்கும் எதிராகவுள்ள இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். அத்துடன், தமிழ்நாட்டில் அந்நுழைவுத் தேர்வை அனுமதிக்காமல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment