அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றப்
பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை
என்கிறது நடுவண் அரசு..!
காவிரி உரிமை மீட்கப் போராடுவோம்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
”காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்குக் கட்டளையிடவும் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை” என்று நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இன்று (03.10.2016) உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 262இன் கீழ் உருவாக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் 1956ன் பிரிவு 11 இவ்வாறு உச்சநீதிமன்றம் தலையிடத் தடை விதிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் ஒரு பரிந்துரையாக சொல்லப்பட்டுள்ளதே தவிர அதைக் கட்டாயம் அமைக்க வேண்டும் என்று கூற வில்லை, எனவே நடுவண் அரசு மேலாண்மை வாரியம் அமைக்கலாம் அல்லது அமைக்காமல் விட்டு விடலாம் என்றும் நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
நடுவண் அரசின் மேற்படி வாதங்கள் முற்றிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கும் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் 1956இல் கூறப்பட்டுள்ளதற்கும் நேர் எதிரானவையாகும்.
மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் 1956 இல் 11 ஆம் பிரிவு கூறுவது, ஒரு தண்ணீர் சிக்கல் தீர்ப்பாயத்திற்கு விடப்பட்டால் அதன் பிறகு அச்சிக்கலை தனி வழக்காக உச்ச நீதிமன்றமோ வேறு நீதிமன்றமோ விசாரிக்கக் கூடாது என்பது தான் மேற்படிச் சட்ட விதி 11 கூறுகிறது. இதன் பொருள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படிதான் செயல்பட வேண்டும் என்பதாகும். தீர்ப்பாயத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு இருக்கிறது. அத்தீர்ப்பை செயல்படுத்துமாறுதான் இந்திய அரசை தமிழ்நாடு அரசு கோருகிறது.
1956 சட்டத்தின் விதி 6(2) பின் வருமாறு கூறுகிறது: தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடுவண் அரசு தனது அரசிதழில் வெளியீட்டப்பின் அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குச் சமமாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் கடமையின் கீழ் நடுவண் அரசு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை இந்திய அரசு செயல்படுத்த மறுத்தால், அதை செயல்படுத்த வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தைத் தானே நாடவேண்டும். அப்படி நாடும்போது உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? ஒரு வேளை இப்போது உள்ள அரசமைப்புச் சட்டத்திற்கு நரேந்திரமோடி தன்விருப்பப்படி திருத்திக்கொண்டால் அந்த அதிகாரம் அவருடைய அரசுக்கு வந்து சேரலாம். இன்று அவர் அரசுக்கு அதிகாரம் இல்லை.
சட்டத்தில் உள்ள இச்செய்திகளை திரித்து இவ்வாறு நடுவண் அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறியது அவருடைய சொந்தக் கருதல்ல. ஏனெனில், 30.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் 04.10.2016-க்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிடும் என்று உறுதி கொடுத்தவர் இதே வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அவர்களே! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த உறுதியை சுட்டிக்காட்டி ரோத்தகியிடம் கேட்டபொழுது “அன்று நான் தவறு செய்துவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அரசு, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடுநிலையுடன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மாறாக பாகுபாடு காட்டி தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டது. எனவே தான் தனக்குள்ள சட்ட அறிவின்படி இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மூன்று நாட்களுக்கு முன் செயல்படுத்திடக் கொடுத்த உறுதிமொழியை பின்னர் மாற்றிக் கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அரசு எடுத்துள்ள இந்த அநீதியான நிலைபாடு காவிரி உரிமையைத் தமிழ்நாடு நிரந்தரமாக இழந்துவிட வேண்டும் என்ற முடிவில்தான் கொண்டு போய்விடும். தமிழ்நாட்டுக்கு எதிரான இந்த திட்டத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் நரேந்திரமோடி தனது அமைச்சரவையில் உள்ள அனந்தகுமார், சதானந்தகவுடா ஆகிய அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளார் என்பது இப்போது தெளிவாகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பும் உச்ச நீதிமன்றப் பாதுகாப்பும் தமிழ்நாட்டுக்குக் கிடையாது என்ற முரட்டுத்தனமான முடிவை நரேந்திரமோடி அரசு எடுத்துள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் சனநாயகப் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
அனைத்துக் கட்சிகளும் அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து வணிகர் அமைப்புகளும் மற்றும் அனைத்து மக்கள் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இந்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் போராட வேண்டும்.
குறைந்தது தமிழ்நாட்டில் நடுவண் அரசு அலுவலகங்கள் ஒரு வாரமாவது செயல்படாமல் முடக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மவுனம் காக்காமல் அரசியல் வழியிலும் சட்ட வழியிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்கவும் காவிரி நீர் சம்பா சாகுபடிக்கும் குடிநீருக்கும் கிடைக்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
நாளை (04.10.2016) நடைபெற உள்ள உச்சநீதிமன்ற விசாரணையை திசை திருப்புதவதற்காக கர்நாடக அரசு இன்று மாலை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதாக செய்தி வந்துள்ளது. இந்த ஏமாற்று வித்தைக்கு உச்சநீதிமன்றம் ஏமாந்துவிடக் கூடாது.
“காவிரி இல்லாமல் வாழ்வில்லை - களம் காணாமல் காவிரி இல்லை” என்ற வரலாற்று உண்மையை உணர்ந்து ஒன்றுபட்டுப் போராடுவோம் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment