உடனடிச்செய்திகள்

Sunday, January 27, 2019

அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 2019 சனவரி 22 முதல் வேலை நிறுத்தம் – மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுத்துறைத் தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைத்துத் பிரிவுத் தொழிலாளர்களும் 2004 முதல் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் செயல்படுத்தி வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்கள்.

தமிழ்நாடு அரசு 20 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அக்கம்பக்கத்து பள்ளிகளில் சேர்த்துவிடுவது என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனை ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் எதிர்த்து வருகிறார்கள்.

இப்போது நடைபெற்று வரும் அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தில் ஒன்பது கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கைகள் இவை இரண்டும் ஆகும்!

தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் டி. செயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசின் நிதிச்சுமையைக் காரணம் காட்டி, பழைய பென்சன் திட்டத்திற்கு செல்ல முடியாது என்று அறிவித்திருக்கிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டமென்பது, உலக வங்கியின் ஆலோசனைப்படி அமர்த்தப்பட்ட பட்டாச்சார்யா குழுவின் பரிந்துரைப்படி அறிவிக்கப்பட்ட திட்டமாகும். ஊழியர்களின் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரால் 2004-இல் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு முற்றிலும் விலகிக் கொள்ளும் அறிவிப்பாக அமைந்தது.

ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் ஊதியத்திலிருந்து 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு நிகரான அளவு அரசும் பங்களிப்பு வழங்கி, ஓய்வூதிய நிதி உருவாக்கப்படும் என்றும், இந்த ஓய்வூதிய நிதி தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பங்குச்சந்தையில் சுழலவிடப்படும் என்று இப்புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுகிறது.

உலக வங்கியின் அறிவுரைப்படி இதே போன்ற ஓய்வூதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நாடுகளிலெல்லாம் உழைப்பாளர்களின் ஓய்வூதிய நிதி பங்குச்சந்தை சூதாட்டத்தில் காணாமல் போய், தனியார் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் கைவிரித்த நிலையை உலகின் பல நாடுகள் கண்டன.

தமிழ்நாட்டில் செயல்படும் இத்திட்டத்தின்படி ஜப்பான், குவைத் போன்ற நாடுகளைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைக் கையாளுகின்றன. இந்நிறுவனங்கள் நுழைவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம், குறைந்தபட்ச இலாபம் என்ற பெயரால் ஒவ்வொரு ஊழியரின் ஓய்வூதிய நிதியிலிருந்து 50 விழுக்காடு வரையிலும் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இதற்கு மேலுமுள்ள ஓய்வூதிய நிதி பங்குச்சந்தையில் விடப்பட்டு அதில் இழப்பு ஏற்பட்டால், அதை முழுவதும் ஓய்வூதியதாரர்களே சுமக்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் என்பது, உழைப்பாளர்களின் உழைப்புத் திறன் தேய்மானத்திற்காக (Labour power Depreciation) வழங்கப்படும் நிதியாகும். இது அவர்கள் ஊதியத்தின் ஒருபகுதிதான்! இந்தக் கோட்பாட்டைக் கைவிடுவதுதான் புதிய ஓய்வூதியத் திட்டம்!

அநீதியான இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று போராடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோருவது முற்றிலும் ஞாயமானது!

அடுத்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை அமர்த்தி, அவற்றை வலுப்படுத்த வேண்டிய அரசு அப்பொறுப்பிலிருந்து விலகுவதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது குறைகிறது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு மாறாக, அதன் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் சீர்குலைப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது. இதுபோதாதென்று, இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்படும் ஆங்கில வழி எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. வகுப்புகளுக்குப் புதிதாக ஆசிரியர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே அவை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

தானே சீர்குலைத்துவிட்டு அதையே காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூட முயல்வது தமிழ்நாடு அரசின் அப்பட்டமான கல்வி மறுப்பு நடவடிக்கையாகும். போராடும் ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கை முற்றிலும் ஞாயமானது!

இதற்கு முன்னர் பல போராட்டங்ள் நடத்தியும், தமிழ்நாடு அரசு செவி சாய்க்காத நிலையில்தான் இப்போதைய போராட்டம் நடக்கிறது.

போராடும் ஆசிரியர் – அரசு ஊழியர்கள் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்துப் பேசித் தீர்க்கும் வழிமுறை காண்பதற்கு மாறாக, அவ்வமைப்புகளின் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், பணியிடை நீக்கம் செய்வதும் கொடும் அச்சுறுத்தலில் ஈடுபடுவதும் சனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

தமிழ்நாடு அரசு, தனது அடக்குமுறைகளையும் பேச்சு வார்த்தை மறுப்புப் போக்கையும் கைவிட்டு, போராடும் கூட்டமைப்புகளுடன் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு கண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT