உடனடிச்செய்திகள்

Tuesday, January 8, 2019

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசரமாக சிறப்புச்சட்டம் இயற்றுக! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசரமாக சிறப்புச்சட்டம் இயற்றுக! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடையில்லை என இன்று (08.01.2019) உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

உயிர்க்கொல்லி ஆலையாக விளங்கி, தூத்துக்குடி மக்களின் உயிரைப் பறித்து வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 மே மாதம் நடைபெற்ற எழுச்சிமிக்கப் போராட்டத்தின்போது, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதித்து ஆணைப் பிறப்பித்தது. இத்தடையை நீக்கக் கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த 15.12.2018 அன்று ஆலையைத் தொடர்ந்து இயக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையைத் திறக்க ஏற்பாடுகள் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பேராசிரியர் பாத்திமாபாபு தலைமையிலான ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, 2019 சனவரி 21 வரை ஆலையைத் திறக்கக் கூடாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இம்மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (08.01.2019) காலை தில்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க 2019 சனவரி 21 வரை தடை விதித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை நீக்கியும் ஆணையிட்டுள்ளது.

செம்பு தயாரிப்பதற்கு உயர் வெப்பத்தில் சால்க்கோசைட், சால்க்கோ பைரைட் போன்ற செம்புத் தாதுக்களை உருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஆலைகளை தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து, சட்டம் இயற்றினால்தான் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைத் திறக்க நிரந்தரத் தடை விதிக்க முடியும்! இதற்கேற்ப, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து, ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் தொழில்நுட்பத்தையும் அபாயகரமானவை எனப் பட்டியலிட வேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர – அவசியக் கடமையாகும்!

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் நீக்கி ஆணையிட்ட போது, அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதன் விளைவாக, இந்திய அரசு தானே ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது.

அதுபோல், தற்போது தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென ஓரணியில் நின்று வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக கொள்கை முடிவெடுத்து, நடைபெற்றுக் கொண்டுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச்சட்டம் பிறப்பிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT