உடனடிச்செய்திகள்

Monday, January 28, 2019

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!
கடந்த 2008 - 2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ மக்களுக்கெதிரான, சிங்கள – இந்தியக் கூட்டரசுகள் நடத்திய இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரி, சனவரி 29 – 2009 அன்று காலை, சென்னை நுங்கம்பாக்கம் இந்திய அரசு வருமானவரி அலுவலகம் முன்பு தன்னையே எரித்துத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி, தமிழீழ விடுதலைக்காக உயிர் ஈந்த ஈகியருக்கு ஆண்டுதோறும் சனவரி 29 அன்று வீரவணக்கம் செலுத்தப்படுகின்றது. ஈகியரின் பத்தாம் ஆண்டு (2009 – 2019) வீரவணக்க நிகழ்வுகள் தமிழகமெங்கும் இவ்வாண்டு எழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் எழுப்பியுள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலைக்கு, நாளை (29.01.2019) காலை 10.30 மணிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் மலர் மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து, பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர். ஈகி முத்துக்குமார் சிலை அமைக்க தனது நிலத்தைக் கொடையாக வழங்கிய புலவர் இரத்தினவேலவர் அவர்களது ஏற்பாட்டில், நாளை பிற்பகல் முத்துக்குமார் சிலைக்கு வீரவணக்கம் செலுத்த வருவோர்க்கு, அங்கு மதிய உணவு அளிக்கப்படுகின்றது.

சென்னை

சென்னையில், தழல் ஈகி முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்தே அதே இடத்தில் “வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு” சார்பில், முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவுத் தூண் எழுப்பப்பட்டு வருகின்றது. அத்தூணுக்கு பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்துகின்றனர். நாளை காலை 10 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையிலான பேரியக்கத் தோழர்கள் அங்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

முருகன்குடி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் - முருகன்குடியில் மாலை 5 மணிக்கு, பேருந்து நிலையம் அருகில் தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியரின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகின்றது.

அரியலூர் 

அரியலூர் மாவட்டம், மேலமைக்கேல்பட்டி மாரியம்மன் கோவில் அருகில், காலை 8 மணிக்கு, தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியரின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்நிகழ்வுகளில் தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT