உடனடிச்செய்திகள்

Tuesday, June 11, 2019

கடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” - தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!

கடலில் தூக்கி வீச வேண்டிய
“புதிய கல்விக் கொள்கை – 2019”
கி. வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.




ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, அதற்கேற்ப இந்திய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பது என்ற இந்திய அரசின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டிருப்பதுதான் 484 பக்கங்கள் உள்ள முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” ஆகும்.

பண்பாட்டு மொழி என்ற வகையில் சமற்கிருதத்தை பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, எல்லா நிலைகளிலும் இந்தியைத் திணிப்பது, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பன்னாட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கடைவிரிக்க ஏற்பாடு செய்வது, பொது அதிகாரப் பட்டியல் என்ற பெயரால் கல்வித் துறையில் கொஞ்சநஞ்சமிருந்த மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலுமாகத் துடைத்து அழிப்பது, கல்வியின் அனைத்து நிலைகளையும் இந்திய அரசின் கைகளில் சேர்ப்பது ஆகியவற்றுக்கான பரிந்துரைகள்தான் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இல் உள்ளது.

ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.-இன் ஒரு பிரிவான “வித்தியா பாரதி அனைத்திந்திய பள்ளிக் கல்வி அமைப்பு (அகில் பாரதீய சிக்ஷா சன்ஸ்தன்)” நடத்தி வரும் குருகுலங்கள் மற்றும் பள்ளிகள் சமற்கிருதத் திணிப்பு நிறுவனங்களாகவும், ஆரியப் பிராமணியப் பண்பாட்டுப் பரப்பலுக்கான அமைப்புகளாகவும் இருப்பதை நாடு அறியும்.

மதங்களைப் பரப்புவதற்காக அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையை தவறாகப் பயன்படுத்தி, இவற்றை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. இவற்றுள் சில பள்ளிகளில் வழக்கமான பள்ளிகளில் சொல்லித் தரப்படும் கல்வி அளிக்கப்படுவதால் ஏற்கெனவே சட்டத்திலுள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தி முறையான பள்ளிகள் போல இவை அங்கீகாரம் பெற்றிருக்கின்றன.

இவற்றை மிகப்பெரும் அளவுக்குப் பரவலாக்குவதற்கு வகை செய்யும் முறையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வித்தியா பாரதியின் இந்நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கு கஸ்தூரிரெங்கன் குழுவின் வரைவு ஏற்பாடு செய்கிறது. (வரைவின் பத்தி 3.12).

நாளைக்கு மோடி ஆட்சி போய் எந்த ஆட்சி வந்தாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் பாசறைகள் அரசாங்க அங்கீகாரத்தோடு தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடு இது!

இது எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் செய்யப்படுகிறது என்று தோற்றம் காட்டுவதற்காக மதராசாக்களையும் கல்விச் சட்டத்தின் கீழ் கொண்டு வர இந்த வரைவு பரிந்துரை வழங்குகிறது. நடைமுறையில் கடும் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இசுலாமிய மதக் கல்விக் கூடங்களான மதரசாக்கள் மாற்றப்படும் என்பதே உண்மை!

“இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கு உரிய மொழி” என்று சமற்கிருதத்தை இந்தக் கல்விக் கொள்கை கட்டாயமாக்குகிறது. (4.5.14).

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்தி, ஆங்கிலத்துக்கு மேல்  மூன்றாவது மொழியாக சமற்கிருதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசாத மாநிலத்தவர் எட்டாம் வகுப்பிலிருந்து விருப்ப மொழியாக – நான்காவது மொழியாக சமற்கிருதத்தை எடுத்துப் படிக்கலாம் என்றும் இந்த வரைவு கூறுகிறது.

சமற்கிருதம் என்பது எந்தக்காலத்திலும் பிற மொழிகளின் வளர்ச்சிக்குப் பயன்பட்டதில்லை. அது ஒரு சேர்ந்தாரைக் கொல்லி! பிற மொழிகளை சிதைத்து, திரித்ததுதான் வரலாறு நெடுகிலும் சமற்கிருதம் செய்த பணியாகும். ஆனால், அந்த சமற்கிருதமும் எந்த தேசிய இனத்திற்கும் தாய்மொழி இல்லை! பழைய ஆரிய இனத்தின் ஆதிக்க மொழியாக இருந்து கொண்டு, எல்லாவற்றிலும் ஆதிக்கம் செய்வது – எல்லா மொழிகளையும் திரிப்பது என்பதைத்தான் சமற்கிருதம் செய்து வருகிறது. சமற்கிருதத்தின் மூலமாகப் பரப்பப்படுவது பெரிதும் ஆரிய பிராமணிய ஆதிக்கப் பண்பாடாகும்; வர்ணசாதிக் கொள்கையாகும்! சமற்கிருதம் பண்பாட்டு அழிப்பு மொழியே தவிர, சமத்துவப் பண்பாட்டு மொழியாக நடைமுறையில் இருந்ததில்லை.

மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு சமற்கிருதம் வரலாறு நெடுகிலும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறது என்று பாராட்டும் இந்தக் கொள்கை வரைவு “இந்தியாவின் செம்மொழிகள்” என்ற பட்டியலில் மிகத் தனித்த உயர்ந்த இடத்தை சமற்கிருதத்திற்கு வழங்குகிறது. போனால் போகிறது என்ற வகையில் பிற செம்மொழிகள் என்ற முறையில் தமிழையும் ஒரு ஓரத்தில் குறித்துச் செல்கிறது.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் இந்தக் கல்விக் கொள்கை வரைவு வெளிப்படையாக இந்தியைத் திணிக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கல்வியாளர்களும் இதனை எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்த பிறகு, கர்நாடகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதற்குப் பிறகு பின் வாங்குவதுபோல் தோற்றம் காட்டி, இந்த வரைவின் பத்தி 4.5.9-க்கு ஒரு திருத்தத்தை முன்வைத்து இந்தித் திணிப்பைக் கைவிட்டுவிட்டதாக நாடகமாடியது.

விழிப்புணர்வற்ற தமிழ்நாட்டுக் கட்சிகள் பலவும் இந்தித் திணிப்பு கைவிடப்பட்டதாக “வெற்றி” அறிக்கைகள் வெளியிட்டார்கள். ஆனால், உண்மையில் எந்த மாற்றமும் இல்லை! சொற்களில் மட்டுமே மாற்றம்.

மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றை விருப்பப் பாடமாக எடுப்பதும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றைக் கட்டாயமாகக் கற்பதும் திருத்தப்பட்ட வரைவிலும் (புதிய பத்தி 4.5.9) வலியுறுத்தப்பட்டது. முற்றிலும் இந்தியைக் கட்டாய மொழியாகக் கற்பிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சூழ்ந்திருக்கும் போது, இந்தி படித்தால் இந்தியா முழுவதற்கும் வேலை கிடைக்கும் என்ற பரப்புரை வலுவாக இருக்கிற சூழலில், மூன்றாவது கட்டாய மொழியாக தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியைத் தான் எடுக்க நேரிடும்.

பள்ளி நிர்வாகங்களும் மூன்றாவது கட்டாய மொழியாக வெவ்வேறு மொழிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்தால் அதற்கு ஆசிரியர்களை அமர்த்துவது செலவு பிடிக்கும் என்பதால் இந்தியை மூன்றாவது மொழியாக வலியுறுத்துவார்கள். இந்த நிலையில், கட்டாய மூன்றாவது மொழியாக இந்தியே இருக்கும்! மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியைத் திணிப்பதற்கான கொள்கைதான்! அதுதான் செயலுக்கு வரும்.

இரண்டாவது மொழியாகவே ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை ஏற்கலாம் என்பதற்கான வாதங்களையும் இந்த 2019 கல்விக் கொள்கை வரைவு கொண்டிருக்கிறது. இதை ஏற்கச் செய்வதற்காக பொய்யான புள்ளி விவரங்களைக் கூறுகிறது.

இந்தி பேசும் இனத்தவர் இந்திய மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் என்று கூறுகிறது. ஆனால் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தி பேசும் இனத்தவர் 43 விழுக்காட்டினர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் இந்த தொகையினர் அனைவரும் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இல்லை! 5 கோடிப் பேருக்கு மேல் போஜ்புரியைத் தாய் மொழியாகக் கொண்டு வாழ்கிறார்கள். அதுபோல், மைத்திலி, அவத்தி, மகந்தி, ராஜஸ்தானி போன்ற கிட்டத்தட்ட 80 மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டோர் பல கோடி பேர் வாழ்கிறார்கள்.

இவற்றுள் போஜ்புரி, மைத்திலி போன்ற பல மொழிகள் சாகித்திய அகாதமி அங்கீகாரம் பெற்ற இலக்கிய வளமிக்க தனித்த கலை வடிவங்கள் கொண்ட பழங்கால மொழிகளாகும். இந்த மொழி பேசும் பலகோடி பேர் மீது கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இந்தித் திணிக்கப்பட்டதால் நாளடைவில் இவர்களிடையே பொது மொழியாக இந்திப் புழங்குகிறது.

இந்த வகையில்தான் இந்தி பேசும் இனம் ஒரு மொசைக் இனமாக உருவெடுத்து வருகிறது. மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தி மொழித் திணிக்கப்படுவது வெறும் மொழித் திணிப்பு அல்ல – இந்தி பேசும் இனத்தவரின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் இன ஆதிக்க முயற்சியாகும்! தமிழினத்தையும் இந்தியை ஏற்காத பிற இனங்களையும் நிரந்தர அடிமைகளாக வைப்பதற்கான கல்வித் திட்டமாகும்.

இந்த ஆழத்தைத் தமிழ்நாட்டுக் கட்சிகள் புரிந்து கொள்ள முயலவில்லை. மாறாக, இக்கட்சிகளின் உயர்மட்டப் புள்ளிகள் இந்த இந்தித் திணிப்பிற்கு துணை செய்து பள்ளி முதலாளிகளாக பணம் பார்ப்பதிலேதான் கவனமாக இருக்கிறார்கள்.

இந்தியாவின் இருபெரும் இசைகள் என்ற பெயரில் கர்நாடக இசையையும், இந்துஸ்தானி இசையையும் மட்டுமே வகைப்படுத்தும் இக்கல்விக் கொள்கை (4.6.2.1), தமிழிசை என்ற மாபெரும் இசை வகையை – அதன் தனித்த மரபை கண்டு கொள்ளவே இல்லை! சிறு சிறு பழங்குடி இனக்குழுக்களின் கலைகளோடு ஒன்றாக “பிற” (Others) என்று புறந்தள்ளுகிறது.

பள்ளிகளில் “கவின் கலை” என்ற வகையில் இசை, ஓவியம் போன்றவை பாடமாகக் கற்பிக்கப்படுவதை வலியுறுத்தும்போது கர்நாடக இசையையும் இந்துஸ்தானி இசையையும் இந்தக் கொள்கை வரைவு வலியுறுத்துகிறது.

இசைக் கலையை ஆரிய மற்றும் வடஇந்தியமயமாக்க பள்ளிக் கல்வியிலிருந்தே ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுவரை பள்ளிக் கல்வியில் புறக்கணிக்கப்பட்டிருக்கிற இசை, ஓவியம், கைவினைக் கலைகள் போன்றவற்றை ஊக்குவிப்பது தேவைதான்! ஆனால், அதன் போக்கில் ஆரிய – இந்திய ஒற்றைத் தன்மையை திணிப்பதை ஏற்க முடியாது!

இதுவரை முறையான பள்ளிக் கல்வி என்பது 1ஆம் வகுப்பிலிருந்துதான் தொடங்கியது. கஸ்தூரிரெங்கன் குழு முன்வைத்துள்ள இந்தக் கொள்கை வரைவு, மழலையர் பள்ளியிலிருந்தே பள்ளிக் கல்வி தொடங்குவதாக வரையறுக்கிறது.

ஏற்கெனவே 10 + 2 என்ற பள்ளிக் கல்வியின் பொது வகைப் பிரிவினைக்குள் 5 + 3 + 2 + 2 வருகிறது. இதனை மாற்றி, இந்தக் கல்விக் கொள்கை 5 + 3 + 3 + 4 என்பதாக புதிதாகப் பிரிக்கிறது. முன் மழலைக் கல்வி(Pre KG)யிலிருந்தே, பள்ளிக் கல்வி தொடங்குவதாக இக்கல்விக் கொள்கை வரையறுக்கிறது. முன் மழலைப் படிப்பிலிருந்து 2ஆம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி (Foundation) என்றும், அதன் பிறகு 3, 4, 5ஆம் வகுப்புகள் “தொடக்கநிலைக் கல்வி” என்றும், 6, 7, 8 வகுப்புகள் “இடைநிலைக் கல்வி” என்றும், 9, 10 “உயர்நிலைக் கல்வி
 என்றும், 11, 12 “மேல்நிலைக் கல்வி” என்றும் பிரிக்கப்படுகிறது.

அதற்கேற்றாற்போல் அங்கன்வாடி, குழந்தைகள் காப்பகம் போன்றவற்றை சமூக நலத்துறையிலிருந்து கல்வித்துறைக்கு மாற்றக் கோருகிறது.

இந்த முன் மழலை (Pre KG) வகுப்பிலிருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, உயராய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் “தேசியக் கல்வி ஆணையம்” (National Education Commission – ராஷ்ட்டிரிய சிக்ஷா ஆயோக் – Rashtriya Shiksha Aayoug – RSA) என்ற அதிகாரக் கட்டமைப்பின் கீழ் இந்தக் கல்விக் கொள்கை கொண்டு செல்கிறது (23.1).

மழலையர் பள்ளியிலிருந்து உயராய்வு மையம் வரை நிர்வாகம் செய்யும் இந்த உயரதிகார நிறுவனத்திற்கு இந்தியத் தலைமையமைச்சர் தலைவராக இருப்பார். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் துணைத் தலைவராக இருப்பார். இந்த தேசியக் கல்வி ஆணையம்தான் கல்வி குறித்த அனைத்தையும் முடிவு செய்யும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதலமைச்சர் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு இருந்தாலும், அது தேசியக் கல்வி ஆணையத்தின் முகவாண்மை அமைப்பாக (ஏஜென்சி) மட்டுமே செயல்படும்! (8.1.3).

பொது அதிகாரப் பட்டியல் என்ற வகையில் பள்ளிக் கல்வி அளவிலாவது மாநில அரசின் அதிகாரங்கள் பெருமளவு செயல்பட்டன. இனி, அதுவும் கிடையாது! மழலையர் கல்வியிலிருந்தே எல்லா கல்வி நிறுவனங்களையும் ஆதிக்கம் செய்யும் அமைப்பாக அனைத்திந்திய அமைப்பான தேசியக் கல்வி ஆணையம் செயல்படும்.

மாநில அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வித்துறை அவசரநிலைக் காலத்தில், இந்திரா காந்தி ஆட்சியின்போது, இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன்படி கல்வி தொடர்பாக மாநில அரசு சட்டமியற்ற அதிகாரமுண்டு. ஆயினும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்குத்தான்!

கல்வி தொடர்பான மாநில அரசின் சட்டம் இந்திய அரசின் கல்விச் சட்டத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்குமானால், மாநில அரசின் சட்டம் செயல்படாது. இந்திய அரசின் சட்டமே நிலைபெறும்! இதுதான் பொது அதிகாரப் பட்டியல் என்பதன் உண்மைநிலை!

இப்போது நரேந்திர மோடி ஆட்சி, கல்வித்துறை முழுவதையும் இந்திய அரசின் முற்றதிகாரத்திற்குக் கொண்டு செல்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமலேயே நடைமுறையில், இந்திய அரசின் நடுவண் அதிகாரப் பட்டியலுக்குக் “கல்வி” கொண்டு செல்லப்படுகிறது. கஸ்தூரிரெங்கன் கல்விக் கொள்கை வரைவு அத்தியாயம் 23 முழுவதும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

மழலையர் கல்வியிலிருந்து உயராய்வுக் கல்வி வரை கல்வித்துறையின் அனைத்து நிலையிலும், கொள்கைகள் – சட்டத்திட்டங்கள் ஆகியவற்றை வகுப்பது இந்த “தேசியக் கல்வி ஆணையத்தின்” அதிகாரத்திற்கு உட்பட்டது. மாநில அரசு இதன் கொள்கைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர வேறு பணி எதுவும் அதற்குக் கிடையாது என்று திட்டவட்டமாக அத்தியாயம் 23 தெளிவுபடுத்துகிறது.

அதற்குத் தகுந்தாற்போல், இந்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறையை கல்வித்துறை என்பதாக (Ministry of Education) பெயர் மாற்றம் செய்து பரிந்துரைக்கிறது. இது வெறும் பெயர் மாற்றமல்ல – நேரடியாகக் கல்வித்துறை அதிகாரத்தை இந்திய அரசு கையிலெடுத்துக் கொள்ளும் அறிவிப்பாகும்!

மாநில அளவில் பள்ளிக் கல்வியை ஒழுங்கு செய்ய ஒரு “மாநிலக் கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (State School Regulatory Authority) என்ற ஒன்று அமைய வேண்டுமென்றும், ஆனால் அதற்கென்று எந்த தனித்த அதிகாரமும் இல்லை என்றும் அது தேசியக் கல்வி ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்தும் அமைப்பு என்றும் இந்த தேசியக் கல்விக் கொள்கை அடித்துக் கூறுகிறது (பத்தி 8.1.3).

கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் தில்லியில் இந்திய அரசு ஒன்று குவிக்க தேசியக் கல்வி ஆணையத்தின் கீழ் “தேசியத் தேர்வு முகமை” (National Testing Agency), “தேசிய உயர்க்கல்வி ஒழுங்காற்று ஆணையம்”, “பொதுக்கல்விக் குழு” (General Education Council), “உயர்கல்வி நல்கைக் குழு” (Higher Education Grants Commission), “தேசிய ஆய்வு நிறுவனம்” (National Research Foundation) ஆகிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இவற்றின் மூலம் கல்வியின் அனைத்து நிலைகளும் இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ் எடுத்துச் செல்லப்பட்டு எல்லாவற்றிலும் அனைத்திந்தியத்தன்மை என்ற பெயரால் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு வழிசெய்யப்படுகிறது.

பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி, தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வுதான் உண்டு என்றும், அதற்கு தேசிய தேர்வு முகமை (National Testing Agency – NTA) உருவாக்கப்படுவதாகவும் இந்தக் கல்விக் கொள்கை வரையறுக்கிறது. (பத்தி 4.9.6).

இனி, பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., டிப்ளமோ படிப்புகள் தொடங்கி மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வுதான் நடத்தப்படும். அதையும் இந்திய அரசின் தேர்வு முகமைதான் நடத்தும். இது கல்வியின் தரத்தை உயர்த்தப்போவதில்லை; சீராக்கப்போவதுமில்லை! மாறாக, தமிழ்நாட்டில் கிராமப்புற கல்லூரிகளிலிருந்து உயர்கல்வி வரையிலும் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்புக்கே வழி ஏற்படுத்தும்! மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வே இதற்கொரு சான்று!

இந்த ஆண்டு (2019), நீட் தேர்வில் தேர்வு பெற்ற பெரும்பாலோர் மேல்நிலை வகுப்பில், +2வில் மிகச் சராசரி மதிப்பெண் பெற்றவர்கள்தான். பல இலட்சம் ரூபாய் அளித்து இரண்டு ஆண்டுகளும் நீட் தேர்வுக்காக தனிப்பயிற்சி எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள்!

கல்லூரிக் கல்விக்கு மாணவர்களை தகுதிப்படுத்தும் மேனிலை வகுப்பின் இரண்டு ஆண்டு படிப்பையும் புறக்கணித்த அவர்களிடம் என்ன அடிப்படை அறிவை எதிர்பார்க்க முடியும்? இப்படிப்பட்டவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிற மருத்துவப் பட்டம் என்ன தகுதியை வெளிப்படுத்தும்? உண்மையில் மருத்துவப் படிப்பின் தரத்தைத் தாழ்த்துவதற்குத்தான் “நீட்” பயன்படுகிறதே தவிர, உயர்த்துவதற்கோ சீர்படுத்துவதற்கோ பயன்படுவதில்லை.

இவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து படித்து, நீட் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், பல இலட்சம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இந்தியா முழுவதும் சில ஆயிரம் இடங்கள்தான் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் அனைத்திந்திய ரேங்க் பட்டியலில் இருக்குமிட எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல ரேங்க் வரிசையில் இடம்பெறுவோர் மட்டுமே இப்படிப்புகளில் சேர முடியும்.

எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு (2019) நீட் தேர்வு எழுதிய 14.10 இலட்சம் பேரில் 7.04 இலட்சம்பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 36,165 இடங்களும் என மொத்தம் 66 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 30 ஆயிரம் ரேங்க் வரை உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அடுத்து 36 ஆயிரம் பேர் அடுத்த ரேங்க் வரிசைப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதியுள்ள 6 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இடம் கிடையாது! அவர்கள் செலவு செய்த பல இலட்சம் ரூபாயும் வீண்தான்!

நாம் தொடர்ந்து சொல்லி வருவதைப் போல், நீட் தேர்வு என்பது முதன்மையாக இன அநீதியாகும்! அடுத்தநிலையில்தான் சமூக அநீதி!

இந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,947 எம்.பி.பி.எஸ். மற்றும் 985 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்திந்திய தேர்வான நீட் வழியாகத் தேர்வு செய்யப்படும்போது, கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒன்றாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் எளிதில் இடம் பெற்று விடுவார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பயிற்சி பெற்ற பலர் உட்பட புறக்கணிக்கப்படுவார்கள். உயர்கல்வியில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது!  

ஒரு நீட் தேர்வுக்கே இந்த நிலை என்றால், பி.ஏ.,பி.எஸ்சி. உட்பட அனைத்துப் படிப்பிற்கும் புதிய கல்விக் கொள்கை சொல்லும் “தேசியத் தேர்வு முகமை”யின் அனைத்திந்தியத் தேர்வு என்றால், இங்கு உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தகுதியுள்ள தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளி மாநிலத்து மாணவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்.

கல்வி தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் இந்திய அரசின் கைகளுக்குச் செல்வதென்பது, வெறும் அதிகாரப் பகிர்வு குறித்த சிக்கல் அல்ல – தேசிய இனச்சிக்கல் ஆகும்! தமிழினத்தின் மீதான இந்தி இன ஆதிக்கம் ஆகும்!

பள்ளிக்கல்வியில் தாய்மொழிவழிக் கல்வியை இந்த வரைவுக் கொள்கை வலியுறுத்துவதால், சி.பி.எஸ்.இ. பள்ளிகளே இனி இருக்காது என மிகத்தவறாக சிலர் கருதுகிறார்கள். உண்மை நிலை என்னவென்றால், இனி எல்லா பள்ளிகளுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகள்தான்! பெயருக்கு “மாநில வாரியப் பள்ளிகள்” என்று பெயர் ஒட்டி இருந்தாலும், அவை அனைத்தும் இந்திய அரசு முன்வைக்கும் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டியவைதான். இந்திய அரசின் தேசியக் கல்வி ஆணையத்தின் முற்றதிகாரத்திற்கு பள்ளிக்கல்வி சென்றதற்குப் பிறகு, இங்கு மருந்துக்குக்கூட இருமொழிக் கொள்கை இருக்காது! எல்லாப் பள்ளிகளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும். தமிழ்நாடு அரசு “எங்கள் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்” என்று முனகிக் கொண்டிருக்கலாமே தவிர, அதை செயல்படுத்தும் அதிகாரம் பறிக்கப்படுகிறது. மாநில வாரியப் பள்ளிகளும் இனி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியான பள்ளிகள்தான். உண்மையில் சி.பி.எஸ்.இ. ஒழிக்கப்படவில்லை; விரிவுபடுத்தப்படுகிறது.

இந்தி பேசும் இன மக்களின் ஆக்கிரமிப்பையும், அதற்குத் தேவையான இந்திய அரசின் அதிகாரக் குவிப்பையும் உறுதிப்படுத்தும் அடுத்தடுத்த ஏற்பாடாக பலவற்றை கல்விக் கொள்கை வரைவு சொல்லிச் செல்கிறது.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு இப்போதுள்ள நீட் தேர்வு மட்டும் போதாதாம்! எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற படிப்புகளின் இறுதித் தேர்வை அனைத்திந்தியத் தேர்வாக நடத்துவார்களாம். அதில் தேறுவோருக்குத்தான் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பட்டங்கள் வழங்கப்படும்! மருத்துவ மேல் படிப்புக்கும் அதுவே தகுதித் தேர்வாக அமையும். (பத்தி 16.8.3).

இந்திய அரசின் முற்றதிகாரத்தை கல்லூரி – பல்கலைக்கழகக் கல்வியில் நிலை நிறுத்துவதற்காக “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (National Higher Educational Regulatory Authority – NHERA) என்ற ஒன்றை இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. (பத்தி 18.1.2).

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு தொடங்கி மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, சட்டக் கல்வி, ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்கல்வி ஆகிய அனைத்தும் இந்த புதிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

இதுவரை உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI), அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி ஆணையம் (AITCE), இந்திய பார் கவுன்சில், தேசிய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் (NCTE) ஆகியவை தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கும் மதியுரை அமைப்பாக மாறிவிடும்.

இந்த தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்தும் அமைப்பாக மாநில உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் என்ற ஒன்று நிறுவப்படும் எனக் கூறும் கல்விக் கொள்கை, இந்த மாநில ஆணையத்திற்கு தனித்து  முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது. (18.4.2).

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இனி மாநில அரசுக்கு இல்லை! அதுமட்டுமல்ல, அதன் பாடத்திட்டத்திலும் மாநில அரசு தலையிட முடியாது. அதற்கென்று “பொதுக் கல்விக் குழு” (General Education Council) என்ற ஒன்று நிறுவப்படுமாம் (18.3.2).

இந்தப் பொதுக் கல்விக் குழு, கல்லூரிப் பாடத்திட்டத்தை மட்டுமல்ல பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் படைத்தது. மாநில அரசின் கல்வி அமைச்சகத்திடம் இந்த பொதுக் கல்விக் குழு கருத்துக் கேட்கும்; அவ்வளவே!

இதற்கு மேல் ஆராய்ச்சிப் படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக “தேசிய ஆய்வு நிறுவனம்” (National Research Foundation) என்ற ஒன்று அமைக்கப்படும் என இந்த வரைவுக் கொள்கை கூறுகிறது (9.6).

இனி, இளம் ஆய்வுப் படிப்பு (எம்.பில்) என்பது கிடையாதாம்! ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.), மேல் ஆராய்ச்சிப் படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டாம்! இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது இந்த தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணியாம்.

மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், உயராய்வு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அங்கீகாரம் வழங்கும் முற்றதிகாரம் இந்த தேசிய ஆய்வு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. மாநில அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை! (10.9).

இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் தனியார் பல்கலைக்கழகம், அரசுப் பல்கலைக்கழகம் என்ற வேறுபாடு இனி இல்லை! தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எல்லாம், இனி பல்கலைக்கழகம் என்ற முழு அங்கீகாரம் பெற்றுவிடும்.

கல்விக் கொள்கையின் வரைவு 12இன் பல்வேறு பத்திகளில் இவை விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தனியார் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு கூட்டு வைத்துக் கொண்டு “கல்வித் தொழில்” செய்யலாம்  (12.4.3).

இதுமட்டுமின்றி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை இந்தியாவிற்குள் கடைவிரிக்கலாம். (12.4.11).

மொத்தத்தில், கஸ்தூரிரெங்கன் குழு முன்வைத்துள்ள இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2019” தூக்கிவீசப்பட வேண்டிய ஆதிக்க அறிக்கையாகும்!

இதில், எவ்வளவு திருத்தங்கள் செய்தாலும் அது சமற்கிருத ஆதிக்கத்தையோ இந்தி இன ஆதிக்கத்தையோ தனியார்மயத்தையோ அதிகாரக் குவிப்பையோ வெளியார்மயத்தையோ நிறுத்துவதற்குப் பயன்படாது! மிகவும் முயன்றால், ஆதிக்கத்தின் – ஆக்கிரமிப்பின் அளவைக் கொஞ்சம் மட்டுப்படுத்தலாம்! அதற்கு மேல் ஒன்றும் முடியாது! 

எனவே, இந்திய அரசு வெளியிட்டுள்ள கஸ்தூரிரெங்கன் குழுவின் தேசியக் கல்விக் கொள்கை வரைவை முற்றிலும் நிராகரித்து கல்வி தொடர்பான அதிகாரத்தை மாநில அரசு மீளப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமே மாநில அரசின் முன் உள்ள பணியாகும்!

முன்வைக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கையின் ஆபத்தை வெவ்வேறு அளவுகளில் புரிந்து கொண்டு எதிர்த்து வரும் கர்நாடகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, இந்திய அரசின் இந்த வரைவுக் கொள்கையை எதிர்ப்பதோடு கல்வி அதிகாரத்தை மாநில அரசுக்குத் திரும்பத் தர இறுதியான – உறுதியான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள பள்ளி ஆசிரியர் இயக்கங்கள், கல்லூரி ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக ஆய்வாளர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் “கஸ்தூரிரெங்கன் குழுவின் கல்விக் கொள்கை வரைவு – 2019ஐ திரும்பப் பெறு! கல்வியை மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டு வா!” என்று ஒருமித்து முழங்க வேண்டும்.

திருத்தங்கள் செய்வது என்பது, தமிழினத்தின் மீதான - தமிழ்நாட்டு மாணவர்கள் மீதான இன ஆதிக்கத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தி ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும்!

மோடி அரசு முன்வைத்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019”ஐ கடலில் தூக்கி வீசுவோம்! கல்வி அதிகாரத்தை மீட்கப் போராடுவோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT