உடனடிச்செய்திகள்

Friday, June 7, 2019

அரசியல் ஒருங்கிணைப்பு அவரசத் தேவை! தோழர் கி. வெங்கட்ராமன்.

அரசியல் ஒருங்கிணைப்பு அவரசத் தேவை! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
மக்கள் இயக்கத்தவரும், சனநாயகத்தில் பற்றுள்ள பலரும் அதிர்ச்சியடையும் வகையில் முன்பைவிட அதிகப் பெரும்பான்மையில் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய சனதா கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்துள்ளது. விரைவில் மாநிலங் களவையிலும் பா.ச.க. பெரும்பான்மை பெற்றுவிடும்.

செல்லா நோட்டு அறிவிப்பு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.), சனநாயக உரிமைப் பறிப்பு போன்றவை நிகழ்ந்தாலும், அவற்றைவிட ஆரியத்துவ இந்தியத் தேசியத்தின் மீது மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டிருப்பதால், மோடிக்கு இந்த பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

வட மாநிலங்களைச் சேர்ந்த இந்தி தேசிய இன மக்கள், தங்களது இந்திப் பேரரசுக்கு வந்துள்ள ஆபத்திலிருந்து பாதுகாப்பதில் முரணற்ற உறுதியான தலைமையாக பா.ச.க.வின் மோடியை கருதிக்கொண்டார்கள். இந்த இந்தி மாநிலங்களும் வெவ்வேறு அளவுகளில் ஆரியமயமாகிப் போன - சமற்கிருத மேலாதிக்கத்திற்கு உள்ளான பிற மாநில மக்களில் கணிசமானோரும் இதே உளவியலுக்கு ஆட்பட்டிருந்தனர்.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை தொடரும் என்று பாரதிய சனதா அமைச்சர் நிதின் கட்கரி கொக்கரித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதுதான் ஐட்ரோகார்பன் திட்டங்கள் அடுத்தடுத்து நகர்த்தப் பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் பா.ச.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இருந்த நேரத்தில் தான், மதுரை தமிழன்னை சிலையை ஆரிய சமற்கிருத வடிவத்தில் பளிங்கும் பைபரும் கலந்த பொருளில் நிறுவவேண்டும் என்று பா.ச.க.வின் அடிமை எடப்பாடி அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

ஆரியத்துவ இனவாதத்திற்கும் தமிழ்நாட்டின் மீதான வளச்சுரண்டல் மற்றும் தமிழ்நாடு புறக்கணிப்பிற்கும் உள்ள இணைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழில் முதலாளியம், அதன் பிறப்பிலிருந்தே தன்னுடைய சந்தை வேட்டைக்கும் வளச் சுரண்டலுக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் இன உணர்வின் துணையோடு தான் இயங்கியது.

“பிறப்பிலிருந்தே முதலாளியமானது இனவாத முதலாளியமாகவே (Racial Capitalism) இருந்தது” என பிரடெரிக் ஜே. இராபின்சான் என்ற ஆய்வாளர் கூறுவது கவனிக்கத்தக்கது. (காண்க : Black Marxism).

தங்களது இந்திப் பேரரசைக் கட்டமைப்பதற்கான திட்டங்களாக கருதுவதால்தான், பெரும் எண்ணிக்கையிலான வடநாட்டு மக்கள் இந்திய அரசின் சுரண்டல் திட்டங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.

“மனிதர்கள் மனத்தால் ஆனவர்கள்” என்றார் இத்தாலியப் பொதுவுடைமைத் தலைவர் கிராம்சி. இந்த உண்மையை பொதுவுடைமைவாதிகளும் புரிந்து கொள்ள வில்லை, மக்கள் இயக்கத்தவரும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், ஆதிக்கவாதிகள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோளாறு இருப்பதால்தான், மக்கள் உரிமைப் போராட்டத்தில் முதல் வரிசையில் இருக்கும் தமிழ்நாடு பேரெழுச்சி கொள்ள முடியாமல் தவிக்கிறது.

ஏற்கெனவே வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி.யின் ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு சூழலியல் தாக்க அறிக்கையை அணியப்படுத்துவது என்ற வகையில், செயல் திட்டங்கள் தொடங்கிவிட்டன. காங்கிரசு கட்சி ஆண்டபோது தொடங்கப்பட்ட சமற்கிருதத் திணிப்பு – இந்தித்திணிப்பு பா.ச.க. ஆட்சியில் தீவிரம் பெற்றுள்ளன.

தொடர்வண்டி நிலையங்களில் இனி ஆங்கிலம் இந்தியில் மட்டும்தான் அறிவிப்புகள் இருக்கும், தமிழில் இருக்காது என்ற செய்தி கசியவிடப்பட்டு விவாதத்தில் இருக்கிறது. மோடி கூடுதல் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ள இச்சூழலில் இவை இன்னும் வேகம் பெறும்.

தமிழ்நாட்டுக்குள் அனைத்துத் தொழில்களிலும் வேலைகளிலும் படையெடுத்து வரும் இந்திக்காரர்கள் மோடியின் வெற்றியால் கூடுதல் துணிச்சல் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அணுஉலை, ஐட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, நியூட்ரினோ, சாகர் மாலா போன்ற அனைத்துமே வெறும் நில வெளியேற்றம், தண்ணீர் மாசுபாடு, மண்வளக் கேடு, சுற்றுச்சூழல் அழிப்பு என மேலோட்டமாகப் புரிந்து கொண்டால், இவற்றை எதிர்கொள்வது மிகக்கடினமானது. இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் இங்கு படையெடுத்து வருவதும், சுற்றுச்சூழல் அழிப்புத் திட்டங்களும் - அடிப்படையில் தமிழர் தாயகப் பறிப்புத் திட்டங்களாகும்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, தமிழர் தாயகப் பாதுகாப்புப் போராட்டமாக இதை முன்னெடுத்தால்தான் தனித்தனியான போராட்டங்களிடையே ஒருங்கிணைவு ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

அதேபோல், காவிரிச் சிக்கல் என்பது வெறும் தண்ணீர் பகிர்வு சிக்கலல்ல - அது ஓர் இனச்சிக்கல் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். வெறும் தண்ணீர் பகிர்வுச் சிக்கலாக இருந்தால் அவை அரசுகளின் பேச்சுவார்த்தை வழியாகவோ சட்டப் போராட்டத்தின் வழியாகவோ தீர்க்கப்பட்டிருக்கும்.

ஏழு தமிழர் விடுதலையிலும் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய ஆளுநர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் இழுபறி செய்து கொண்டிருப்பது - சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்குப் பலனளிக்குமானால், அது செயல்படாது என்பதையே காட்டுகிறது.

கேள்விமுறையற்று தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களப் படையால் வேட்டையாடப் படுவதும் குசராத் மீனவர்கள் பாக்கித்தான் நாட்டோடு சட்டத்தின் ஆட்சி தரும் பயன்களைப் பெறுவதும் இதே காரணத்தினால்தான்!

காவிரிச் சிச்கலாக இருந்தாலும், கடலோடி மக்களின் பிரச்சினையாக இருந்தாலும், சூழலியல் சிக்கலாக இருந்தாலும், சமற்கிருத - இந்தி மொழித் திணிப்பாக இருந்தாலும், வெளியார் சிக்கலாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் ஆரியத்துவ இந்தியாவின் தமிழினப் பகைதான்!

மேற்சொன்ன சிக்கல்கள் அனைத்துமே தமிழின ஒதுக்கல் என்ற இந்திய அரசின் ஒட்டுமொத்த செயல் திட்டத்தின் வெவ்வேறு கூறுகளாகும். ஆரியத்துவ இந்தியா - வளர்ச்சி பெறுவதற்கும் வல்லரசு ஆகுவதற்கும் இவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற பரப்புரையை ஏற்பதால்தான் இந்திக்காரர்களுக்கு - வடஇந்தியர்களுக்கு இது இசைவானதாக அமைகிறது.

வெளியார் வேட்டையினால் பயன்பெறுவதில் இந்திக்காரர்களும் இருக்கிறார்கள். “பாரதப் பேரரசு என்பது எங்களது ஆரியத்துவ இந்திப் பேரின அரசு” எனப் பெருமிதம் கொள்வதால், வடஇந்திய பெரும் பரப்பில் வாழும் மக்கள் அதற்கு இசைவு தருகிறார்கள்; ஆதரவாக அணிதிரள்கிறார்கள். ஆனால், பாதிக்கப்படும் முனையில் உள்ள தமிழர்கள் இவற்றை தமிழினச் சிக்கல் என தெளிவு பெறாததால் ஒன்று திரள முடியாமல் தனித்தனிப் போராட்டங்களாக நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அரசியல் என்பது தமிழர் ஒன்றிணைவை தடுக்கிற இன்னொரு காரணியாகும். பெருங்குழுமங்களும் கட்சிகளும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்த ஒட்டுண்ணி முதலாளியம் (Crony Capitalism) வளர்ந்திருப்பதை பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலே இதற்கு அண்மையச் சான்று!

தேர்தல் சனநாயகம் என்பது பணநாயகமாக சீரழிந்து விட்டதை 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுதான் நிலை! இங்கு கட்சிகளிடையே தேர்வு என்பது “பெப்சி குடிப்பதா? கொக்ககோலா குடிப்பதா?” என்பதுதான்!

எனவே, நடக்கின்ற மக்கள் உரிமைப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியே நடக்கிறது. சனநாயகத்திற்கு தேர்தல் நடைபெறுவது அவசியமானது தான் என்றாலும், நடப்பிலுள்ள தேர்தல் அரசியலானது பதவி அரசியலாகவும், பண அரசியலாகவும் மாறிப் போயிருக்கிறது.

கம்பெனிகளின் பணத்தில் கட்சிகள் தேர்தலை சந்திப்பதும், அரசுப் பதவிக்கு வரும் கட்சிகள் மட்டு மின்றி எதிர்வரிசையில் அமரும் கட்சிகளும் இந்த கம்பெனிகளுக்குப் பணியாற்றுவதிலேயே தங்கள் பதவிக்கான கடமையாகக் கொண்டுள்ளார்கள்.

இந்தக் கம்பெனிகளின் காட்டாட்சி ஆரிய இன மேலாதிக்கத்தோடு இணைகிறது. இந்நிலையில் இயற்கை வளச்சுரண்டலுக்கு எதிரானப் போராட்டத்தை அனைத்திந்திய அளவில் ஒருங்கிணைப்பதோ தேர்தல் அரசியலின் வழியாக ஒருங்கிணைப்பதோ கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும்!

கட்சி அரசியலின் வரம்பை இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே உணர்ந்த காரணத்தினால் தான் காந்தியடிகள், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசுக் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று கூறினார். “கட்சியற்ற சனநாயகம்” (Partyless Democracy) என்பதை காந்தி கனவு கண்டார்.

காந்தியடிகளுக்கு முன்னால், இதனை எம்.என். இராய் சிந்தித்தார். கட்சியற்ற சனநாயகம் என்பதை முதன் முதலில் முன்மொழிந்தவர் எம்.என். ராய்தான்! இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூலவராக இருந்த எம்.என். ராய், பன்னாட்டு பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்ட எம்.என். ராய் பின்னாளில் மார்க்சியத்தைவிட்டு விலகி “புரட்சிகர மனிதநேயம்” (Radical Humanism) என்ற கோட்பாட்டை முன் வைத்தார்.

மார்க்சியம் கூறிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முற்றலும் மறுத்த எம்.என். ராய், நாடாளுமன்ற சனநாயகமும் வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தைத்தான் வழங்கும் என்று திறனாய்வு செய்தார். இவற்றிலிருந்து மீள்வதற்கான வழியாக கட்சியற்ற சனநாயகம் என்பதை முன்வைத்தார். அதற்கேற்ப, தான் தலைமை தாங்கி வழிநடத்திய “புரட்சிகர மனிதநேயக் கட்சி” என்பதை “புரட்சிகர மனிதநேய இயக்கம்” என்பதாக மாற்றினார்.

காந்தியடிகளும் சரி, எம்.என். ராயும் சரி அமைப்பு என்பதையே முற்றிலும் மறுத்துவிடவில்லை. ஆயினும், மிகவும் நெளிவு சுழிவான - தொளதொளப்பான அமைப்பை அவர்கள் முன்வைக்கிறார்கள். எம்.என். ராய் அறம் சார்ந்த தனி மனிதர்கள் ஒருங்கிணைவிற்கு கூடுதல் அழுத்தம் தருகிறார்.

எம்.என். ராயும், காந்தியும் தாங்கள் முன்வைத்த கிராமம் சார்ந்த வேர்மட்ட சனநாயகத்தை இதற்கு நேர் முரணான இந்தியத்தேசியத்துடன் இணைக்க முயன்றார்கள். காந்தி இந்தியத்தேசியத்தோடு, இந்தித் திணிப்பு - வர்ணாசிரம சனாதனம் - ஆரியப் பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்தினார். எனவே, இவர்களின் மாற்று சனநாயகக் கோட்பாடு, தன் முரண்பாட்டில் சிக்கிக் கொண்டு தன்னைத் தானே முறியடித்துக் கொள்கிறது. எனவே, அவைப் பின்பற்றத் தக்கவையாக அமையாமல் பின்தங்கிவிட்டன.

நமக்கு முன் உள்ள இந்த எடுத்துக்காட்டுகள், முன் முயற்சிகள் ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய படிப்பினையை பெற்றுக் கொண்டு, உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

தேர்தல் அரசியல் அடிப்படையில் பதவி அரசியலாக - பண அரசியலாக மாறி நீண்டநாள் ஆகிவிட்டது. இதற்கு மேல் இந்தியக் கட்டமைப்பில் தேர்தல் அரசியலின் பங்களிப்பும் மிகமிக வரம்புக்குட்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும், புதுவையிலும் தேர்தல் அரசியலில் பங்கு பெறாதவர்கள் அல்லது பதவி எதற்கும் போட்டியிடாமல் தேர்தலில் பங்கெடுப்பவர்கள் அல்லது தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆகிய அனைத்துத் தளங்களிலும் உள்ள உரிமைக்குப் போராடும் மக்கள் இயக்கங்கள் தேர்தலை முதன்மைப் படுத்தாமல், மக்கள் போராட்டங்களை முதன்மைப்படுத்தி முன்னேறுவது தான் ஒரே வழி என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், மண் காப்புப் போராட்டங்கள், மலைக் காப்புப் போராட்டங்கள், நீர் வள - கடல் வளப் பாதுகாப்புப் போராட்டங்கள், ஆற்று நீர் உரிமைப் போராட்டங்கள், மொழியுரிமைப் போராட்டங்கள், வழிபாட்டுரிமைப் போராட்டங்கள், கல்வி உரிமைப் போராட்டங்கள், சனநாயக உரிமைப் போராட்டங்கள், சாதி ஆதிக்கத்திற்கும் - வர்க்கச் சுரண்டலுக்கும் எதிரான சமத்துவப் போராட்டங்கள், பாலின சம உரிமைப் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களும் தங்கள் தங்கள் தனித்தன்மையையும் தனித்த அடையாளத்தையும் தனித்த தலைமையையும் தக்க வைத்துக் கொண்டு தொடர்கிற அதேநேரத்தில், ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத் தேவை எழுந்திருக்கிறது.

நிலவும் மக்கள் இயக்கப் பன்மையை ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைவதற்கு மிக முகாமையான தேவை கருத்தியல் ஒருங்கிணைவுதான்! தங்கள் தங்கள் தளத்தில் மாற்றுத் திட்டங்களையும் மக்கள் போராட்டங்களையும் சிந்திக்கும்போது, இந்தக் கருத்தியல் தளத்தைக் கண்டறிய முடியும்!

ஐட்ரோகார்பன் திட்டத்தையும், அணு உலையையும் எதிர்ப்போர் இவற்றுக்கான மாற்றுத் தொழில் நுட்பங்களை முன்வைக்க வேண்டிய தேவை எழுகிறது. அந்த நிலையில், கதிரவன் மின்சாரம், காற்றாலை மின்சாரம், கடல் அலை மின்சாரம் போன்றவற்றை மாற்று வழிகளாக முன்வைக்கிறோம். கழிவுகளிலிருந்தும் எரிவளி எடுத்துக் கொள்வதும், மின்சார ஊர்திகளையும் பொதுப் போக்குவரத்தையும் மாற்றுத் திட்டங்களாக முன்வைக் கிறோம். அதேபோல், காவிரி உரிமையை வலியுறுத்தும் அதேநேரத்தில் உள்ளூர் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் திட்டங்களையும் முன்வைக்கிறோம்.

பன்னாட்டு நிறுவனங்களின் விதை ஆதிக்கத்தையும், வேதி வேளாண்மையையும் எதிர்க்கும்போது அவற்றிற்கு மாற்றாக மரபு விதைகளையும், மரபுத் தொழில்நுட்பத் தையும் முன்வைக்கிறோம்.

இந்தி - ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கும்போது, கல்வியிலும் ஆட்சியிலும் நீதி நிர்வாகத்திலும் தமிழே இருக்க வேண்டுமென மாற்றுகளை முன்வைக்கிறோம். சமற்கிருதத் திணிப்பை முறியடித்து தமிழில் வழி பாட்டையும், பன்முகப்பட்ட தமிழர் ஆன்மிகத்தையும் முன்வைக்கிறோம்.

பெருந்தொழில், பெரிய அணைக் கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு பதிலாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், சிறிய அணைக்கட்டுகள், சிறிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்கள் போன்வற்றை முன் மொழிகிறோம். வேளாண்மையையும், அது தொடர்பான தொழில்களையும் பாதுகாத்துக் கொண்டு சிறிய நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான நவீனத் தொழில் நுட்பங்களை ஏற்கச் சொல்கிறோம்.

மையப்படுத்தப்பட்ட அதிகாரக் கட்டமைப்பை எதிர்க்கும் நேரத்தில், அதற்கு மாற்றாக கிராம மட்டத்திலும், உள்ளூர் அளவிலும் அதிகாரம் பரவலா வதை தமிழ்நாடும், புதுவையுமே பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு இடையிலான கூட்டாட்சியாக தமிழ்நாடு நிலவ வேண்டுமென்றும் கூறுகிறோம்.

இவ்வாறு துறைதோறும் துறைதோறும் மண்ணுக்கும் மரபுக்கும் ஏற்ற மாற்றுகளை அத்துறை சார்ந்த செயல்பாட்டாளர்கள் முன்வைத்தே வருகிறார்கள்.

இந்த மாற்றுத் திட்டங்கள் அனைத்துமே தமிழர் உரிமை - தமிழ் மொழி உரிமை - மக்களை அதிகாரப்படுத்துதல் - தமிழர் அறிவியல் - தமிழர் அறவியல் போன்றவற்றோடு இணைந்திருப்பதை கண்டுணர முடியும். இவை அனைத்திற்குமான கருத்தியல்தான் தமிழ்த்தேசியம் என்பதாகும்!

மண்ணுரிமையையும், மக்கள் உரிமையையும் பாதுகாக்க முனைவோரின் விழைவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல்!

கோட்பாட்டளவில் வலதுசாரிக் கருத்துடையோரும், இடதுசாரிக் கருத்துடையோரும் தமிழ்த்தேசியம் என்ற பொதுக்கருத்தியலில் செயல்பட வேண்டும் எனக் கோருகிறோமே தவிர, இன்றைய வளர்ச்சி நிலையில் தமிழ்த்தேசியம் என்பதே பிற்போக்குத்தனங்கள் அனைத்தையும் விட்டொழித்த முற்போக்கான இடதுசாரித் தன்மையுள்ள கருத்தியல் தான்!

ஆரிய இன ஆதிக்க எதிர்ப்பு, தமிழின உரிமை, பெரு முதலாளிய எதிர்ப்பு, பொதுத்துறை மற்றும் சிறு நடுத்தரத் தொழில்கள் ஊக்குவித்தல், இந்தி - ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தல், ஆட்சி - நீதி - கல்வி ஆகிய அனைத்தும் தமிழில் வழங்குதல், பிராமணிய வர்ணசாதி எதிர்ப்பு - தீண்டாமை, சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமத்துவ நோக்கிலான திட்டங்களை தவிர்க்க முடியாத கூறுகளாகக் கொண்டு வளர்ந்திருப்பதே தமிழ்த்தேசியம் ஆகும்!

சாதித் தமிழ்த்தேசியம், முதலாளியத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் அவதூறு பேசலாமே தவிர, உண்மையில் தமிழ்த்தேசியம் என்பது அனைத்து முற்போக்குக் கூறுகளும் ஒருங்கிணையும் தளமாகும்! ஏனெனில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தமிழர் அறம் தனக்குள் சமத்துவத்தைத் தவிர்க்க முடியாத கோட்பாடாகக் கொண்டிருக்கிறது.

சமத்துவ சமூகம் நீடிப்பதற்கு ஒவ்வொரு தனிமனிதரை யும், மறுவார்ப்பு செய்யும் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்ற கோட்பாடு தமிழர் அறத்தின் கூறாக இங்கு நிலவுகிறது. எனவே, தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலின் கீழ் அவரவர்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டே பொதுத்தளத்தில் மக்களுக்கான மாற்றுகளை முன்வைத்து ஒருங்கிணைய முடியும்!

ஆரியத்துவ இந்தியத்தேசியம் என்ற அடிப்படையில் இந்தி தேசிய இனமும், ஆரிய வர்த்தமும் ஒருங்கிணை வதை படிப்பினையாகக் கொண்டாவது, தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் தளத்தில் பன்மை அடையாளங்களோடு மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைவதுதான் தெளிவான எதிர்காலத் திட்டத்திற்கு இசைவான மாற்றாக இருக்கும். இதற்கேற்றாற்போல், மக்கள் இயக்கங்களுள் ஒருங்கிணையும் வடிவமும் அமைய வேண்டும்.

காந்தியடிகளும், எம்.என். ராயும் முன்மொழிந்த வற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, இப்போதைய மக்கள் இயக்கப் போராட்டங்களையும் படிப்பினைகளையும் கவனத்தில் கொண்டால், இப்போதைய தேவைக்கான ஒருங்கிணைப்பு வடிவத்தை கண்டறிய முடியும்!

அணுவின் உள்துகள்கள் ஒரே நேரத்தில் துகளாகவும், அலையாகவும் விளங்குகின்றன என கற்றை அறிவியல் கூறுகிறது. அதேயே சமூக அறிவியலுக்கும் பொருத்திக் கட்டமைக்க வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுப்பாடான அமைப்பும் (Organization) பெருந்திரள் மக்கள் பங்கேற்கும் இயக்கமும் (Movement) இயல்பாக ஒருங்கிணைந்த வடிவத்தை மேற்கொள்ள வேண்டியத் தேவை இருக்கிறது.

ஒரு மையத்தில் ஒருங்கிணைவதும், அதேநேரத்தில் அவரவர் தனித்தன்மையையும், தனித்தலைமையையும் தனி தனிநபர் தன்மையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பும் கலந்த ஒன்றாக இது அமைய வேண்டும்!

முடிவெடுக்கும் குழுவும் இருக்க வேண்டும். மிகப் பரவலான சனநாயகக் கருத்துப் பங்கேற்பும் இருக்க வேண்டும். இவற்றை ஒருங்கிணைப்பது தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலாக இருக்க வேண்டும். ஒற்றைத் தனிநபர் தலைமை அடையாளங்கள் வலியுறுத்தப்பட வேண்டிய தேவையில்லை.

புனைவான இந்தியத்தேசியம் என்பதில் அனைத்து ஆதிக்க ஆற்றல்களும் ஒருங்கிணைவதைப் போல உண்மையான கருத்தியலான தமிழ்த்தேசியம் என்பதில் அனைத்து விடுதலைக் கோட்பாட்டினரும் ஒருங்கிணைவதுதான் இன்றைய வரலாற்றுத் தேவை.

மோடி தலைமையிலான பா.ச.க.வின் இந்த வெற்றிக்குப் பிறகாவது தமிழ்நாட்டு மக்கள் இயக்கங்கள் இதை உணர்ந்து கொண்டு செயல்பட முன்வர வேண்டும். ஒருங்கிணைவதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், இந்திய ஆதிக்க அழிவுத் திட்டங்களில் தமிழ்நாடு சிக்கிச் சீரழியும் என்ற அவசர உணர்வு அனைவருக்கும் தேவை.

தெளிவாக முடிவெடுப்போம்! 
விரைந்து செயல்படுவோம்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2019 சூன் இதழில் வெளியான கட்டுரை).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT