படமெடுக்கும் பிராமண மேலாதிக்கவாதம்!
தோழர் ஆரல்கதிர்மருகன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
தமிழ்ப் பேராசான் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இது!
”பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினுல் இலக்கமிட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பனத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பனத்தியும் பகுத்துபாரும் உம்முளே”
(பனத்தி என்பது பார்ப்பனத்தி என்பதன் சுருக்கம்)
இது தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவவாக்கியார் பாடிய பாடல்!
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே”
இந்த வரிகளை உதிர்த்தவர் தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கமாகப் போற்றப்படும் வள்ளலார் அவர்கள். இதுதான் தமிழரின் அறக்கோட்பாடு!
பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது. செய்யும் தொழில் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது. நால்வருணம், தோல்வருணம் எதுவும் நமக்கில்லை என்பது தமிழரின் செம்மாந்த அற வாழ்வியல்!
பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் வருணங்கள் பிரித்து இன்னின்ன சாதிகள் இன்னின்ன தொழில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுவும் அதுவே அவர்களது பிறவிப் பயன் என்று சொல்வதும் ஆரியக் கோட்பாடுகள். ஆமாம் தமிழரின் வாழ்வியலுக்கு முற்றும் எதிரான தமிழரின் பண்பாட்டோடு அறவே ஒத்து வராத ஆரியத்தின் கோட்பாடுகள் அவை.
தமிழியத்திற்கும் ஆரியத்திற்குமான போராட்டம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது. ஆரியத்தால் எப்போதும் விழுங்கிச் செறிக்க முடியாதது தமிழியமே! அதனால்தான் இன்றளவும் ஆரியத்தின் அரசமைப்பு வடிவமான இந்தியம் தமிழரை வஞ்சம் கொண்டு பழிவாங்கி வருகிறது.
அதிலும் மோடி தலைமையிலான பா.ச.க. அரசு ஆட்சியமைத்தவுடன் தமிழை - தமிழரை இல்லா தொழிக்கும் வேலைகள் படுவேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட ஆரியம் தனது வேதகால செருக்கோடு தமிழர் நிலத்தில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆரியத்துவவாதிகளின் அண்மைக்காலப் பேச்சுகளும் செயல்பாடுகளும் தமிழுக்கு எதிரான - தமிழருக்கு எதிரான ஆரிய வன்மத்தைக் கக்குவதாகவே உள்ளன.
கேரளாவின் கொச்சியில் உலகளாவிய தமிழ் பிராமணர்கள் சந்திப்பு (Tamil Brahmins Global Meet) என்ற பெயரில் 2019 சூலை மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய கேரள உயர்நீதிமன்ற நீதியரசர் வி.சிதம்பரேசு பேசியதாவது, "பிராமணர்கள் நாம் முற்பிறப்பில் செய்த நன்மைகளால் இப்பிறவியில் இரு பிறப்பாளர்களாகப் பிறந்துள்ளோம். பிராமணர்களுக்கே உண்டான சிறப்பு பண்பு நலன்களால் நாம் அறிவுசார் தளங்களில் முகாமையான ஆட்களாக உள்ளோம். மேலும் பிறப்பினால் உயர்ந்த நல்லொழுக்கங்களைப் பெற்ற பிராமணர்களே அனைத்து உயர் பொறுப்புகளிலும் இருக்க தகுதியானவர்கள். பிராமணர்கள் பிரிவினைவாதிகளல்ல. அகிம்சாவாதிகள். அக்கிரகாரம் போன்ற நமது தனித்துவ அடையாளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
மேலும் உயர்சாதியினரில் பொருளியல் அளவுகோலில் பின்தங்கியோருக்கு பத்து விழுக்காடு இடவொதுக்கீடு அளிப்பதைப் பற்றி பேசுகையில், “அழுத பிள்ளை பசியாறும். நாம் இதுபோன்ற விடயங்களில் அமைதியாக இருந்து விடக் கூடாது” என்கிறார்.
அதே கூட்டத்தில் பேசிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் வைணவத் துறை முன்னாள் தலைவரும், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியருமான எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் என்பவரின் பேச்சிலோ ஆரியத்துவம் வருணாசிரம சலங்கை கட்டி தாண்டவம் ஆடியது. அவர் சொல்கிறார், “பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை, பிறப்பால் அனைவரும் சமம் என்பது பொய்யான கூற்று. ஒருவரது பண்பு நலன்களை பிறப்புதான் தீர்மானிக்கிறது”. இவர் மனிதர்களை நாய்களுடன் ஒப்பிட்டு நாயிலும் கூட பிறப்பின் அடிப்படையில் பண்பு நலன்களை வைத்து சாதிப் பிரிவுகள் இருக்கும்போது மனிதர்களிலும் அவ்வாறு இருப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்.
எந்த நாயும் தான் உயர்ந்த சாதி நாய் என்ற பெருமிதத்தோடு இருப்பதில்லை. பாவம் நாய்களுக்குத் தெரியாதே நம்மை மனிதர்கள் சாதிப் பார்த்து உயர்வு தாழ்வு கற்பிப்பார்கள் என்று!
வைணவத்தைப் போற்றி வளர்த்த ஆழ்வார்கள் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் நால்வருணம் பார்ப்பதையும் ஏற்றுக் கொண்டவர்களா? அல்லது கடவுளின் முன் உயிர்கள் அனைத்தும் சமம் என்று கற்பித் தார்களா என்பது வைணவத் துறையில் பேராசிரியராக இருந்த வெங்கடகிருட்டிணனுக்கே வெளிச்சம்!
காலிபர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளவர் ஒய்.ஜி. மதுவந்தி. இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர் என்பதோடு திரைப்பட நடிகை எனும் முகமும் இவருக்கு உண்டு.
‘நக்கீரன்’ இணைய ஊடகத்திற்கு அண்மையில் இவர் அளித்த செவ்வியில் கேரளாவில் நடந்த பிராமணர்கள் கூட்டத்தில் பேசிய எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பேசியதில் தவறொன்றுமில்லை, அவர் வருணாசிரம தர்மத்தைப் பற்றிதான் பேசியுள்ளார் என்று கூறுகிறார்.
மேலும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு பிறப்பின் அடிப்படையிலேயே பண்பு நலன்கள் இருப்பதாகவும், ஒருவர் செய்யும் தொழிலை இன்னொருவர் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். தான் ஒரு பிராமணப் பெண் என்பதைப் பெருமையாக கருதுவதாகவும் அதைப் பெருமிதத்தோடு வெளிப்படுத்து வேன் என்றும் கூறுகிறார்.
மேலும் பொருளியல் அளவுகோலில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு தேவையானது என்றும் அதை மறுப்பதற்கு நீங்கள் யார் என்றும் கேள்வி எழுப்புகிறார். காசுமீரின் சிறப்புத் தகுதியை உறுதி செய்த அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தாம் வரவேற்பதாகவும், அதுகுறித்த ரசினிகாந்தின் கருத்து சரியானது என்றும் குறிப்பிடுகிறார். பல கேள்விகளுக்கு மழுப்பலாகவும் மேலோட்டமாகவும் பதில் அளித்தாலும் அவர் பேசியது ஆரியத்துவ வருணாசிரம வாதமே என்பது அவரது செவ்வியில் அப்பட்டமாக தெரிந்தது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆரியத்துவ அமைப்பு “வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்”. அவ்வமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் “சபதமேற்பு நாள்” என்ற பெயரில் ஒரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது. பதினெட்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஆகத்து மாதம் 14 ஆம் நாளன்று சென்னையில் நடந்தது. அதில் அவ்வமைப்பின் இயக்குநர் பால கவுதமன் பின் வருமாறு பேசுகிறார் -
“காசுமீர் பிரச்சினையில் மோடி எடுத்துள்ள நடவடிக்கை பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தலைப் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை போன்றது. மோடி அதை திறம்பட செய்து முடித்துள்ளார். தலையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை அடுத்து கால் பகுதியிலும் செய்யப்படும். ஆமாம் அடுத்த அறுவை சிகிச்சை தமிழ்நாட்டுக்குதான். மோடி அதை செய்து முடிப்பார். அமித்சா துணை நிற்பார். நம்மைப் போன்ற எண்ணற்ற தேசபக்தர்கள் அவர்களுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்க வேண்டும். அகண்ட இந்து தேசத்தை உருவாக்குவதே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். அதை நோக்கி நாம் வேகமாக நகர்கிறோம்” என்கிறார்.
வருணாசிரமத்தை வெளிப்படையாக ஊடகங்களில் ஆதரித்துப் பேசுவது, காசுமீரைப் போல தமிழ்நாட்டை யும் எது வேண்டுமானாலும் செய்வோம் என மிரட்டுவது என்று ஆரியத்துவவாதிகள் தமிழுக்கும் தமிழருக்கும் எதிராக நஞ்சை உமிழத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வளவு துணிச்சலாகவும் திமிராகவும் இவர்கள் எப்படி பேசுகிறார்கள்? ஆரியத்துவவாதிகள் என்ற ஆணவத்தில் பேசுகிறார்கள். இந்தியாவை ஆள்வது ஆரியம் என்கிற திமிரில் பேசுகிறார்கள். தமிழினத்தை வேரோடு வீழ்த்த நினைக்கும் ஆரியத்தின் தளபதிகளாக தம்மை எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள்.
தேசியப் புலனாய்வு முக வாண்மை சட்ட திருத்த தீர்மானம் குறித்து அமித்சா பேசினாரே “இச்சட்டம் இசுலாமிய பயங்கரவாதிகளுக் கானது மட்டுமல்ல தமிழ் அமைப்புகளுக்குமானது” என்று. அந்தப் பேச்சின் தொடர்ச்சியாகத்தான் இவர்களது பேச்சுகளையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.
ஆரியம் தமிழை, தமிழரை, தமிழர் தாயகத்தை அழித்தொழிக்க முழுவேகத்தோடு களமிறங்கியுள்ளது. தமிழரின் நிலங்களில் நஞ்சை விதைத்து எரிவளி எடுக்க எக்காளமிடும் ஆரியத்துவ வல்லாதிக்கம், தமிழரின் மனங்களில் ஆரிய வருணாசிரம நஞ்சை விதைத்து தமிழினத்தை விழுங்கிச் செறிக்க “அகண்ட பாரதம்” என்ற கனவோடு தன் வாயை அகலத் திறந்து காத்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் தமிழர் - ஆரியர் போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈழத்தில் நம் இனத்தை கருவறுத்த ஆரியம் தமிழ் நாட்டைக் குறிவைத்து வல்லூறாக வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்கள் நாம் இந்த ஆரியப் பகையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரியத்துவக் கருத்துகளோ, வருணாசிரமக் கோட்பாடுகளோ தமிழ்நாட்டில் வேரூன்ற எக்காலத்திலும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஆன்மிகமானாலும் அறம் சார்ந்த மரபு வாழ்வியலானாலும் நமது தமிழினம் தனித்துவமானது. அது ஒன்று மட்டுமே ஆரியத்தால் ஆட்கொள்ள முடியாதது.
திருவள்ளுவரும், திருமூலரும், சிவவாக்கியாரும், வள்ளலாரும் எனப் பல நூறு ஆண்டுகளாக அறம் பாடி ஆரியத்தை எதிர்த்த மரபு நம்முடையது. அந்த மரபை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழினம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வேளையில் நமது செம்மாந்த அந்த தனித்துவ மரபு ஒன்றே நம்மை காக்க வல்ல பெருங்கருவி!
திராவிடம், தலித்தியம் என முற்போக்கு முகமூடிகள் அணிந்து கொண்டு ஆரியத்தையும் சனாதனத்தையும் அழித்தொழிப்போம் என எக்காளமிடும் கட்சிகளால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில் ஆரியத்தை தலையில் சுமந்து அரசு கட்டிலில் அமர வைத்தவர்கள் அவர்கள். அவர்கள் ஆரியத்தோடு இரண்டறக் கலந்து விட்டார்கள். ஆரியத்துவத்திற்கு எதிரான இப்போரில் தமிழினத்தை தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை.
பண்பாடு, ஆன்மிகம், தற்சார்பு வாழ்வியல் என அனைத்திலும் தனித்துவம் கொண்ட தமிழர்களுக்குப் பூட்டப்பட்டுள்ள அடிமைத்தளையை உடைக்கவல்ல விடுதலை முழக்கம் ‘தமிழ்த்தேசியம்’ ஆகும். வருணாசிரமத்திற்கு எதிரான - ஆரியத்துவ இனவாதத் திற்கு எதிரான ‘தமிழர் அறம்’ என்னும் மெய்யியல் கோட்பாடே நாம் முன் வைக்கும் தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர் ஆகும்.
”தமிழர் அறமென்னும் தழலை ஏந்துவோம்!
தலை தூக்கும் ஆரியத்தை வீழ்த்துவோம்!”
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment