காசுமீர் மனித உரிமைப் போராளி
பேராசிரியர் கிலானிக்கு வீரவணக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
சில வாரங்களுக்கு முன்பு, தில்லி மாநகர வீதிகளில் காசுமீரி தேசிய இன உரிமை முழக்கமெழுப்பி என்னோடு கைகோத்து நடந்த பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி அவர்கள், நேற்று (24.10.2019) இரவு மாரடைப்பால் திடீரென்று காலமானார் என்ற பேரிடியான செய்தி வந்து அதிர்ச்சியூட்டியது.
தில்லி பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில், அரபி மொழி பேராசிரியராக பணியாற்றி வந்த எஸ்.ஏ.ஆர். கிலானி அநீதியான முறையில் 2006 - நாடாளமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார். ஒவ்வொரு நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறி தத்தளித்த அவரது குடும்பம், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் அவர் விடுதலை ஆனவுடன்தான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.
ஐயத்திற்கு இடமின்றி அவர் மீதான குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், சட்ட நெறிக்கு மாறாக கிலானியின் மீது “சந்தேகத்தின் நிழல் படர்ந்தே இருக்கிறது” என்று கருத்துரை கூறியதால், அவர் மீண்டும் பணி வாய்ப்புப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
காசுமீரி மனித உரிமைக்காக மட்டுமின்றி, இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இன மக்கள், தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் ஆகியோரின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து இயங்கியவர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி.
அவரது திடீர் மறைவு, காசுமீரி மக்களுக்கு மட்டுமின்றி மனித உரிமை விழையும் அனைவருக்கும் பேரிழப்பாகும்!
மனித உரிமைப் போராளி பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment