உடனடிச்செய்திகள்

Friday, November 1, 2019

“தமிழ்நாடு நாள்” தமிழர் தாயக விழா நாள் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


“தமிழ்நாடு நாள்”

தமிழர் தாயக விழா நாள்


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


அறுபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முடிவெடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இம்முடிவெடுத்தமைக்கு ஆட்சியாளர்களைப் பாராட்டுவோம்!

தமிழ்நாட்டில் இளந்தலைமுறையினரிடம் எழுச்சி பெற்று வரும் தமிழின உணர்வுத் தாக்கமும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும். அண்டை மாநிலங்கள் எல்லாம் தங்களது தேசிய இனத் தாயகம் அமைந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாடு மட்டும், “இந்தியன்” - “திராவிடன்” என்று அயலார் தூக்கி மாட்டிய இனப் பெயர்களை சிலுவையாய்ச் சுமந்து, சொந்தத் தமிழினப் பெருமிதங் களைத் தொலைவில் தள்ளி வைத்தது.


“காரிருளால், சூரியன்தான் மறைவதுண்டோ

கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ

பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ”
என்று பாவேந்தர் பாரதிதாசன் கேட்டார்!


மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு (அன்று சென்னை மாநிலம்) 1956 நவம்பர் 1 அன்று அமைக்கப்பட்டது. அதற்கு முன் சென்னை மாநிலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆந்திரப் பிரதேசம் 1953இல் பிரிந்து தனி மாநிலமானது.


பிரித்தானிய வணிக நிறுவனமான கிழக்கிந்தியக் கம்பெனியின் பீரங்கிகளின் வல்லுறவால் பிறந்த நாடு இந்தியா. இதன் பெற்றோராகிய பிரித்தானியரே ‘இந்தியா’ என்று பெயர் சூட்டினர். இருநூறு ஆண்டு களுக்கு முன் இந்தியா என்ற பெயரிலோ பாரதம் என்ற பெயரிலோ ஒரு நாடு இருந்ததில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம்; தமிழ்நாடு என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.


வணிக வேட்டைக் கொள்ளையரான வெள்ளையர் ஆட்சி - மொழிவழித் தாயகம், தேசிய இனத் தாயகம் என்பவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களின் சுரண்டல் நிர்வாக வசதிக்கேற்ப இந்தியாவில் பல மாகாணங்களை உருவாக்கி, அவற்றின் அன்றாட நிர்வாகப் பொறுப்பை வெள்ளைக்கார ஆளுநர்களிடம் ஒப்படைத்தது.


இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் குழுக்களை மொழி அடிப்படையில் தனித்தனியே அமைக்க வழிகாட்டினார்.


1920ஆம் ஆண்டு நடந்த அனைத்திந்திய காங்கிரசு மாநாட்டில் மொழிவாரி மாநிலக் குழுக்களை உருவாக் கிடத் தீர்மானம் நிறைவேற்றினர். விடுதலை பெற்ற இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.


மேற்படித் தீர்மானத்தின் அடிப்படையில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1923ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்துக்குத் தனி மாநிலக் கமிட்டி அமைக்கப்பட்டது. 1920களிலேயே “தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி” அமைத்த அக்கட்சி, 1947 ஆகத்து 15இல் விடுதலை பெற்ற பின் மொழிவழித் தமிழ்நாடும், ஆந்திரமும் பிரிக்க மறுத்தது.


ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி சிறீராமுலு அவர்கள் விசாலாந்திரம் தனியே அமைக்க வலியுறுத்தி 56 நாட்கள் உண்ணாப்போராட்டம் நடத்தி சென்னையில் 15.12.1952 அன்று உயிர் நீத்தார். ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது. அதன்பிறகு, 1953 அக்டோபர் 1-இல் ஆந்திரப் பிரதேசம் சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து அமைக்கப்பட்டது. சித்தூர், திருப்பதி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை ஆந்திரத்துடன் இணைத்தது இந்திய அரசு!


மங்கலங்கிழார், ம.பொ.சி., கே. விநாயகம், கோல்டன் சுப்பிரமணியம், ரகீம் போன்ற பெருமக்கள் வழி காட்டலில் போராடிய தமிழர்களால்தான் ஆந்திரத் துக்குப் போன திருத்தணி பகுதியை மீட்க முடிந்தது. வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் காவல்துறை யினரின் தாக்குதலால் கோவிந்தசாமி, பழனிமாணிக்கம் என்று இரு தமிழர்கள் உயிர்ப்பலி ஆனார்கள்.


கேரளம் விழுங்கிய இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை மீட்கும் போராட்டத்தை நடத்தியவர்கள் மார்சல் நேசமணி, தியாகி பி.எஸ். மணி, குஞ்சன் நாடார், ஜீவா, காந்திராமன், நத்தானியேல், தாணுலிங்க நாடார் போன்றோர்! கேரள முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை தமிழர் இரத்தம் குடிக்கும் ஓநாயாய் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதினோரு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனாலும், நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, மூணாறு போன்ற தமிழர் தாயகப் பகுதிகளை மீட்க முடியவில்லை.


வடக்கெல்லை மீட்பு, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்களை வழி நடத்தியவர்கள் அந்தந்தப் பகுதியின் காங்கிரசாரே! அந்தக் காங்கிரசாரை தமிழ்நாடு காங்கிரசோ, காமராசரோ ஆதரிக்கவில்லை!


திராவிடர் கழகம், தி.மு.க. ஆகிய இரு கழகங்களும் தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகியோர்க்கான “திராவிடம்” பேசி வந்ததால் தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டில் சேர்க்கக் களப் போராட்டங்கள் நடத்தவில்லை.


1947 - 1948 வாக்கில் மொழிவழி மாநிலக் கோரிக்கை இந்தியாவெங்கும் வலுவடைந்து வந்தபோது, ம.பொ.சி. புதிய தமிழகக் கோரிக்கையை எழுப்பினார். சோவியத் ஒன்றியத்தில் மாநிலங்களுக்குத் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை - Self determination) இருப்பதுபோல் “புதிய தமிழகத்திற்கும்” வேண்டும் என்றார். சுயநிர்ணய உரிமையுள்ள புதிய தமிழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் காமராசர், பாரதிதாசன், ஜீவா, தெ.பொ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 12 பெரு மக்களிடம் கையொப்பம் வாங்கி இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.


ஆனால் பெரியார் புதிய தமிழகம் தனியே அமைக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்.


“மொழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள கேட்டையும், விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டி யுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்” - பெரியார், விடுதலை, 21.04.1947.


தேவிகுளம், பீர்மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்கத் தமிழ்நாட்டில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை. தேவிகுளம், பீர்மேட்டைக் கேரளாவுடன் சேர்த்தது சரியே என்று “தினந்தந்தி” ஏட்டுக்கு பேட்டி அளித்தார். (காண்க : தினத்தந்தி, 11.10.1955).


பெரியார் 1938இல் முத்திரை முழக்கமாகப் போட்டு வந்த “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தைக் கைவிட்டு, “திராவிடநாடு திராவிடர்க்கே” என்று முழங்கி வந்தார். இறுதியாக, இன்றைய நிலையில் உள்ள தமிழ் நாடு 1956 நவம்பர் 1 அன்று இந்திய அரசால் அறிவிக்க முன்வந்தது. இந்நிலையில், மீண்டும் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கத்தை “விடுதலை” இதழில் போடத் தொடங்கினார்.


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள “தமிழ்நாடு நாள்” கொண்டாடும் அறிக்கையில் பெரியார், அண்ணா, காமராசர் ஆகியோர் மொழிவழித் தமிழ்நாடு அடையப் போராட்டங்கள் நடத்தியதாகத் தவறாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையில் போராடிய ம.பொ.சி., மார்சல் நேசமணி ஆகியோர் பெயரைக் கடைசியில் போட்டுள்ளார்கள். மங்கலங்கிழார், பி.எஸ். மணி போன்றோர் பெயர்கள் குறிப்பிடப்படவே இல்லை! தமிழ்நாடு அரசு இத்தவறைத் திருத்த வேண்டும்.


வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்களைப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். அப்போராட்டத்தில் உயிர் நீத்த - சிறை சென்ற ஈகியர் குடும்பத்தினர்க்குக் கூடுதலான உதவித் தொகை வழங்க வேண்டும்!


இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT