உடனடிச்செய்திகள்

Friday, November 1, 2019

”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்” பெ. மணியரசன், சிறப்புக் கட்டுரை!


”தேவிகுளம் பீரிமேடு மீட்பும்
திராவிட குழப்பங்களும்”

ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

(2011 திசம்பரில் தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணை காக்க தமிழ் மக்களிடையே எழுந்த எழுச்சியையொட்டி, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 பிப்ரவரி 1-15 இதழில் வெளியான கட்டுரை - காலத்தேவை கருதி இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது).

மக்கள் சீறியெழுந்து தெருவுக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டால், அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய திசையை சரியாகத் தீர்மானித்துக் கொள்வார்கள். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு!

ஈழத்தமிழர்களை இலட்சக் கணக்கில் கொன்றழித்த இராசபட்சே கும்பலை இனப் படுகொலைக் குற்றவாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்று எழுந்த மக்கள் போராட்டம், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் துடித்த இந்திய அரச்சைத் தடுத்து நிறுத்தி மூன்று தமிழர் உயிர்காக்க மூண்டெழுந்தப் போராட்டம், முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்கக் கிளர்ந்தெழுந்த மக்கள் பேரழுச்சி கேரளத்தில் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்கிய மலையாளிகளுக்குப் பாடம் புகட்டத் தமிழகத்தில் தந்த பதிலடி போன்றவை அனைத்தும் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்களின் இன உணர்ச்சி அணை உடைத்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்த வெளிப்பாடுகள் ஆகும்.

எதிரி நம்மை இன அடிப்படையில் தாக்கும் போது நாமும் இன அடிப்படையில்தான் எதிரியோடு போராடவேண்டும். இந்த உண்மையை நம் மக்கள் புரிந்து கொண்டு போராடினார்கள். நாற்காலி நாயகர்கள் நடத்தும் தேர்தல் கட்சிகளால் நம் மக்களைப் பிளவுபடுத்த முடியவில்லை. அவர்களின் அறிக்கைகள் அடையாளப் போராட்டங்கள், மக்கள் எழுச்சியை மடை மாற்றவோ, நீர்த்துப்போகச் செய்யவோ முடியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்பது மட்டுமின்றி, மலையாளிகளிடம் நாம் இழந்த தமிழ் மண்ணையும் மீட்க வேண்டும் என்று தமிழ்மக்கள் முழக்கமிட்டனர். முதல் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை மீட்க வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தனர். கூடலூர் லோயர் கேம்ப், கம்பம் மெட்டு ஆகிய இடங்களில் இருபத்தைந்தாயிரம், ஐம்பதாயிரம், எண்பதாயிரம் எனக் குவிந்த மக்கள் ‘எங்கள் சொந்த மண்ணான இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்போம்’ என்று எழுப்பிய முழக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அதிரச் செய்தது. அம்மலைத் தொடர்களுக்கு அப்பால் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் ‘இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணை’’ என்று எதிரொலித்துப் பேரணிகள் நடத்தினர்.

ஏற்கெனவே தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழின உணர்வாளர்களும், இன உணர்வு ஏடுகளும் தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். இப்பொழுது அது மக்கள் முழக்கமாகியுள்ளது. மூணாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, தேக்கடி, கண்ணகி கோயிலின் ஒரு பகுதி, முல்லைப்பெரியாறு அணை முதலிய அனைத்துத் தமிழ்ப் பகுதிகளும் இடுக்கி மாவட்டத்தில்தான் உள்ளன.

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்டபோது, இந்தியா தமிழினத்தை வஞ்சித்து விட்டது. மொழிவழி மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க அமைத்த ஆணையத்தில் மலையாளியான கே.மாதவப் பணிக்கரை (சர்தார் கே.எம். பணிக்கர்) ஓர் உறுப்பினராய் பிரதமர் நேரு அமர்த்தியதே தமிழினத்திற்கெதிரான நோக்கம் கொண்டதாகும்.

மூன்று பேர் கொண்ட அவ்வாணையத்தில் இன்னொரு உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ. அதன் தலைவர் பீகாரியான பசல் அலி.

திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் மலையாளிகளின் ஆளுகையின்கீழ் நொய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தோவாளை அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு ஆகிய தமிழ்ப்பகுதிகள் சிக்கியிருந்தன. அவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான இயக்கமும் 1945-இல் திருவிதாங்கூர் சமஸ்தானத் தமிழர்களிடம் வடிவமெடுத்தன.

திருவிதாங்கூர்- கொச்சி மாநில (கேரள)க் காங்கிரசில் பொறுப்பு வகித்த, உறுப்பு வகித்த தமிழர்கள் இன அடிப்படையில் மலையாளிகளின் தலைமையில் இயங்கிய திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரசிலிருந்து விலகி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது.

இதன் இலட்சியம்: திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியில் உள்ள தமிழக நிலப்பரப்பைத் தாய்த்தமிழ்நாட்டுடன் இணைப்பது என்பதாகும்.

இதன் நோக்கங்கள்: 1. தமிழ்மொழி வளர்ச்சி, 2. அனைத்திந்தியக் காங்கிரசின் வேலைத்திட்டங்களை ஒட்டி இந்திய விடுதலைக்குப் பாடுபடுவது. 3. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சிறுபான்மையாக. உள்ள தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பது. இவ்வமைப்பு தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத்தியது.

மொழிவழி மாநில எல்லைகளைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் வெளியிட்டது. தமிழ்நாடு பற்றி அதன் பரிந்துரை வருமாறு:

சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை மைசூரோடும் சேர்த்துவிட வேண்டும்.

திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வட்டங்களை (தாலுகாக்களை) சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும் சென்னை மாநிலம் என்ற பெயர் நீடிக்க வேண்டும்.

சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்கே உரியதாய் அதன் தலைநகரமாய் இருக்க வேண்டும்.

சென்னை மாநில-ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென அமர்த்தப்படவிருக்கும் எல்லை ஆணையம் கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை (பசல் அலி) ஆணையம் ஏற்றுக் கொள்கிறது.

தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை.

இப்படி சேர்க்கப்படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் ஆத்திரப் படவுமில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க் கோலம் பூணவுமில்லை. அமைதி நிலவியது.

செங்கோட்டை வட்டம் முழுவதையும் பசல் அலி ஆணையம் தமிழகத்திற்கு வழங்கியிருந்தது. தமிழகத்தின் அசைவற்ற நிலையைப் பார்த்த மலையாளிகள் இந்திய அரசில் செல்வாக்கு செலுத்தி வளமான காட்டுப்பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை வட்டம் கேரளத்திற்கும் செங்கோட்டை நகர் மட்டும் தமிழகத்திற்கு என்றும் மாற்றிவிட்டனர். அதன்பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை.

பசல் அலி ஆணைய அறிக்கை 10.10.1955 அன்று வெளிவந்தது. அன்றே பெரியாரிடம் தினத்தந்திச் செய்தியாளர் இது குறித்து நேர்காணல் நடத்தினார். தேவிகுளம் பீரிமேடு தொடர்பான செய்தியாளர் கேள்வியும் பெரியார் அளித்த விடையும் வருமாறு:

நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்தென்ன?

ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே!

ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.

இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)

பசல் அலி அறிக்கை வெளியானவுடன் தி.மு.க குறிப்பிடும்படி எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. காமராசரும் காங்கிரசும் எதிர்ப்புப் காட்டாதது ஒரு செய்தியே அன்று. தெற்கெல்லை மீட்புப் போராட்டம் காமராசரின் விருப்பத்திற்கெதிராகவே கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் நடந்து கொண்டிருந்தது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை காமராசர் எதிர்த்தே வந்தார்.

"பசல் அலி அறிக்கை தமிழினத்திற்கு அநீதி இழைத்து விட்டது’" என்று உடனடியாக செய்தியாளர்களிடம் கூறினார் ம.பொ.சி. அத்தோடு நில்லாமல் பெரியார், அண்ணா ஆகியோரையும் மற்ற தலைவர்களையும் தனித்தனியே நேரில் சந்தித்து தேவிகுளம், பீரிமேடு வட்டங்களை மீட்க அனைத்துக் கட்சிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைத்தார்.

மா.பொ.சி.யின் முயற்சியால் 27.1.1956 அன்று சென்னை ஏழு கிணறு ஜி. உமாபதி இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. முதலில் வர ஒப்புக்கொண்ட பெரியார், கூட்டத்திற்கு வரவில்லை. அண்ணா கலந்துகொண்டார்.

ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வரமுடியாததற்கான காரணங்களைத் தெரிவித்து அடுத்தடுத்து மூன்று அறிக்கைகள் வெளியிட்டார் பெரியார். அவை விடுதலை ஏட்டில் 25.1.1956, 26.1.1956, 27.1.1956 ஆகிய நாள்களிட்டு பெரியார் கையொப்பமிட்ட அறிக்கைகளாக வந்தன. அவற்றின் சாரம் இதுதான்:

தேவிகுளம்- பீரிமேடு வட்டங்களை இணைக்கும் ஒற்றை கோரிக்கையாக மட்டும் அனைத்துக் கட்சிப் போராட்டம் நடக்கக் கூடாது.

1) எல்லைக் கமிசன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு ( தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.

2) இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும், இந்தியாவுக்குத் தேசிய மொழியாகவும் ஆக்கப்படாமல் தடுப்பது.

3) தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படிச் செய்தல் (தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கைக்குப் பாதகமில்லாமல் இக்கோரிக்கையை வைக்கிறோம்).

4) தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சென்னை, மதராஸ் என்ற பெயர்களை நீக்கல்.

5) தென்மண்டலம் (தட்சி ணப்பிரதேசம்) அமைக்க உள்ளதை எதிர்த்தல்.

மேற்கண்ட ஐந்து கூறுகளும் ஒருங்கிணைக்கப்படாததால் ம.பொ.சி. கூட்டிய கூட்டத்திற்கு போகவில்லை என்று பெரியார் கூறுனார். இவை பற்றி ம.பொ.சியிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இத்தனை கோரிக்கைகளையும் பெரியார் இணைத்திருப்பார் என்று நாம் கருதப் பல காரணங்கள் உண்டு.

அனைத்துக் கட்சிப் போராட்டம் நடத்த வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டது, இரண்டு காரணங்களுக்காக 1) பசல் அலி குழு தமிழகத்திற்கு இழைத்த அநீதியைப் போக்கி, குறைந்தது தேவிகுளம் பீர்மேட்டையாவது தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே. 2) சென்னை ராஜ்ஜியம் என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்று பசல் அலி குழு பரிந்துரைத்திருந்தது. அதை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்.

தட்சிணப் பிரதேசத் திட்டத்தை இராசாசி தவிர மா.பொ.சி. உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தனர்.

இந்த உடனடிக் கோரிக்கைகளுடன் நீண்டகாலக் கோரிக்கைகளான மாநில சுயாட்சி, இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது என்பவற்றை பெரியார் இணைத்தது சரியா?

எடுத்துக்காட்டாக முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இப்பொழுது கூட்டுப் போராட்டமாகவும் நடக்கிறது. அந்தந்த அமைப்பின் போராட்டமாகவும் நடக்கிறது. இதற்கான கூட்டுப் போராட்டத்தில் நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், பாலக்காடு, தேவிகுளம், பீரிமேடு ஆகிய அனைத்துப் பகுதிகளையும், தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கையில் சேர்த்துக் கொண்டால்தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேரும் என்று நிபந்தனை போடலாமா? கூடாது. கூட்டுப் போராட்டத்திற்கான உத்தி அதுவன்று. மேற்கண்ட தமிழ் நிலப்பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பது த.தே. பொ.க. வின் உறுதியான கொள்கை. அதைத் த.தே.பொ.க. வின் தனிப்போராட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். அந்த நிலமீட்புக் கோரிக்கைக்கும் கூட்டுப் போராட்டம் நடத்தும் காலம் வரும். ஆனால் இப்பொழுது முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பில் முதற்பெரும் கவனம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கூட்டுப் போராட்டம் நடத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க 21.12.2011 அன்று ம.திமு.க. முன்னெடுத்தக் கூட்டுப் போராட்டத்தில் த.தே.பொ.க.வும் பங்கேற்றது.

ம.பொ.சி. தேவிகுளம் பீர்மேட்டை மீட்பதற்கு அழைத்த கூட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய நிபந்தனைகளைப் போட்டார் பெரியார். காமராசரையும் காங்கிரசையும் ஆதரிக்க அவர் இந்த நிபந்தனைகளை போட்டாரா? இல்லை..

1957, 1962 தேர்தல்களில் காங்கிரசு வெற்றிக்காக உழைக்க மேற்கண்ட நிபந்தனைகளைப் போட்டாரா? 1965-இல் மாணவர்கள் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தாரே பெரியார் ஏன்? காங்கிரசு ஆதரவு நிலையிலிருந்து கொண்டு தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தார்.

மாணவர்கள் உள்ளிட்ட தமிழர்களை முந்நூறுக்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி 1965-இல் சுட்டுக் கொன்றது. அப்போதும் காங்கிரசு ஆட்சியைத்தான் பெரியார் ஆதரித்தார். ஆனந்த விகடன் ஏடு அப்போது பெரியாரிடம் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன். அது வருமாறு:

சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?

பெரியார்: அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்குறேன். சொல்லுங்கோ?

சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..

பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?
- ஆனந்தவிகடன் 11.4.1965

1965 மொழிப்போர் நடந்து முடியும் தருவாயில் பெரியார் கூறிய கருத்துகள் இவை. அப்போழுது எங்கே போயிற்று அவரது இந்தி ஆதிக்க எதிர்ப்பு? தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கைக்குப் பாதகமில்லாமல் அவர் ம.பொ.சி.யிடம் கேட்ட மாநில சுயாட்சிக் கோரிக்கை காங்கிரசை ஆதரித்த போதெல்லாம் எங்கே போயிற்று? இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமெனில் இந்தி ஆட்சி மொழியாக இருப்பதுதான் சனநாயகமென்று 1965-இல் பேசுகிறார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டால் தேவிகுளம், பீரிமேடு மீட்புப் போராட் டத்திற்கு வருகிறேன் என்று கூறிய பெரியார், பசல் அலி ஆணைய அறிக்கை வந்த போது 10.10.1955 அன்று தேவிகுளம், பீரிமேடு வட்டங்கள் கேரளத்துடன் சேர்க்கப்பட்டது ’’சரிதான்’’ என்று ஆதரித்தார் என்பதை முன்னர் பார்த்தோம் (தினத்தந்தி, 11.10.1954).

ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகள் இணைந்திருந்த சென்னை மாகாணத்தை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்து, தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் 1948-இல் பெரியார் எதிர்த்தார்.

‘சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டுமென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழி யாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டு வார்களானால், வலியுறுத்து வார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச் சாரத்துக்கும் திராவிட சமுதா யத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடு மென்று எச்சரிக்க விரும்பு கிறேன்" -_ பெரியார், விடுதலை 1. 8. 1948.

மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமைவதை-, அதற் காகக் கோரிக்கை வைப்பதை இங்கு எதிர்க்கிறார் பெரியார். மொழிவழி மாநிலம் கோரு வோர் காட்டுமிராண்டிகளின் பிரதிநிதிகள் என்று இராசாசி 1956-இல் பேசினார்.

1948இல் மொழிவழி மாநிலப் பிரிவினையை எதிர்த்த பெரி யார் 1955-இல் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என் கிறார். என்னே தன் முரண்பாடு! அத்தோடு அவர் நிற்கவில்லை. 1948-இல் அவர் போற்றிய திராவிடச் சமுதாயத்தின் திராவிடக் கலச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மலையாளி களை என்ன சாடு சாடுகிறார் பாருங்கள். 1956-இல் அவர் பேசியது:
“ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும் மலையாளக்குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப் பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப் பனனைப் போலவே மலை யாளிகள் மான ஈன மில்லா தவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம் கூட இருக் காது. எதற்கெடுத்தாலும் திமி ராகப்பேசவும், பார்ப்பனர் களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும்.’’

- வேலூரில் பெரியார் உரை 29. 1. 1956 (இதை விடுதலை நாளேடு- 18. 1. 2012 இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டுள்ளது)

பெரியார் சொற்களில் சொன்னால் பார்ப்பனர்களைப் போன்ற மலையாளிகளையும் சேர்த்துக்கொண்டது தானே அவர் கூறி வந்த திராவிடம், அவர் உரத்துப்பேசிய திராவிட சமுதாயம் மற்றும் திராவிடக் கலாச்சாரம். சென்னை மாகாணத்திலிருந்து மலபார் மாவட்ட மலையாளிகளை பிரித்து அனுப்பக் கூடாது என்றுதானே மொழிவழித் தமிழக அமைப்பை 1948 -இல் எதிர்த்தார்!

அன்றன்றைக்கு அவர் எடுத்த அரசியல் நிலைபாட்டிற்கேற்ப வெவ்வேறு வரையறுப்புகளைக் கூறிவந்துள்ளார் பெரியார்.

தமிழ்த் தேசிய இனம் குறித்து சமூக அறிவியல் வழிப்பட்ட வரையறுப்பு அவரிடம் இல்லை.

சென்னை மாகாணத்தி லுள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் பிரிந்து போகக் கூடாது என்று 1948-இல் கூறிய பெரியார், இந்த நான்கு மாநிலங்களையும் சேர்த்து நேரு முன்மொழிந்த தட்சிணப் பிரதேசத்தை அவர் ஆதரித் திருக்க வேண்டும்.

சென்னை மாகாணத்தி லிருந்து தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகளைப் பிரித்துவிடக் கூடாது என்று பேசிய பெரியார் 1956-இல் அந்த இனங்களோடு தமிழர்களும் சேர்ந்து ஒரே மாநிலமாக இருப்பதை ஏன் எதிர்த்தார்?

அப்படி ஒரு மாநிலம்- அதாவது தட்சிணை பிரதேசம் அமைந்து விட்டால் திராவிடர் கழகம் தமிழர்களிடம் மட்டும் உள்ள சின்னஞ் சிறு அமைப் பாக சிறுத்துப் போயிருக்கும். திராவிடத்தையும் பெரியாரை யும் ஏற்காத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளே தட்சிணப்பிரதேசத்தில் பெரும் பான்மையாக இருந்திருப்பார்கள்.

மொழிவாரி மாநிலத்திற்குக் குரல் கொடுக்காத காமராசர், தெற்கெல்லை வடக்கெல்லை மீட்புப் போராட்டங்களை ஆதரிக்காத காமராசர், தட்சி ணப் பிரதேசம் அமைவதை மட்டும் ஏன் எதிர்த்தார்? தட்சிணப்பிரதேசம் அமைந்து விட்டால் அதில் காமராசர் முதலைமைச்சராகத் தொடர முடியாது. பெரும்பான்மை இனமான தெலுங்கர்களே பெரும்பாலும் முதலமைச்சர் ஆவர். அதுமட்டுமல்ல, தங்க ளுக்குள் முரண்பாடுகள் இருந் தாலும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளி களும் தமிழரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவேதான் காமராசர், தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தார்.

எனவே, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்ததில், பெரி யாருக்கும், காமராசருக்கும் அவரவர் எதிர்காலம் சார்ந்த பார்வை இருந்ததே தவிர, தமிழ்த் தேசிய இனம், தனி இனம் என்ற சரியான பார்வை இல்லை.

தி.மு.க. ஏன் தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தது? 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள வேளையில் தட்சி ணப் பிரதேசம் முன் மொழியப் பட்டது. தி.மு.க. கூறிவந்த "திராவிடப் பொன்னாடு’’ தானே தட்சிணப் பிரதேசம்! அதை ஏன் எதிர்க்க வேண்டும்? முதலில் திராவிட இன ஒற்றுமையை உருவாக்கி, அடுத்து திராவிட நாட்டு விடுதலைக்குப் போராடு வதுதானே தி.மு.க.வின் திட்ட மாக இருந்திருக்க வேண்டும். திராவிடர்கள் ஒன்றிணைக் கப்படுவதைக் கண்டு அண்ணா ஏன் அஞ்சினார்? தட்சிணப் பிரதேசத்தில் தி.மு.க. ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது.

1956-இல் தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் பெற்றிருந்த செல்வாக்கும் அவர் களின் கழகங்கள் பெற்றிருந்த வளர்ச்சியும் திராவிடத் தட் சிணப் பிரதேசம் அமைந்தால் சடசடவெனச் சரிந்து சிறுபான் மை ஆகிவிடும் என்பதை உணர்ந்து அவர்கள் அஞ்சி னார்கள்.

ஏமாளித் தமிழர்களிடம், இவர்கள் திராவிட இன உறவுகளை-, திராவிடக் கலாச் சாரத்தைப் பேசினார்கள். இந்திய அரசே திராவிடர்களை ஒரே மாநிலமாக இணைக்கப் போகிறது என்று வந்தவுடன் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சினார்கள். இதற்குப் பெயர் இனக்கொள்கையா?

இவர்களிடம் தேசிய இனங்கள் குறித்த வரையறுப்பும் தமிழ்த் தேசிய இனம் குறித்த புரிதலும் இல்லை. ஆனால் ‘இன அரசியல்’ நடத்தினார்கள். தமிழர்கள் தங்களின் மரபு இனமாகவும் தேசிய இன மாகவும் விளங்கும் தமிழ் இனத்தை உள்ளது உள்ளபடி உணரவிடாமல் இவர்கள் குழப்பிவிட்டார்கள்! இன்றைக்கும் தி.மு.க.வும் தி.க.வும், மற்ற பெரியாரியல் வாதிகளும் திராவிடத்தைச் சொல்லி தமிழர்களைக் குழப்புகிறார்கள்.

கலைஞர் கருணாநிதி இன் றும் ‘திராவிடம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறார். "இனத்தால் திராவிடன் மொழியால்தான் தமிழன்" என்று கூறிக்கொள்கிறார். இவ்வாண்டு நடந்த பெருங்கேடாக தி.க. தலைவர் கி.வீர மணி, தமிழர் திருநாள் விழாவை "திராவிடர் திருநாள் விழா" என்று பெயர் மாற்றி மூன்று நாள் கொண்டாடினார். திராவிடச் சீர்குலைவு இன்னும் ஓயவில்லை. தமிழர்கள் இன உணர்ச்சி பெற்று எழும்போதெல்லாம் "திராவிடத் தலைவர்கள்" தங்கள் சீர்குலைவு வேலையைத் தொடங்கி விடுகிறார்கள்.

முல்லைப்பெரியாறு அணைப் போராட்டத்தில் மக்களின் எழுச்சியைப் பார்த்த கருணாநிதி, அம் மக்களைத் தமது தேர்தல் அரசியலுக்கு ஈர்த்துக் கொள்வதற்காக தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிறார். மலையாள அரசு, தமிழர்களின் பொங்கல் விழாவுக்கு விடுமுறை விடாத நிலையில், தமிழ் நாட்டில் ஐந்து மாவட்டங்களில் மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விட்டு தமிழினத் துரோகம் புரிந்தவர் இதே கருணாநிதி தான். ஆந்திரப் பிரதேச முதல மைச்சர் இராசசேகரரெட்டி விமானவிபத்தில் இறந்ததற்கு தமிழ்நாட்டில் விடுமுறைவிட்டு, தி.மு.க. கொடியை மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டவர் இதே கருணாநிதிதான். அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். இறந்த போது ஆந்திரம் விடுமுறை விடவில்லை.

1956 பிப்ரவரி 20 -இல் அனைத்துக் கட்சி நடத்திய தமிழகப் பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பில் கலந்து கொண்ட தற்கப்பால் தமிழ்நாட்டில் தேவிகுளம் பீரிமேடு மீட்பிற்காக தனியே ஒரு போராட்டத் தைக்கூட தி.மு.க. நடத்த வில்லை. குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் திரு.தமிழ்நாடு காங்கிரசு நடத்திய போராட் டங்கள் சிலவற்றில் அப்போது கலந்துள்ளனர். கருணாநிதி தமது அறிக்கையில் தமிழக முழுஅடைப்பில் தி.மு.க. கலந்து கொண்டதைக் குறிப்பிட்டுள்ளார். மற்றவையெல்லாம் கழகத்தின் தீர்மானங்களும் அறிக்கைகளும் தாம்!

பெரியார் தி.க. என்ன கூறுகிறது? முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட்டத்தில் இந்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டுமே தவிர கேரளத்தையோ மலையாளிகளையோ எதிர்த்துப் போராடக்கூடாது என்கிறது. கேரளம் 'சண்டித்தனம்" செய்கிறதாம்! கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட தெல்லாம் சண்டித்தனம் தானோ?

’’முல்லைப்பெரியாறு அணை மீண்டும் எரியத் தொடங் கியுள்ளது. கேரள அரசின் சண்டித்தனம் தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது.

‘ஒன்றுபட்ட இந்தியா தோல்வி அடைந்து விட்டது. இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தீர்வு கிடைக் காது என்ற நிலையில், தமிழர் களின் பிரதான எதிரியாக நிற்பது பார்ப்பன-பன்னாட்டுச் சுரண்டலுக்காக மட்டும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்திய ஆட்சிதான்’’

- புரட்சிப் பெரியார் முழக்கம் (பெ.தி.க. ஏடு) 15. 12. 2011

தமிழ்நாட்டு விடுதலையைத் தனது முதன்மை இலட்சிய மாகக் கொண்டுள்ள இயக்கம் போல் காட்டிக் கொண்டு, கேரளத்திற்கும் மலையாளிகளுக்கும் பதிலடி கொடுக்கும் தமிழ் மக்களைத் திசை திருப்பிவிட இந்திய அரசை எதிர்த்து போராடுங்கள் என்று மடை மாற்றுகிறது பெ.தி.க.

1956 சனவரியில் ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் போக மறுத்த பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு ஊனம் ஏற்ப டாமல் மாநில சுயாட்சிக் கோரிக்கையை இணைத்துக் கொண்டால், இந்தி எதிர்ப்பை இணைத்துக் கொண்டால் தேவிகுளம் பீரிமேடு போராட் டத்திற்கு வருவேன் என்று காரணம் காட்டித் திசை திருப்பினாரல்லவா! அதே உத்தியைத்தான் இப்பொழுது பெ.தி.க.வும் கையாள்கிறது.

அய்யப்ப கோயிலுக்குப் போன தமிழர்களை மலையாளிகள் அடித்து விரட்டியதை எளிமைப்படுத்தி மலையாளிகள் மீது தமிழர்களுக்குச் சீற்றம் வராமல் அவர்களுக்குத் தற்காப்புப் பணி புரிகிறது பெ.தி.க. “சூத்திரத்தமிழர்களை அடித்து விரட்டி விட்டதாலேயே ‘சூத்திர’ மலையாளிகள் அய்யப்பனுக்கு முழு உரிமை கோரவும் முடியாது. அவர்களால் அய்யப் பனை நெருங்கிவிடவும் முடியாது. அங்கே நம்பூதிரிப் பார்ப்பான் சூத்திர மலையாளிகளை மட்டுமல்ல பெண்களையும் சேர்த்து கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே விரட்டி அடிக்கிறான். - புரட்சிப்பெரியார் முழக்கம் 15.12.2011

வர்ணாசிரம எதிர்ப்பு, பெண்ணுரிமை என்ற முற்போக்குச் சொல்லாடல்கள் மூலம் மலையாளிகளைப் பாதுகாக்கும் ‘திராவிட உத்தி’ இது.

பத்துநாள்களாகக் கேரளத்தில் கேள்வி கேட் பாரற்று மலையாள இன வெறி யர்கள் அப்பாவித் தமிழர்களை அடித்தார்கள். தமிழ்ப் பெண் களைச் சிறைப்படுத்தி மான பங்கப் படுத்தினார்கள். அதன் பிறகே தமிழ்நாட்டில் மலை யாளிகளுக்குப் பதிலடி கொடுத் தோம். தமிழ்நாட்டில் நடந்த பதிலடி என்பது மலையாளி களின் நிறுவனங்களை மூடச் செய்ததாகத்தான் அமைந்தது. இதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை பெரியார் தி.க.வால்! அவர்களின் திராவிட பாசம் தமிழர் களுக்கு எதிராக உள்ளது. மலையாள இனவெறியர்களைப் பாதுகாக்க முனைகிறது. இதற்காகத் தமிழர்களிடம் சூத்திர பாசத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறது பெ.தி.க.

அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கவில் லையே என்று கவலைப்படும் பெ.தி.க.வுக்கு, தேனி மாவட்டத் தமிழ்ப் பெண்கள் மலையாளி களால் கடத்தப்பட்டு மான பங்கப் படுத்தப்பட்டது பெரிதாக உறுத்தவில்லை. திராவிட பாசம் மனச்சசான்றை மரத்துப் போகச் செய்கிறது.

அடிக்கும் மலையாளிகளும் ஆடுகளாம் அவர்களால் அடிக்கப்படும் தமிழர்களும் ஆடுகளாம்! இரு ஆடுகளும் மோதிக் கொண்டால் இந்திய அரசு என்ற நரிதான் இரத்தம் குடிக்குமாம்! திசை திருப்பு கிறது பெ.தி.க.

“ஆனாலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய கடமை யைக் கைகழுவிவிட்டு, தமிழர் -கேரள மோதல்களைக் கூர் தீட்டி விட்டு ஆடுகள் மோதலில் ரத்தம் குடிக்கும் நரிகளைப் போல், "ஒருமைப்பாடு', "தேசபக்தி' பேசிக் கோண்டு உரிமை களைத் தடுத்து நிறுத்தும் முதன்மை எதிரி இந்திய அரசு தான்”. - -புரட்சிப் பெரியார் முழக்கம், 22. 12. 2011.

இந்திய அரசு ஓர் ஏகாதிபத்திய அரசு. பல்வேறு இனங்களுக்கிடையே எழும் முரண்பாடுகளைத் தீர்க்காமல் மோத விடுவது அதன் பொதுவான உத்திதான். அந்த இந்திய அரசின் உயர் அதிகார மையங்களில் மலையாளிகள் தாம் முகாமையான பொறுப்புகளில் உள்ளார்கள். ஈழத்தமிழர்களை அழிக்கும் போரை இந்தியா மறைமுகமாக நடத்தியதற்கு முகாமைக் காரணிகளாக இருந்தவர்கள் அந்த மலையாளிகள் தாம் என்பது ஊரறிந்த உண்மை. இதே பெ.தி.க.வும் அக்குற்றச்சாட்டைத் தனது ஏட்டில் எழுதியுள்ளது. தமிழகத் தமிழர்கள் மலையாளிகளால் தாக்கப்படும் போது மட்டும், மலையாளிகள் அப்பாவி ஆடுகள் என்றும் அவர்களை ஏவுவது இந்திய அரசுதான் என்று தான் என்றும் கண்டுபிடித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு எங்கிருந்து வந்தது? திராவிட பாசத்திலிருந்து வந்தது.

இரண்டு ஆடுகளையும் இந்திய அரசு கூர் தீட்டி விட்டது என்றால், தமிழர்களை மலையாளிகளுக்கு எதிராக அது கூர் தீட்டிவிட்டதா?

தமிழர்களைப் பார்த்துக் கேட்கிறோம். தமிழர்களே, மலையாளிகளோடு மோதுங்கள் என்று உங்களை இந்திய அரசு கூர்தீட்டி விட்டதா? மலையாளிகளைத் தாக்கும்படி தமிழர்களை இந்திய அரசு தூண்டி விட்டதா? இல்லை. தம்மின அப்பாவி மக்கள் மலையாள இனவெறியர்களால் அன்றாடம் தாக்கப்படுவதைக் கண்டு நெஞ்சு குமுறிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் இன உணர்ச்சி தூண்டியதால் மலையாளி களுக்குப் பதிலடி கொடுத்தார்கள். இந்திய அரசு தமிழர்களைத் தூண்டிவிட்டதாக ஏன் பெ.தி.க. பிழைபடப் பேச வேண்டும்-?

தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். மலையாளிகள் தாக்கினார்கள். இதை “தமிழர் - கேரள” மோதல் என்று வர்ணிக்கிறது பெ.தி.க. நம்மைச் சொல்லும் போது தமிழர் என்று குறிப்பிடும் அக்கட்சி மலையாளிகளைக் குறிப்பிடும் போது மட்டும் இனப்பெயரைக் குறிப்பிடாமல் ”கேரள” என்று மாநிலப் பெயரைக் குறிப் பிடுகிறது.

“தமிழக - கேரள” மோதல் என்று குறிப்பிட்டிருந்தால் கூட அதுவும் சரியில்லை. தமிழகம் கேரளத்தோடு மோதியதா? இல்லை, கேரளம்தான் தமிழகத்தோடு மோதியது. மோதிக் கொண்டுள்ளது.

இந்திய அரசை உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால் தமிழக விடுதலையை தனது முதன்மை இலட்சியமாக அறிக்கை வடிவில் பெ.தி.க. அறிவித்து இயங்க வேண்டும். அதை விடுத்து முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டத்தில் மலையாள இனவெறியர்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள தமிழர் இன எழுச்சியை மடை மாற்றுவதற்காக இந்திய அரசு எதிர்ப்பினைப் பயன்படுத்தக் கூடாது.

அடிபட்டு, அடிபட்டு, உரிமை இழந்து இழந்து, மலையாள இனவெறியர்களுக்கு எதிராகச் சீறிச் சினந்து எழுந்துள்ள தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் திசை திருப்பும் வகையில், ஆடுகளின் மோதல், இரத்தம் குடிக்கும் நரிக்கதை, சூத்திரர், பெண்ணுரிமை சொல்லாடல் போன்றவற்றை பெ.தி.க. பயன்படுத்துவது சரியன்று.

திராவிட இயக்கத்தின் திராவிட இனக்கொள்கை அன்றும் தமிழர் உரிமைகளுக்கு எதிராக இருந்தது இன்றும் எதிராக உள்ளது.

இன எழுச்சி பெற்றுள்ள தமிழர்கள் தமிழ்த்தேசியம் என்ற தமிழினத்திற்குரிய தத்துவப் பதாகையை ஏந்தினால் தான் நம் போராட்டங்களும் எழுச்சிகளும் மீண்டும் விரையமாகாமல் தமிழின உரிமைகளை மீட்கப் பயன்படும்!

முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்கும் போராட்டத்துடன் முதற்கட்டமாக இடுக்கி மாவட்டத்தை இணைக்கவும் இன அடிப்படையில் தமிழர்கள் ஒன்று திரள்வோம்! போராடுவோம்! தாக்குபவனைத் திருப்பித் தாக்குவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT