தெய்வம் தீண்டாமொழியாம் தமிழ்!
சீண்டுகிறார் தினமணி வைத்தியநாதன்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் நல்ல காலம் பிறந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் முகமூடி அணிந்து கொண்டு ஆரியம் பரப்பிய பலர் அம்முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு, அசல் முகத்துடன் தமிழை எதிர்க்க, தமிழர்களை எதிர்க்க முன்வந்துள்ளார்கள்.
இது கருதியே, தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்ல காலம் பிறந்துள்ளது என்று கூறுகிறேன்.
தமிழ் முகமூடி சாகசக்காரர்களுள் மிகமிகத் தந்திரசாலி “தினமணி” ஆசிரியர் வைத்தியநாதன். அவர் தமது மூல மொழியான – சமற்கிருதம் தமிழ்க் கோயில்களிலிருந்து வெளியேற்றப்படும் – காலம் தொடங்கிவிட்டதைப் பார்த்து மிகவும் பதறிப் போய் இருக்கிறார்.
மரபுப் பெருமை மிக்க ஒரு நாளிதழின் ஆசிரியர் என்ற அந்தத் தகுதியையும் மறந்துவிட்டு, எச். இராசாவின் தரத்துக்கு இறங்கி ஆசிரியவுரை ஒன்று 04.02.2020 அன்று எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டு இதழியல் துறையில் தனித்தடம் பதித்த மாபெரும் ஆளுமைகளான டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், ஐராவதம் மகாதேவன், இராம சம்பந்தம் போன்ற பெருமக்கள் அணிசெய்த தினமணி ஆசிரியர் இருக்கையில் வைத்தியநாதன் அமர்ந்துள்ளார்.
ஆரிய ஆதிக்கத்தின் அச்சாணி வேத வைதிக சனாதன ஆன்மிகம்! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் (05.02.2020) தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும், சமற்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தக்கூடாது என்ற குரல் இந்தத் தடவை ஓங்கி ஒலித்தது. உள்நாட்டுத் தமிழர் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்திட ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மற்ற நண்பர்களும் நாமும் தமிழ்வழிக் குடமுழுக்கு கோரிப் போட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழி வைத்தியநாதன் போன்றோர் வயிற்றை மிகவும் கலக்கி விட்டது. தமிழும் சமற்கிருதமும் சம அளவில் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் கடைபிடிக்கப்படும் என்று அறநிலையத்துறையும் தஞ்சை அரண்மனைத் தேவத்தானமும் மதுரை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தன. இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமியும், இரவீந்திரனும் இதைச் செயல்படுத்திக் காட்டிவிட்டு, செயலாக்க அறிக்கையை, குடமுழுக்கு நிறைவு பெற்றபின் நான்கு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்கள் தீர்ப்பில் நிபந்தனை போட்டிருந்தார்கள்.
“அண்ணா தி.மு.க. ஆட்சியிலா, சமற்கிருதத்தின் ஆதிக்கத்திற்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது” என்று ஆரியம் அதிர்ச்சியடைந்துள்ளது; ஆசாபங்கம் ஏற்பட்டு அலறுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் மட்டுமே நடத்த வேண்டும் என்று 28.12.2019 அன்று தஞ்சையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்தோம். அதற்கான வேண்டுகோள் மாநாட்டைத் தஞ்சையில் 22.01.2020 அன்று நடத்துவது என்றும் முடிவு செய்தோம். அம்மாநாட்டை வாழ்த்தியும் தமிழ்க் குடமுழுக்கை வலியுறுத்தியும் தி.மு.க., ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை உடனடியாக அறிக்கை வெளியிட்டன. மேலும், காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய முன்னணி முதலிய கட்சிகள் தமிழ்வழிக் குடமுழுக்கு கோரி அறிக்கை வெளியிட்டன.
எச். இராசா - வைத்தியநாதன் போன்ற ஆரியத்துவா அறிவாளிகள் திகைத்துப் போனார்கள். “தமிழ்நாட்டிற்குப் பயித்தியம் பிடித்துவிட்டதா? தமிழ்த்தேசியவாதிகள், திராவிடவாதிகள், இந்தியத்தேசிய வாதிகள், அதிலும் பொதுவுடைமைவாதிகள் அத்தனை பேரும் “தமிழர்” என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து, ஒற்றைக் குரலில் தமிழ்வழிக் குடமுழுக்கு கோருகிறார்களே! தமிழ் இன முழக்கம், தமிழ் மொழி முழக்கம் புதிய வலுப் பெற்றுள்ளதே!” என்று பொங்கிப் பொங்கி அவர்களுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. தமிழ் மொழியின் பேராற்றல் அவர்களை அச்சுறுத்தியது.
“ஆலயங்களில் தமிழ்வழிக் குடமுழுக்கு என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லை. கல்வெட்டோ, செப்பேடோ, ஓலைச் சுவடியோ, ஆவணங்களோ, பிரபந்த அங்கீகாரமோ எதுவுமே இல்லை” என்று ஆசிரியவுரையில் தினமணி வைத்தியநாதன் கூறுகிறார்.
சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடைபெற வேண்டுமென்று கல்வெட்டு கூறுகிறதா? செப்பேடோ, பழைய ஆவணமோ செப்புகிறதா? இல்லை!
அக்ரகாரம்தான் அர்ச்சனைப் பூசை செய்ய வேண்டுமென்று ஆகமம் கூறுகிறதா? எந்த ஆகமம் அவ்வாறு கூறுகிறது? என்றைக்காவது ஆகம மேற்கோள் காட்டியிருக்கிறார்களா?
தஞ்சைப் பெருவுடையார் கோயில் மகுட ஆகமப்படி கட்டப்பட்டது. அந்த மகுட ஆகமத்தில், பிராமணர்களைக் கொண்டு வடமொழயில்தான் பெருவுடையாருக்கு பூசை செய்ய வேண்டும், குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? தினமணி வைத்தியநாதன் மகுட ஆகமத்திலிருந்து சான்று காட்டினாரா? இனியாவது சான்று காட்டுவாரா? அவரால் சான்று காட்ட முடியாது!
உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது; இன்ன சாதியினர்தான், இன்ன மொழியில்தான் பூசை நடத்த வண்டும் என்று எந்த ஆகமமும் முன் நிபந்தனை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது (16.12.2015).
தமிழர்களாகிய நாங்கள், எங்கள் தெய்வங்களுக்குத் தமிழ் மந்திரம் ஓதி பூசை செய்ய, குடமுழுக்கு நடத்த சான்று காட்ட வேண்டும் என்று கொக்கரிக்கின்ற வைத்தியநாதன் வகையறா, தமிழ்க் கோயில்களில் தாங்கள் நாட்டாமை செய்வதற்கு வரலாற்றுச் சான்று காட்டுகின்றனரா?
சமற்கிருதம் மட்டுமே அர்ச்சனை மொழியாக இருக்க வேண்டும், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் கல்வெட்டு, செப்பேட்டுச் சான்று காட்ட வேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறார்கள். அவர்களின் பிராமணப் பிறப்பே சான்று என்ற ஆணவ ஆதிக்கம், திமிர்தானே இதற்கெல்லாம் அடிப்படை!
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”
என்று நம் தொல்காப்பியம் தமிழ் மந்திரம் பற்றிக் கூறுகிறது!
“கடவுள் ஏற்பு, மறுப்புப் பிரச்சினையல்ல. மொழிப் பிரச்சினை” என்கிறார்கள், ஆகமவழி குடமுழுக்கு எதிர்ப்பாளர்கள். சரி, ஏற்றுக் கொள்வோம். அப்படியானால், தமிழகத்திலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்களான இவர்கள் வலியுறுத்த முன்வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இவர்களது தாக்குதலில் இருக்கும் பின்னணி மொழி உணர்வு அல்ல; ஹிந்து மத எதிர்ப்பு என்பது வெளிப்படுகிறது” என்கிறார் தினமணி வைத்தியநாதன்.
பெருவுடையார் கோயிலில் “நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்ற மாணிக்கவாசகரின் போற்றி மந்திரத்தைச் சொல்லி – பூசை செய்யுமாறு கோருகிறோம். இப்படிச் சொன்னால், இது இந்து மத எதிர்ப்பு என்கிறார் வைத்தியநாதன்.
தேவாரம் பாடிய திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரரும், திருமந்திரம் தந்த திருமூலரும், திருவிசைப்பா வழங்கிய கருவூராரும், திவ்வியப்பிரபந்தம் படைத்த ஆழ்வார்களும் இந்துமத எதிர்ப்பாளர்களா? வைத்தியநாதன் வகையறாக்களின் வாதப்படி பார்த்தால், சிவநெறி – திருமால் நெறிச் சான்றோர்கள் – பெருமக்கள், தமிழில் தந்த தெய்விகப் பாடல்களும் மந்திரங்களும் இந்து மத எதிர்ப்புப் பாடல்களாக அல்லவா ஆகிவிடும்!
அடுத்த வினா, இந்து மதத்திற்கு வாத்தியார் வேலை பார்க்கும் பொறுப்பை வேத ஸ்மார்த்த பிராமணர்களுக்கு வழங்கியவர்கள் யார்? அதை மட்டுமாவது அடுத்த ஒரு கட்டுரையில் வைத்தியநாதன் விளக்க வேண்டும்.
“ஐயர்” என்றும், “பார்ப்பார்” என்றும் “அந்தணர்” என்றும், தமிழ் இன ஆன்மிகச் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மரபுவழிச் சிறப்புப் பெயர்களை வடக்கே இருந்து வந்த வேத பிராமண ஸ்மார்த்தர்கள் தங்களுக்குச் சூட்டி வேடம் புனைந்து கொண்டு, தமிழ்நாட்டில் திரிபு வேலை செய்தார்கள். இந்த பிராமணப் புனைவுகளை மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் மூதறிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.
கிறித்துவம் பரப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து வந்த ஆன்மிகர்கள், தங்கள் பெயரை தமிழ் மரபுப்படி மாற்றிக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக, போப் ஐயர், கால்டுவெல் ஐயர்! கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்ற பாதிரியார் வீரமாமுனிவர் என்றே தமிழர் ஆன்மிக மரபுப்படி பெயர் மாற்றிக் கொண்டார். அவ்வாறு தமிழர் மரபுப்படி பெயர் மாற்றிக் கொண்ட ஐரோப்பிய பாதிரியார்கள், வர்ணசாதிப் பிளவுகளை உருவாக்கவில்லை.
ஆனால், வடபுலத்திலிருந்து தமிழ் மண்ணிற்கு வந்த ஆரிய பிராமணர்கள், தமிழ்ச் சான்றோர்களின் சிறப்புப் பெயர்களான ஐயர், பார்ப்பார், அந்தணர் என்ற பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டு, தமிழர்களைச் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் கூறி, பிறப்பை வைத்து இழிவு கற்பித்தார்கள். தமிழர்களுக்குள் சூழ்ச்சியாக உயர்வு தாழ்வு கற்பித்து, இன ஒற்றுமையைச் சீர்குலைத்தார்கள்.
பிராமண வகுப்பில் பிறந்து, வர்ணாசிரமத்தை மறுத்து, சாதி ஏற்றத்தாழ்வைக் கைவிட்டு, மனித சமத்துவத்திற்குப் பாடுபட்ட சான்றோர்கள், நேர்மையாளர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள்; இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்.
பிராமண வகுப்பில் பிறந்த திருஞானசம்பந்தர் ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் சமநிலை நட்பு பூண்டொழுகினார். பிற்காலத்தில் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யர், மதுரைக் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்திய வைத்தியநாதய்யர், அறிஞர் அண்ணாவால் அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று போற்றப்பட்ட வ.ரா., கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களான ஏ.எஸ்.கே. அய்யங்கார், ஏ. பாலசுப்பிரமணியம், முரசொலி சின்னக்குத்தூசி என எத்தனை எத்தனை பெருமக்கள்! ஆனால், இவர்கள் எல்லாம் வர்ணாசிரமப் பிராமணர்களின் – வைதிகப் பிராமணர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது மிகமிகச் சிறு எண்ணிக்கையினர்!
பிராமண வகுப்பில் பிறந்த பெரும்பாவலர் பாரதியார் பிராமண ஆதிக்கக் கொடுமைகளை எதிர்த்து ஆவேசமாகப் பாடல்கள் தந்தவர். பூணூலைக் கழற்றி எறிந்து சமத்துவம் பேசியவர். கனகலிங்கம் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞரைத் தம் இல்லத்தில் சேர்த்து வைத்துக் கொண்டார். “நந்தனைப் போல் ஒரு பார்ப்பானை இந்த நானிலத்தில் கண்டதுண்டோ” என்று பாடினார். அந்தப் பாரதியாரைப் பெரும்பாலான பிராமணர்கள் ஒதுக்கி வைத்தனர். புதுச்சேரியிலிருந்து வந்து மாமனார் ஊரான கடையத்தில் தங்கிய போது, பாரதியாரை அக்ரகாரத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர் பிராமணர்கள். அக்ரகாரத்திற்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலில் பாரதியார் தங்க நேர்ந்ததும் உண்டு!
சமூகத்தில் மற்ற எல்லாரையும்விட தாங்களே உயர்வானவர்கள்; தலைமையானவர்கள், மற்ற அனைவரும் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள், தங்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்ற கற்பிதத்தை, தங்களின் மேலாதிக்கத்தை உருவாக்கிக் கொள்ள பிராமணர்கள் பயன்படுத்திய மொழி சமற்கிருதம் - சமற்கிருத வேதங்கள், உபநிஷத்துகள் – சமற்கிருதப் புராணங்கள்! ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாக வாங்கியது, தவம் செய்த சம்பூகனின் தலையை வெட்டியது போன்ற சமற்கிருதக் கதைகள் ஏராளம். சமற்கிருதம் தேவமொழி என்று கயிறு திரித்தனர்; தமிழ் நீச மொழி என்று இழிவுபடுத்தினர். இந்த வஞ்சகத் தந்திரங்களை – வடமொழி மூலம் செயல்படுத்தித்தான் தமிழர்களை பிராமணர்கள் இழிவுபடுத்தினார்கள்.
இன்று தமிழ்நாட்டில் தெய்வங்கள் முன் ஒலிக்கக் கூடாத நீசமொழி – தீண்டாமொழி தமிழ் என்றுதான் தினமணி வைத்தியநாதன், பா.ச.க.வின் எச். இராசா போன்றவர்கள் குதிக்கிறார்கள்; கொதிக்கிறார்கள்!
இந்து மதம் என்ற பெயர் வெள்ளையர் ஆட்சி வழங்கிய பெயர். அப்பெயர் பிராமணர்கள் உருவாக்கியதில்லை. சமற்கிருத வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் எதிலும் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. அதேபோல் தமிழ் மொழியிலும் பழங்காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது.
இந்து மதத்திற்குத் தாங்கள்தாம் தலைவர்கள், தாங்கள்தாம் ஆண்டவனின் அந்தரங்கச் செயலாளர்கள் என்பதுபோல் பிராமணர்கள் உரிமை கொண்டாட இந்து மதத்தில் எங்கேனும் விதிகள் இருக்கின்றனவா? இல்லை! இந்து மதத்திற்கு ஒற்றைத் தலைமைத் தெய்வம் இல்லை; ஒற்றைப் புனித நூல் இல்லை. ஒற்றைத் தலைமை பீடம் இல்லை. பலவகைத் தெய்வங்கள், பலவகைப் புனித நூல்கள், பல வகை வழிபாட்டு முறைகள், பல வகை இனங்கள், பல வகை மொழிகள் இருக்கின்றன. இந்து மத நூல்களில் வர்ணசாதி கருத்துகளும், உயர்வு தாழ்வும் இருக்கின்றன. அதேபோல், வர்ணசாதி, உயர்வு தாழ்வு எதிர்ப்புக் கருத்துகளும் இருக்கின்றன.
கடவுள் மறுப்பாளரைக் கூட இந்து மதத்திலிருந்து நீக்குவதற்கு வைத்தியநாதன் வகையறாவுக்கோ அல்லது வேறு எந்த இந்து மதத்தின் எந்தப் பிரிவு பீடத்திற்குமோ, அதிகாரம் இல்லை. தமிழ் நாத்திகர்களை மட்டுமல்ல, சமற்கிருத நாத்திகர்களையும் அக்ரகாரம் மத நீக்கம் செய்ய முடியாது. “லோகாய்தவாதம்” என்ற கடவுள் மறுப்புக் கோட்பாடு சமற்கிருத மொழியிலும் உண்டு!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடவுள் ஏற்பாளர்களையும், கடவுள் மறுப்பாளர்களையும் கொண்டது. இந்து மதம் – தமிழர்களின் மதம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்களின் மதங்களாக இந்து மதம், முசுலிம் மதம், கிறித்தவ மதம் ஆகியவை இருக்கின்றன. சிறு எண்ணிக்கையில் சமண, பௌத்தர்களும் தமிழர்களில் இருக்கிறார்கள்.
தமிழர் தெய்வத்திற்குத் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று நாங்கள் குரல் எழுப்பினால், எங்களை இந்து விரோதிகள் என்று கூறுவதற்கு எச். இராசா – வைத்தியநாதன் வகையறாக்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ன உரிமை இருக்கிறது? தமிழில் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று கூக்குரலிடுகின்ற எச். இராசா – தினமணி வைத்தியநாதன் போன்றோர் தமிழ் விரோதிகள்! இன்னொரு வகையில் இந்து மத வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் தடையாய் உள்ள இந்து விரோதிகள்! மறைமுகமாக மாற்று மத வளர்ச்சிக்குத் துணை போகிற இந்துமதத் துரோகிகள்! ஆரிய ஆதிக்கவாதக் குறுங்குழுவினர்!
ஐரோப்பாவில் கிறித்துவ மதத்தைக் கருவியாக வைத்துக் கொண்டு, ரோமாபுரிப் போப்பரசர்கள் எதேச்சாதிகாரம் செய்தார்கள். இலத்தீன் மொழியில் மட்டுமே தேவாலயங்களில் வழிபாடு நடத்த வேண்டும் என்றார்கள். ரோமாபுரிப் போப்பரசர்களின் பிடியிலிருந்து ஒவ்வொரு நாடாக விடுதலை அடைந்தது. ஆனாலும் இலத்தீன் அந்தந்த நாட்டு மேட்டுக் குடிகளின் ஆதிக்கத்திற்கான கருவியாகத் தொடர்ந்தது. இங்கிலாந்தில் நீதிமன்றங்களில், அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் பேசினால் தண்டித்தார்கள். மறுமலர்ச்சிக் கால வளர்ச்சிக்குப் பின், இலத்தீன் நீக்கப்பட்டு அவரவர் தாய்மொழி ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிமொழியானது.
கடைசியாகக் கிறித்துவத் தேவாலயங்களில் அவரவர் தாய்மொழியில் தொழுகை நடத்தலாம் என்ற ஆணையை 1960களில் போப்பரசர் நிர்வாகமே பிறப்பித்தது. அவ்வாறான சீர்திருத்தம் – இந்துக் கோயில்களில் இருந்து சமற்கிருதத்தை நீக்கும் மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது. சமற்கிருத ஆதிக்கம் என்பது ஆரிய பிராமண சமூக ஆதிக்கத்தின் வடிவமாகும்!
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்ப் புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுவது திராவிட இயக்கத்தினரின் அப்பட்டமான பொய் என்று சத்தியமூர்த்தியான தினமணி வைத்தியநாதன் கூறுகிறார். தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள், திருப்பாவை போன்றவை சிவ – வைணவக் கோயில்களில் ஓதப்படுகின்றன என்கிறார்.
அவர் வாதப்படி சிவநெறி, திருமால்நெறி தமிழ் மந்திரப் பாடல்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஓதப்படும்போது, தமிழ்வழியில் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று வைத்தியநாதன் ஆசிரியவுரை எழுதியது ஏன்? ஏன் இந்தத் தன் முரண்பாடு? திருடன் ஏதாவது தடயம் விட்டுச் செல்வான் என்பதுபோல், வைத்தியநாதன் இந்தத் தருக்கத்தில் தமிழுக்கெதிரான தனது தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்!
கருவறைக்கு வெளியேயும், கோயில் குடமுழுக்குக் கலசத்திற்கு அப்பாலும், சைவ – வைணவப் பாடல்களைப் பாடிக் கொள்ளுங்கள்; கருவறைக்குள் – கலச நீராட்டில் “நீச பாஷை”யான தமிழை அனுமதிக்க முடியாது என்பதுதான் தினமணி வைத்தியநாதன் கூற வரும் வர்ணாசிரமவாதம்!
இந்த அந்தரங்க இலட்சியத்தை மூடி மறைத்து பூ சுற்றுகிறார் வைத்தியநாதன். ஆகமம் – மரபு ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கும் மனித சமத்துவத்திற்கு எதிராக இருந்தால், அவற்றைக் கடைபிடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2015 திசம்பரில் வழங்கிய தீர்ப்பு உள்பட பல தீர்ப்புகளில் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது.
இந்துத் தமிழ்க் கோயில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் கருவறைக்குள் நுழையக் கூடாது; கொடிக் கம்பம் தாண்டிக் கோயிலுக்குள் வரக் கூடாது என்று ஆகமங்கள் கூறுவதாக ஐயா சத்தியவேல் முருகனார் கூறுகிறார். ஆனால், ஆரிய பிராமணர்களோ கருவறைக்குள் தமிழ் நுழையக் கூடாது என்கிறார்கள்! என்ன கொடுமை! தென்னாப்பிரக்காவில் குடியேறிய வெள்ளை இனத்தவர்கள், மண்ணின் மக்களாகிய கருப்பின மக்களை இன ஒதுக்கல் செய்த கொடுமை போல் அல்லவா இருக்கிறது! இங்கேயும் நெல்சன் மண்டேலாக்கள் தேவை!
தமிழர்களின் வற்புறுத்தலால் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தத் தமிழ்நாடு அரசு ஒத்துக் கொண்டது குற்றம் என்கிறார் வைத்தியநாதன். “இதை பெரிய கோயில் எழுப்பிய “ஸ்ரீ ராஜராஜ தேவர்” ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்” என்று தமது ஆசிரியவுரையை முடித்துள்ளார் வைத்தியநாதன். ஆரிய சூழ்ச்சியின் “அழகை”ப் பாருங்கள்! “அழகாக முடிச்சவிழ்த்தால் அனுமதிப்பார் உண்டோ” என்று ஆரிய சூழ்ச்சி பற்றி அன்று பாடினார் நம் பாவேந்தர்! இன்றும் அது பொருந்துகிறது!
சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழ் அழிப்பு நோக்கத்தோடு மறைத்து வைத்திருந்த, தேவாரத்தை மீட்டுக் கொண்டு வந்த தமிழ்ப் பேரரசன், திருமுறைகளை முதல் முதலாகத் தொகுத்து, “திருமுறை கண்ட சோழன்” என்று சிறப்புப் பட்டம் பெற்ற தமிழ் வேந்தன், தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பி அங்கு பூசை செய்வோர் குழுவை உருவாக்கி அதற்குப் பவனப்பிடாரன் என்ற தமிழ் இனச் சான்றோரை தலைவராக அமர்த்திய சோழப் பேரரசன், தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கென்று தமிழ் மந்திரங்கள் ஓதுவார் 48 பேரை அமர்த்திய தமிழ் மாமன்னன் இராசராசன், தமிழில் குடமுழுக்கு நடந்தபோது துயரப்பட்டிருப்பாராம்! பொய் சொல்ல அஞ்சாதே என்பது ஆரியப் பொன்மொழி!
கொம்புத்தேன் கசக்கிறது என்று கொடிய மனத்தோர் கூறுகின்றனர்; கோபுரக் கலசத்தில் தமிழ் ஒலித்து, தமிழன் ஒருவன் குடம் கவிழ்த்து நீராட்டிய போது, கூடி நின்ற இலட்சக்கணக்கான மக்கள் கடல் அலையென ஆர்ப்பரித்து கையொலி எழுப்பினர். அப்போது, அந்த ஒவ்வொரு தமிழனிலும், தமிழச்சியிலும் பேரரசன் இராசராசன் மறுபிறப்பு கண்டான்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment