தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை
மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்!
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவும் மற்ற நண்பர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் இந்து அறநிலையத்துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் குடமுழுக்கு தமிழ் வழியிலும், சமற்கிருத வழியிலும் சம அளவில் நடத்தப்படும் என்று உறுதி கொடுத்தன. அதன்படி, பெருவுடையார் கோயிலில் சமற்கிருத மந்திரங்கள் சொல்வோரும், தமிழ் ஓதுவார்களும் வழிபாடுகள் செய்து வருகின்றனர். வழிபாட்டு மந்திரங்களும் பாடல்களும் ஓதி வருகின்றனர்.
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கடந்த 01.02.2020 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரையும், விழாக்குழுத் தலைவர் திரு. துரை. திருஞானம் அவர்களையும் இன்று (03.02.2020), தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களையும், அரண்மனை தேவஸ்தான அதிகாரியையும், விழாக் குழுவினரையும் சந்தித்தோம். நானும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ. இராசேந்திரன், வழக்கறிஞர் அ. நல்லதுரை, இறைநெறி இமயவன், ந. கிருஷ்ணக்குமார், முனைவர் துரை. செந்தில்நாதன், வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பி. தென்னவன், மா. இராமதாசு ஆகியோர் இதற்காகச் சென்றிருந்தோம்.
வேள்விச் சாலையில் (யாக சாலையில்) தமிழ் ஓதுவார்களும், சமற்கிருத சுலோகங்கள் சொல்வோரும் முறையே தமிழிலும், சமற்கிருதத்திலும் ஓதி வருகின்றனர். நடராசர் சன்னதியில் முழுக்க முழுக்க தமிழ் ஓதுவார்கள் பாடி வருகின்றனர். அதேவேளை, வேள்விச் சாலைக்குள் வேதிகை மற்றும் குண்டம் இருக்குமிடத்தில் தெய்வப் படிமங்களை காலையில் எழுந்தருளச் செய்யும் வழிபாட்டில் சமற்கிருத சுலோகங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. தமிழ் மந்திரம் ஓதப்படவில்லை.
இந்தக் குறைபாட்டை விழாக்குழுத் தலைவர் அவர்களிடமும், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களிடமும், அரண்மனை தேவஸ்தான அதிகாரியிடமும் தெரிவித்துள்ளோம். நாளையிலிருந்து வேதிகையிலும், குண்டத்திலும் தமிழ் மொழி மந்திரங்களும் சொல்ல ஏற்பாடு செய்வோம் என உறுதி கூறியிருக்கிறார்கள். அதற்கான, தமிழ் மந்திரங்களை தமிழ்ச் சான்றோர்களிடமிருந்து பெற்று, தட்டச்சு செய்து உரிய அதிகாரிகளிடமும், விழாக் குழுத் தலைவரிடமும் கொடுத்துள்ளோம்.
அடுத்து, பெருவுடையார் கோயில் வளாகத்திற்குள் தென்னகப் பண்பாட்டு மையம் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறது. பல்வேறு மொழிகளில் அந்நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். குடமுழுக்குக் காலமானதால், திருமுறைகள் போன்ற சிவ வழிபாட்டுப் பாடல்களையும், அதையொட்டிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்துமாறு தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென்று உரிய பொறுப்பாளர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்.
அடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி கருவறை, கோயில் கலசம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் மந்திரங்கள் சொல்ல தமிழ் அர்ச்சகர்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். இவை அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுமாறு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் குடமுழுக்கு விழா பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொண்டோம்.
தமிழ்வழிக் குடமுழுக்கில் அக்கறையுள்ள நண்பர்கள் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகிறதா என்று நேரில் கவனித்து அதில் குறைபாடு இருந்தால் உரிய அதிகாரிகளிடமோ, பொறுப்பாளர்களிடமோ அதிலுள்ள குறைபாடுகளைப் போக்க கோரிக்கை வைப்பது தேவையானது. அதேவேளை, நடைமுறையைச் சரி பார்க்காமல் தமிழ்வழியில் குடமுழுக்கு நடைபெறவே இல்லை என்பதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கருவறையிலிருந்து கலசம் வரை சொல்லக்கூடிய தமிழ் மந்திரங்களை தனிச் சிறு நூலாக தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு அச்சிட்டுள்ளது. அந்த நூல்கள் குடமுழுக்கு விழாவுக்கு வரும் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/ thanjaikovilurimai
ஊடகம் : www.kannottam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
Post a Comment