தில்லி வன்முறைகளை பா.ச.க.வினர்
தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது!
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
தில்லியில் கடந்த 23.02.2020 முதல் நடந்து கொண்டிருக்கும் மதப்படுகொலைகளும், மதக் கலவரங்களும், வீடுகள் – கடைகள் கொளுத்தப்படுவதும், தமிழ்நாட்டிலும் தொடங்கி விடுமோ என்ற அச்சம் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், மக்கள் தொகைப் பதிவேடு, என்.ஆர்.சி. ஆகியவற்றில் இந்தியாவில் குடியுரிமைப் பதிவில் முதல் தடவையாக மதத்தை அடிப்படையாக்கி செயல்படுத்த உள்ளார்கள். பா.ச.க ஆட்சியினரின் இவ்வாறான இசுலாமிய எதிர்ப்பு - ஆரியத்துவா மதத் தீவிரவாதம் (இந்துத்துவா) ஆகியவற்றைக் கண்டித்து, அனைத்திந்தியா முழுவதும் இசுலாமிய மக்களும், இந்து சனநாயகவாதிகளும் சனநாயக வழியில் பெருந்திரள் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.
சனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி ஆட்சி, மக்களின் மாற்றுக் குரலுக்கு செவி கொடுத்து இணக்கமான தீர்வு காண முயற்சி எடுக்காமல், அரசதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் போராட்டங்களை வன்முறை மூலம் முறியடிக்கும் சட்ட விரோதச் செயல்களில் இறங்கியுள்ளது.
இதன் தொடக்கமாக, இசுலாமிய மக்கள் அறவழியில் நடத்தும் காத்திருப்புப் போராட்டக் களங்களில் பா.ச.க.வினர் எதிர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். கடந்த 23.02.2020 முதல் தில்லியில் பா.ச.க.வினரின் தூண்டுதலால் நடந்த வன்முறைகளில் சற்றொப்ப 40 பேர் கொல்லப்பட்டார்கள். இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இந்த வன்முறையைத் தொடங்கி வைக்கும் வகையில் பா.ச.க.வின் நடுவண் அமைச்சர் அனுராக் தாக்குர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என ஏற்கெனவே தில்லிப் பொதுக்கூட்டத்தில் பேசினார். பா.ச.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மா, “சாகின்பாக் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கொல்ல வேண்டும், முசுலிம் பெண்களை பாலியல் வன்முறை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசினார். பா.ச.க.வின் தில்லி பகுதித் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, “சாகின்பாக் போராட்டக்காரர்களை வெளியேற்ற கெடு விதிக்கிறேன். அதற்குள் வெளியேற்றவில்லையென்றால், நாங்கள் மோதுவோம்! காவல்துறைக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்” என்று வலைத்தளங்களில் எழுதினார். பா.ச.க. நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசியோர் “துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்” என்ற முழக்கத்தைப் பொது முழக்கமாக்கினர்.
எனவே, பா.ச.க. தலைவர்கள் வெளிப்படையாகவே இந்த மதப்படுகொலைகளை – வன்முறைகளைத் தூண்டிவிட்டுள்ளனர். உண்மையான இந்தக் குற்றவாளிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்த வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு ஆணையிடுமாறு வேண்டுகோள் வைத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கை, 26.02.2020 அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி முரளிதர், மேற்கண்ட மூன்று பேர் மீதும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேட்டு, கடுமையாக விமர்சித்தார். அந்த விசாரணையின்போதே, இந்திய அரசின் முதன்மை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) மேற்படி நீதிபதியின் அணுகுமுறையைக் கடுமையாக எதிர்த்தார்.
மேற்படி வன்முறைகளைத் தடுக்க – கட்டுப்படுத்த – குற்றங்களின் மீது தில்லி காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மறுநாள் (27.02.2020) அறிக்கையாகக் கேட்டிருந்தார். இன்று விசாரணை தொடர இருந்தது. இதற்குத் தண்டனையாக, பா.ச.க. ஆட்சி 26.02.2020 அன்று இரவு மேற்படி நீதிபதி முரளிதர் அவர்களை தில்லியிலிருந்து பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது மோடி ஆட்சி! இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி துணை போயுள்ளார்.
செர்மனியில் 1930களில் இட்லர் ஆட்சி நீதித்துறை, காவல்துறை, படைத்துறை அனைத்தையும் தன் கட்சியின் வன்முறைத் தொண்டர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுபோல், தன் கட்சிக்காரர்களின் வன்முறைகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாதபடி தடை போட்டுள்ளது மோடி ஆட்சி. நீதிபதிகள் சட்டப்படி செயல்பட முடியாத பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அதே 26.02.2020 அன்று, தில்லி வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், ஜோசப் ஆகியோர் தில்லி வன்முறைகளை கண்டனம் செய்யும் தொனியிலும், காவல்துறையின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி தெரிவிக்கும் வகையிலும் பேசியதற்காக இந்திய அரசின் முதன்மை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “இப்படியெல்லாம் நீங்கள் பேசக்கூடாது” என்று எச்சரித்தார். குறிப்பாக, தில்லி வன்முறைகளை “துரதிர்ஷ்டமான (Unfortunate) நிகழ்வுகள்” என்று மேற்படி நீதிபதிகள் கூறியபோது, இந்த சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகளுக்குக் கட்டளையிடும் தொனியில் துஷார் மேத்தா கூறினார்.
தில்லி மத வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையில் முசுலிம்களும், சிறுபான்மை எண்ணிக்கையில் இந்துக்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமான இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், நாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் ஆவர். உள்துறை அமைச்சர் அமித்சா இந்த வன்முறைகளை ஏன் கண்டிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அமித்சா கண்டித்தால் அவரை, “நம்பிக்கைத் துரோகி” என்று தில்லி வன்முறையாளர்கள் சாடுவார்கள் அல்லவா?
தமிழ்நாட்டிற்கும் ஆபத்து
-------------------------- ----------------
தில்லி வன்முறையைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றுவோம் என்று மறைமுகமாகவும், நேர்முகமாகவும் பா.ச.க.வின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள எச். இராசா உள்ளிட்ட சிலர் பொது மேடைகளில் பேசி வருகிறார்கள்; சமூக வலைத்தளங்களில் சவால் விட்டு எழுதுகிறார்கள். ஏற்கெனவே இவர்கள் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு இந்து மத நிகழ்வுகளை வன்முறைக் கலவரங்களாக மாற்றியவர்கள்.
நாளைக்கு (28.02.2020) பா.ச.க.வினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தவுள்ள பேரணிகளின் மூலம் தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் – என்னென்ன வழிகளில் வன்முறைகள் அரங்கேறுமோ என்று தமிழ்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டில் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment