உடனடிச்செய்திகள்

Wednesday, July 28, 2021

மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! பெ. மணியரசன் அறிக்கை!



மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!


கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைகட்டுவதற்குரிய முன் ஒப்புதல்களை இந்திய அரசு கொடுத்து விட்டது என்ற உண்மை 26.07.2021 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் கூறியதிலிருந்து தெரிய வருகிறது. பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மேக்கேத்தாட்டு அணை குறித்து கேட்ட வினாவுக்கு விடை அளித்த ஒன்றிய அமைச்சர் செகாவாத் கூறிய செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இதோ அமைச்சரின் கூற்று:

“மேக்கேத்தாட்டில் அணைகட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியதை அடுத்து இந்திய அரசின் நீராற்றல் ஆணையத்தின் (CWC) ஆய்வுக்குழு (Screening Committee) 24.10.2018 அன்று அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு அனுமதி அளித்தது. அதற்கான சில நிபந்தனைகளையும் ஆய்வுக்குழு விதித்தது. கர்நாடக அரசு 20.01.2019 அன்று விரிவான திட்ட அறிக்கையை (DPR) நடுவண் நீராற்றல் ஆணையத்திடம் அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையை உடனடியாக நடுவண் நீராற்றல் துறை காவிரி ஆற்று நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) அனுப்பி தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுமாறு கோரியது”. தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பைச் சட்டை செய்யாமல் மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு பார்த்து வந்துள்ளது என்பதற்கு இது சான்று!

மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் தேக்கிக் கொள்வார்கள் என்று கூறி தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுக் கட்சிகளும் அத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன.

மேக்கேத்தாட்டு அணைத்திட்டத்தைத் தடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி 05.12.2014, 27.03.2015 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டப் பேரவை ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றி இந்தியத் தலைமை அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. உழவர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மேக்கேத்தாட்டு அணையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.

2018 செப்டம்பர் 4 ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை அமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதி மேக்கேதாட்டு அணைத்திட்டம் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய காவிரித் தீர்ப்புக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டியுள்ளார். அந்த மடலில், கர்நாடக அரசு தயாரித்துள்ள மேக்கேதாட்டு அணைக்கான சாத்தியக் கூறு அறிக்கையை (Feasibility Report) நடுவண் நீராற்றல் துறை ஏற்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.

தமிழ்நாட்டின் இத்தனை எதிர்ப்புகளையும் இடது கையால் புறந்தள்ளி விட்டு, முதல் கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டமாக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு கோரிப் பெற்றுள்ளது ஒன்றிய அரசின் நீர் ஆற்றல் துறை!

அதுமட்டுமின்றி, அந்த விரிவான திட்ட அறிக்கையைச் செயல்படுத்தும் வழிமுறையாக உடனடியாக, அதனை 20.01.2019 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறக் கோரியுள்ளது.

இவை அனைத்திற்குமான ஒப்புதல் வாக்குமூலத்தை மாநிலங்களவையில் அளித்துள்ளார் மோடி அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத்! மோடி – அமித்சா ஒப்புதல் இல்லாமல் இவை அனைத்தும் நடந்திருக்காது. 

இதே கசேந்திர சிங் செகாவாத்தை அண்மையில் புதுதில்லியில் 06.07.2021 அன்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்தித்து மேக்கேதாட்டு அணையை அனுமதிக்கக் கூடாது என்று மனுக் கொடுத்தார். வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியத் துரைமுருகன் “நீராற்றல் துறை அமைச்சர் கொடுத்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது வெற்றி” என்று கூறினார். அதே இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள் “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் ஒன்றிய அமைச்சர் பேச்சு இருக்கிறது” என்றார்.

துரைமுருகன் தலைமையிலான் குழு புதுதில்லியில் மனுக் கொடுப்பதற்கு முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.06.2021 அன்று புதுதில்லியில் தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டுக்கு அனுமதிக் கொடுக்கக் கூடாது என்று மனு கொடுத்தார்.

இத்தனைக்கும் பின் எல்லாவற்றையும் ஒன்றுமில்லை என்று போட்டு உடைத்து விட்டார் கசேந்திர சிங் செகாவாத். கர்நாடகத்திற்கு மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகிறோம் என்று கூறிவிட்டார்.

கடந்த காலங்களில் காங்கிரசு ஒன்றிய அரசு, கர்நாடகம் சட்ட விரோதமாக ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி அணைகள் கட்ட அனுமதித்தது. அதே ஓரவஞ்சனையில் இப்போது மேக்கேத்தாட்டு அணையைக் கட்டி முடிக்கக் கர்நாடகத்திற்கு பா.ச.க. அரசு துணை செய்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி சட்டவிரோத அணைகள் கட்டப்பட்டன. அதே பாணியில் இப்போதும் தமிழ்நாட்டை தி.மு.க. அரசு ஏமாற்றக் கூடாது. தமிழ்நாட்டு மக்களும் ஏமாறக் கூடாது. 

மேற்கண்டவாறு மோடி அரசு மேக்கேதாட்டு அணைகட்ட ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுப்புச் செய்த போதெல்லாம் எடப்பாடி அரசு அதை எதிர்க்கவில்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்காத நிலையில் அதே அரசின் இன்னொரு பிரிவான நீராற்றல் துறை இவ்வளவு வேகமாக அந்த அணைக்கு அனுமதி கொடுத்து செயல்படுவது எப்படி?

காவிரி நீர் வரவில்லை என்றால் 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் குடிநீர் இல்லை; 15 மாவட்டங்களில் பாசனம் இல்லை என வெகுண்டெழுந்து வெகுமக்கள் போராடி மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காவிரிக் காப்பு போராட்ட நாள் என ஒரு நாளை வரையறுத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பேரணிகள் - ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். உடனடித் தடை ஆணை பெற உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.       


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT