உடனடிச்செய்திகள்

Sunday, May 11, 2025

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை "மகளிர்ஆயம்" வரவேற்கிறது! மகளிர் ஆயம் தலைவர் அருணா அறிக்கை!



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை
"மகளிர்ஆயம்" வரவேற்கிறது!


மகளிர் ஆயம் தலைவர் அருணா அறிக்கை!




2019இல் தமிழ்நாட்டையே உலுக்கிய 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை' வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். இத் தீர்ப்பை மகளிர்ஆயம் வரவேற்கிறது!
அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளால் பல நாட்களாக நடந்தேறிய இக் கொடுமையை சமூக வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்!
இதனைத் தொடர்ந்து தங்கள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தியவர்களை அடையாளம்காட்டி இறுதிவரை துணிவுடன் நின்ற 8 இளம்பெண்களுக்கும் வாழ்த்துகள்! பெண்களின் உடலை புனிதமாகவும் பண்டமாகவும் 'கற்பு' என்ற பெயரில் கட்டிவைத்திருக்கும் இச்சமூகக் கட்டுகளைத் தகர்த்து 'எம் உடல் மாண்புடைய மனித உடல்' என்று இறுதிவரை தெறிப்புடன் நின்ற இவர்கள் தமிழ்நாட்டு மகளிர் அனைவருக்கும் 'செயல் மாதிரி' (Role model)!
இவ்வழக்கை நேர்மையாக நடத்தித் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவிக்கும் வாழ்த்துகள்!
தீர்ப்பு வெளியானதும் அன்றும் இன்றும் ஆளும்கட்சிகள் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இதனைத் தங்கள் கட்சி ஆட்சியின் சாதனையாக வாய்ச்சவடால் அடிக்கின்றன. இவர்களை மகளிர் ஆயம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்நீதி ஆளும் கட்சிகளால் கிடைத்ததல்ல! மாறாக இக்கொடுமை கண்டு வெகுண்டெழுந்த மக்கள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் கிடைத்தது. இவ் வன்கொடுமைக்கு எதிராக மகளிர் ஆயமும் களம் கண்டது.
இதுபோன்று தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல பாலியல் வன்கொடுமைகள் பெண்கள் மீது நடந்தேறியுள்ளன. இவை அனைத்திற்கும் சட்டத்தின் முன் நியாயம் கிடைக்க மகளிர் ஆயம் விழைகின்றது.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

 

“இந்தியாவை உண்மையான கூட்டரசாக மாற்றுக!” தஞ்சையில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற “கூட்டரசுக் கோட்பாடு” சிறப்பு மாநாட்டில் தீர்மானம்!



            
 







“இந்தியாவை உண்மையான கூட்டரசாக மாற்றுக!”


தஞ்சையில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற
“கூட்டரசுக் கோட்பாடு” சிறப்பு மாநாட்டில் தீர்மானம்!





“இந்தியாவை உண்மையான கூட்டரசாக மாற்ற வேண்டும்!” என தமிழ்த்தேசியப் பேரியக்கம் தஞ்சையில் நேற்று (10.05.2025) பேரெழுச்சியுடன் நடத்திய “கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் தொடர்ச்சியான தாக்குதலில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவை முழுமையான கூட்டாட்சியாக அறிவிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, அதற்கான கூறுகளை விவாதிக்கும் வகையில், தஞ்சையில், நேற்று (மே 10 – 2025) சனிக்கிழமையன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “கூட்டரசுக் கோட்பாடு” - சிறப்பு மாநாடு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்போடு முழுநாள் நிகழ்வாக பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சி
--------------------------
காலை 9 மணியளவில், முருகன்குடி திருவள்ளுவர் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு நாட்டுப்புற இசை நிகழ்வுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனையடுத்து, பிள்ளையார்பட்டி சகோதரிகள் சீ. பாரதி - சீ. யுவசிறீ ஆகியோர் பாவேந்தரின் “வாழ்வினில் செம்மையை” - தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அழகுறப் பாடினர். இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை அவர்கள் மாநாட்டிற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்தோரை வரவேற்று, வரவேற்புரையாற்றினார். இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
கண்காட்சிகள்
--------------------
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முகாமையான போராட்டங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான பேரியக்க வரலாற்றுக் கண்காட்சியை, த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் வெ. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தொன்மையை விளக்கும் தமிழர் வரலாற்று கண்காட்சியை, பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பல்வில்திரையன், கரூர் தினேசு ஆகியோர் முன்னிலையில் காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர் திரு. சாமி. கரிகாலன் அவர்கள் திறந்து வைத்தார். ஏராளமானனோர் இக்கண்காட்சிகளைப் பார்வையிட்டு செய்திகளை உள்வாங்கினர்.
மாநாட்டின் நோக்கங்கள் குறித்து, த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் கோ. மாரிமுத்து அவர்கள் உரையாற்றினார். இந்தியாவை முழுமையானக் கூட்டரசாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டுப் பாடல் வெளியீடு
--------------------------------------
“கூட்டரசுக் கோட்பாடு” மாநாட்டின் நோக்கங்களை விளக்கும் வகையில், பாவலர் நா. இராசாரகுநாதன் அவர்கள் எழுதி, திருச்சி பொறியாளர் முத்துக்குமாரசாமி அவர்கள் பாடி – இசையமைத்த மாநாட்டின் பாடல் காணொலியை இயக்குநர் மு. களஞ்சியம் அவர்கள் மாநாட்டு அரங்கில் வெளியிட, ஊடவியலாளர் அருள்மொழிவர்மன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் முன்னிலை வகித்தார். திரையிடப்பட்ட அப்பாடலை பலத்த கையொலி எழுப்பி பார்வையாளர்கள் வரவேற்றனர்.
தீர்மானங்கள்
-------------------
”தேசிய இனத் தாயகங்களின் முழுமையான கூட்டரசாக இந்திய ஒன்றியத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டுப் பாதுகாப்பு, நாணய அச்சடிப்பு, வெளியுறவு, அனைத்திந்திய தன்மை வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த அதிகாரம் மட்டுமே கூட்டாட்சி அரசுக்கு வழங்கப்பட வேண்டும். இனத் தாயகங்களுக்கு வகுக்கப்படும் அதிகாரத்தில் கூட்டாட்சி அரசு குறுக்கிடும் அதிகாரம் கூடாது. அந்தந்த அதிகார மட்டத்தில், அந்தந்த அரசமைப்பு உறுப்பும் இறைமை கொண்டதாக இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசுக்கும் இனத்தாயக அரசுக்கும் பொது அதிகாரம் எனக் கூறும் ஒத்திசைவு அதிகாரப்பட்டியல் இருக்கவே கூடாது” என்ற மாநாட்டின் முதன்மைத் தீர்மானத்தை, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன் முன்மொழிய, பலத்த கையொலி எழுப்பி அனைவரும் வரவேற்றனர்.
இந்தியாவை “பாரதம்” என்று சமற்கிருத புராணப் பெயரால் அழைப்பதோ, தேசிய இனத் தாயகங்களை “மாநிலங்கள்” என்று குறுக்கி அழைப்பதோ கூடாது, இந்தியாவை அதன் புவி அரசியல் பெயரால் “இந்தியா” எனபதாக மட்டுமே அழைக்க வேண்டும், மாநிலங்களை இனத் தாயகங்கள் என வரையறுக்க வேண்டும், ஆளுநர் பதவி கூடாது, வரி அதிகாரம் அனைத்தும் இனத் தாயக அரசுகளுக்கே வேண்டும் என்பன உள்ளிட்ட “கூட்டரசு”த் தீர்மானங்களை பேரியக்கத் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு தோழர்கள் முன்வைத்தனர்.
“தமிழர் வரலாற்று வளம்!” - கருத்தரங்கம்
--------------------------------------------------------
இதனையடுத்து, மாநாட்டின் முதல் கருத்தரங்காக “தமிழர் வரலாற்று வளம்!” கருத்தரங்கு நடைபெற்றது. சேலம் – தமிழ்வேத ஆகமப் பாடசாலை மற்றும் அரசயோகி கருவூறார் தமிழின குருபீடத்தின் நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் முன்னிலை வகித்துப் பேசினார். ”தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் அவதூறும்” என்ற தலைப்பில், தமிழிய வரலாற்று ஆய்வாளர் திரு. இரா. மன்னர்மன்னன் அவர்களும், ”தமிழர் ஆன்மிக மொழி தமிழே!” என்ற தலைப்பில், குச்சனூர் இராசயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார் அவர்களும், “தமிழர் தொன்மையும் வன்மையும்” என்ற தலைப்பில், பேராசிரியர் – முனைவர் கோ. தெய்வநாயகம் அவர்களும், ”தமிழ் – தமிழர் மறுமலர்ச்சியில் மதுரை – கரந்தை தமிழ்ச் சங்கங்கள்” என்ற தலைப்பில், பேராசிரியர் – முனைவர் மு. இளமுருகன் அவர்களும், இக்கருத்தரங்கில் சிறப்புடன் உரையாற்றினர்.
சிலம்பாட்டம்
------------------
இதனையடுத்து, செங்கிப்பட்டி கருப்பசாமியின் “கலைப்புயல்” சிலம்பாட்டக் குழுவினரின் சிலம்பாட்டம் மாநாட்டு அரங்கை அதிரச் செய்தது.
பாவரங்கம்
----------------
இதனையடுத்து, “தமிழ் மேல் ஆணை”என்ற தலைப்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் அவர்கள் தலைமையில் பாவரங்கம் நடைபெற்றது. பாவலர்கள் மூ.த. கவித்துவன், நா. இராசாரகுநாதன், முழுநிலவன், ஏ. பிரகாசுபாரதி ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தி, அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கினர்.
மல்லர் கம்பம்
-------------------
இதனையடுத்து, சிதம்பரம் – தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் எழுச்சிமிகு மல்லர் கம்பம் நிகழ்வு, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
“பஃறுளி முதல் சிந்து வரை”- ஆய்வுநூல் வெளியீடு
இதனைத் தொடர்ந்து, திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., எழுதியுள்ள “சிந்து முதல் வைகை வரை” நூலுக்கு மறுப்பாக தமிழ் இன - மொழி ஆய்வாளர் தக்கார் ம.சோ. விக்டர் அவர்கள் எழுதியுள்ள “பஃறுளி முதல் சிந்து வரை”ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு நடந்தேறியது. பன்மைவெளி வெளியீட்டகப் பொறுப்பாளர் தோழர் வெற்றித்தமிழன் முன்னிலையில், மூத்த ஊடகவியலாளர் பா. ஏகலைவன் (ராவணா வலைக்காட்சி) அவர்கள் இந்நூலை வெளியிட தமிழிய ஆய்வாளர் ஐயா இரா. சிங்காரவேலு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி. செந்தில், காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசியக் களம் தலைவர் திரு. ச. கலைச்செல்வம், மகளிர் ஆயம் துணைத் தலைவர் திரு. க. செம்மலர், வள்ளலார் பணியகம் ஒருங்கிணைப்பாளர் திரு. மு. சுந்தரராசன், புதுச்சேரி தமிழர் களம் செயலாளர் திரு. கோ. அழகர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கத் தலைவர் திரு. ஆறுச்செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஐயா பெ. மணியரசன், இந்நூலின் அவசியம் குறித்துப் பேசினார்.
“கூட்டரசு” – கருத்தரங்கம்
-----------------------------------
இதனையடுத்து, “கூட்டரசு” என்ற தலைப்பில் நடைபெற்றக் கருத்தரங்கில், “வரி விதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி அவர்களும், “ஆட்சிமொழி” என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்களும், “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில், தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவர் திரு. நந்தகுமார் சிவா அவர்களும், “கூட்டரசில் ஆளுநர் பதவி உண்டா?” என்ற தலைப்பில், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி அவர்களும் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினர். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. தென்னவன் அவர்கள் இக்கருத்தரங்கை நெறிப்படுத்தினார்.
நிறைவரங்கம்
--------------------
மாநாட்டின் நிறைவரங்கில், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்து, தில்லியிலிருந்து மனித உரிமைச் செயல்பாட்டாளரும், உலக சீககியர் செய்திகள் (The World Sikh News – WSN) ஆசிரியருமான பேராசிரியர் ஜக்மோகன் சிங் அவர்களும், நாகாலாந்திலிருந்து மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நியூங்குலோ குரோமே அவர்களும், மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் வங்காள இன உணர்வு அமைப்பான “பங்களா போக்ரோ” அமைப்பின் பொதுச் செயலாளர் கார்கா சேட்டர்ஜி அவர்களும், அசாமில் செயல்பட்டு வரும் அசாம் ஜாட்டியதபாடி யுப பரிசத் (Asom Jatiyatabadi Yuba Parishad – AJYP) அமைப்பின் பொதுச் செயலாளர் உதயன் குமார் கோகாய் அவர்களும் எழுதியிருந்த கடிதங்களைப் படித்து, அதன் தமிழாக்கத்தை எடுத்துரைத்தபோது, மாநாட்டு அரங்கிலிருந்தோர் பலத்த கையொலி எழுப்பி அதனை வரவேற்றனர். இதனையடுத்து சிறப்புரையாற்றிய தோழர் கி.வெ., “கூட்டரசுக் கோட்பாடு” மாநாட்டின் முதன்மைத் தீர்மானத்தை விளக்கியும், உலகெங்கும் கூட்டரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள், மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த திரு. சீமான், ஐயா பெ.ம.வின் வாழ்விணையர் இலட்சுமி அம்மாள் அவர்களை மேடையேற்றி பிறந்தநாள் பரிசு வழங்கிப் பாராட்டினார். அதன்பிறகு சிறப்புரையாற்றிய திரு. சீமான், “இந்தியாவைக் கூட்டரசாக மாற்றும் இக்கோரிக்கை, தமிழினத்தின் கோரிக்கை மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்குமான முகாமையான கோரிக்கை. இதை வென்றெடுக்க நாங்கள் உறுதியெடுக்கிறோம்” என உணர்வெழுச்சியுடன் பேசி, அதற்கான ஞாயங்களை எளிய மொழியில் எடுத்துரைத்தார்.
நிறைவாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார். “இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்ற வேண்டும் என்பது ஒரு இயக்கத்தின் கோரிக்கையல்ல – இந்த இனத்தின் கோரிக்கை! இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் தாயகக் கூட்டரசாக இந்தியாவை மாற்றினால் மட்டும்தான் இந்தியா நிலைக்க முடியுமே தவிர, வெறும் இராணுவத்தை வைத்து, சட்டங்களை வைத்தெல்லாம் இந்தியாவை பாதுகாத்துவிட முடியாது. இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பதா அல்லது அவரவரை பிரிந்து போக விடுவதா என்பது, ஆளும் இந்தி ஏகாதிபத்தியவாதிகளின் கைகளிலே இருக்கிறது. அந்தந்த தேசிய இனங்களை மதித்து இறையாண்மை கொடுத்தால், அவர்களும் இந்த இந்தியக் கூட்டரசில் இருப்பார்கள். அதெல்லாம் முடியாதென்றால், அவரவரும் தனிப் பாதை தேடிக் கொள்வார்கள். தமிழினமும் தனிப் பாதை தேடிக் கொள்ளும்” எனத் தலைவர் பெ.ம. பேசியபோது, பலத்த கையொலி எழுப்பி அனைவரும் வரவேற்றனர். த.தே.பே. தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி அவர்கள் நன்றியுரைறாற்றினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்திகளில் வந்து ஆண்களும், பெண்களுமாகப் பங்கேற்ற பேரியக்கச் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் மாநாட்டு அரங்கை நிரப்பினர். மாநாட்டையொட்டி, #MakeIndiaFullFederation என்ற சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று மாநாட்டு நோக்கங்களை முன்வைத்துப் பரப்புரையில் ஈடுபட்டனர். தமிழர் கண்ணோட்டம், தாய்த்தமிழ் ஊடகம், ராவணா உள்ளிட்ட பல்வேறு வலையொளிகளின் நேரலை ஒளிபரப்பு வழியே மாநாட்டை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்றனர்.
மாநாட்டு நேரலையைக் காண
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================


 

Thursday, May 8, 2025

கூட்டரசு மாநாட்டிற்குக் கொள்கைப் பிடிப்பால் கூட்டெழுச்சி! பெ. மணியரசன்


கூட்டரசு மாநாட்டிற்குக்
கொள்கைப் பிடிப்பால் கூட்டெழுச்சி!

பெ. மணியரசன்



பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================================
தஞ்சையில் 10-5-2025 அன்று நடைபெற உள்ள “கூட்டரசுக் கோட்பாடு” சிறப்பு மாநாடு பெருமளவில் தமிழ் நாட்டுத் தமிழர்களின் - பன்னாட்டுத் தமிழர்களின் - கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இவ்வாறு இம் மாநாட்டுச் செய்தி பரவி இருப்பதற்கு முதன்மையான காரணங்கள் இரண்டு:
ஒன்று, பன்னாட்டுத் தமிழர்களின் தலைமைத் தாயகமாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் - தமிழ், தமிழினம், தமிழர் தாயகம் இம் மூன்றின் உரிமைகளும் பறிக்கப்பட்டும் , சீரழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அவலம்!
இன்னொன்று, இம்மாநாட்டை முன்னெடுத்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரும், தோழமை இயக்கங்களைச் சேர்ந்தோரும், இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன உணர்வாளர்களும் அவரவர் பங்கிற்கு இம்மாநாட்டுச் செய்திகளையும், இதன் தேவையையும் பரப்பி வரும் பாங்கும், அக்கறையும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தமிழ்நாடு தழுவிய அளவில், அங்கங்கே தன்னெழுச்சியாக மாநாட்டுப் பணிகள் ஆற்றிவருகிறார்கள்! மாநாட்டிற்குத் திரளாகத் தமிழின உணர்வாளர்களை - ஆண்கள் - பெண்கள் - இளையோர் - முதியோர் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்துவர முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.
எண்ணிப்பாருங்கள்! எவ்வளவு பெரும் கட்சியாக இருந்தாலும் வாடகை உந்துகளில் வாடகைக்கு மக்களை ஏற்றி வரும் காலம் இது!
உண்மையான ஓர் இலட்சியம் மக்களின் மனதைக் கவ்விவிட்டால், அது சிந்தனை வடிவம் கடந்து, மக்கள் ஆற்றலாய் பருண்மை வடிவில் பாய்ச்சல் கொள்ளும் என்பார் காரல் மார்க்ஸ்!
அப்படித்தான், தமிழ்த்தேசியம் என்ற சிந்தனை தமிழர்களின் வடிவில் மனித ஆற்றலாக வெளிப்படுகிறது!
தமிழ்த்தேசியம் வேறு, தமிழன், தமிழச்சி வேறல்ல; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் குருதியில், தமிழர் மனத்தில் எழுந்தது தமிழ்த்தேசியம்!
தமிழ்நாடு, தமிழகம் என்று சங்க இலக்கியங்கள், பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்றவை கூறுகின்றன!
அப்போதென்ன ஒற்றைத் தமிழ் அரசா தமிழ்நாடு முழுமைக்கும் நிலவியது? இல்லை! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “தேசம் (Nation) “வரையறுத்த மூதறிஞர்கள் தமிழர்கள்! தமிழ் பேசப்படாத அயல் நாடுகளையும், அதனதன் பெயரில் தேசம் என்றார்கள்! அவற்றை தமிழ் பேசப்படாத “மொழி பெயர் தேயம்” - அயல்தேசம் என்று ஏற்றவர்கள் தமிழர்கள்!
நம்முடைய முதல் தமிழ்த்தேசியக் காப்பியம், சிலப்பதிகாரம்! நம்முதல் தமிழ்த்தேசியப் பாவலர் இளங்கோவடிகள்! அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் மன்னர்களான சேர - சோழ - பாண்டியர்கள் கூடிக் குலாவிக் கொண்டா இருந்தார்கள்? முரண்பாடுகள், முனுமுனுப்புகள், மோதல்கள் கொண்ட தனித்தனி தமிழ் அரசுகள் சேர - சோழ - பாண்டிய அரசுகள்! அவர்கள் சேர்ந்திருந்த காலம் மிகச் சிறிது!
மூன்று தமிழ் அரசுகளையும் இணக்கமாக ஒன்றிணைத்து, மூன்று நாட்டையும் சமமாகப் பாராட்டி சிலப்பதிகாரம் என்ற காப்பியம் வடித்தார் - நம் தமிழ்த்தேசியப் பெரும்பாவலர் - பிறப்பால் இளவரசர் - இளங்கோவடிகள்!
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய”வர் இளங்கோவடிகள்!
எந்திர முதலாளிகள் சந்தையில் உருவாக்கியதே “தேசியம்” என்று மாரக்சிய அறிஞர்கள் கூறியது தமிழ் இனத்திற்குப் பொருந்தாது!
“தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா” என்றார் பாரதியார்!
“இனத்தைச் செய்தது மொழிதான் - இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான்” என்று மிகச் சரியாகச் சொன்னார் பாவேந்தர் பாரதிதாசன்!
மொழி-இனம்-தாயகம் மூன்றும் இயற்கையின் படைப்பு; வரலாற்றின் வடிவமைப்பு!
இந்த வரையறுப்பு எத்தனை இனங்களுக்குப் பொருந்துகிறது என்று சிலர் கேட்கக் கூடும்!
“எங்களுக்குப் பொருந்துகிறது; நாங்கள் மிடுக்கோடு, கம்பீரமாகச் சொல்கிறோம்” என்று கூறுங்கள் தமிழ்ப் பிள்ளைகளே!
இந்த வரையறை மற்ற இனங்களுக்குப் பொருந்தவில்லை என்றால் அவர்கள் மாற்றாக ஒன்றைக் கூறிக் கொள்ளட்டும். தமிழர்கள் மற்ற இனங்களைக் குறைவாக - இழிவாகப் பேசுவதில்லை! எங்களை இழிவுபடுத்தியோரை ஒருவேளை எங்களவர்களும் இழிவு படுத்தியிருக்கலாம்! நாம் மற்ற இனங்களை ஒரு போதும் குறைவாகக் கூறுவதில்லை.
காலங்காலமாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் - பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட - மக்களை நாம் அயலாராகக் கருதவில்லை. அவர்களும் மண்ணின் மக்களே! ஆந்திராவில், தெலுங்கானாவில் தெலுங்கு தேசியம், கர்நாடகாவில் கன்னட தேசியம், கேரளத்தில் மலையாள தேசியம் மேலாண்மை செலுத்துவது போல் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் தலைமை தாங்க வேண்டும் என்கிறோம். தமிழ்த்தேசியம் அனைவரையும் அரவணக்கும்! அதே வேளை, அயலாருக்கு அடிமையாவதை வெறுக்கும்!
*அன்பான தமிழர்களே!*
===========================
தஞ்சை மாநாட்டிற்கு ஊர்திகளில் வரும்போது கவனமாக வாருங்கள். நாம் ஊர்திகளில் வருவது பயணமே தவிர, பந்தயம் அல்ல!
கவனத்துடன் வாருங்கள்.
8.5.2025 அன்புடன்,
*(பெ.மணியரசன்)*
*நிகழ்வுகள்*
=============
மாநாடு காலை 9.00 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன் ஏற்றி வைப்பதுடன் தொடங்குகிறது.
சிறப்பான இரு கருத்தரங்குகள்
“தமிழர் தொன்மையும் வன்மையும்” என்ற தலைப்பில் ஆய்வறிஞர், முனைவர் கோ. தெய்வநாயகம் பேசுகிறார். “தமிழ் - தமிழர் மறுமலர்ச்சியில் தமிழ்ச் சங்கங்களின் - மதுரை (1901), கரந்தை (1911) – பங்களிப்பு” என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் மு. இளமுருகன் உரையாற்றுகிறார். “தமிழர் ஆன்மிகமொழி தமிழே” என்ற தலைப்பில் வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் பேசுகிறார். “தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் - அவதூறும்” என்ற தலைப்பில் தமிழிய வரலாற்று ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் பேசுகிறார்!
“தமிழ் மேல் ஆணை” என்ற தலைப்பில் நடைபெறும் பாவரங்கு திரைப் பாவலர் கவிபாஸ்கர் தலைமையில் நடைபெறுகிறது. பாவலர்கள் மூ.த. கவித்துவன், நா. இராசாரகுநாதன், முழுநிலவன், பிரகாசுபாரதி ஆகிய பாவலர்கள் பாவீச்சு தருகிறார்கள்.
புயல் கிளப்பும் புதுநூல் வெளியீடு
ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியுள்ள “பஃறுளி முதல் சிந்து வரை” (ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. வின் சிந்தரிவிலிருந்து வைகைவரை நூலுக்கு மறுப்பு) என்ற புத்தம் புது நூல் வெளியிடப்படுகிறது.
இந்நூலை ராவணா வலையொலி நிறுவனர், திரு. ஏகலைவன் அவர்கள் வெளியிடுகிறார்.
அடுத்து “கூட்டரசுக் கருத்தரங்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி - “வரிவிதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில் பேசுகிறார். “ஆட்சி மொழி” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி இடும்பாவனம் கார்த்தி பேசுகிறார். “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில் இத்துறையில் களச் செயல்பாட்டாளராகத் திகழும் தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார் சிவா பேசுகிறார். “கூட்டரசில் ஆளுநர் பதவி” என்ற நெருக்கடியான தலைப்பில் மகளிர் ஆயப் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி பேசுகிறார். த.தே.பே. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் நெறியாள்கை செய்கிறார்.
மிகமிக முகாமையான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
*நிறைவரங்கம்!*
================
மாநாட்டின் நிறைவரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எழுச்சி நாயகர் செந்தமிழன் சீமான் அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் விடிவெள்ளிச் சிந்தனையாளர் கி. வெங்கட்ராமன் அவர்களும், நானும் (தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்) பேசுகிறோம்.
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்க வரலாற்றுக் கண்காட்சி என இரு கண்காட்சி அரங்குகள் திறக்கப்படுகின்றன. பன்மைவெளி புத்தக விற்பனை அரங்கம் செயல்படுகிறது.
சிலம்பாட்டம், மல்லர் கம்பம், மரபு இசை முதலிய கலைநிகழ்ச்சிகள் மேடையில் களைகட்ட உள்ளன!
பன்முகச் செழிப்போடு, கூட்டரசுச் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.
வாருங்கள் தமிழர்களே!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

 

Monday, May 5, 2025

*தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் “கூட்டரசுக் கோட்பாடு” - சிறப்பு மாநாடு!*




 





*தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும்
“கூட்டரசுக் கோட்பாடு” - சிறப்பு மாநாடு!*




 
================================
தஞ்சாவூர் - நாஞ்சிக்கோட்டை சாலை காவேரி திருமண மண்டபம்
தி.பி. 2056 சித்திரை 27 – காரி(சனி)க்கிழமை 10.05.2025 – காலை 9 மணி முதல் மாலை 7.30 வரை
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்*
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. *செந்தமிழன் சீமான்*
த.தே.பே. பொதுச் செயலாளர் தோழர் *கி. வெங்கட்ராமன்*
தமிழிய ஆய்வாளர் தக்கார் *ம.சோ. விக்டர்*
வரலாற்று ஆய்வாளர் திரு. *இரா. மன்னர்மன்னன்*
உள்ளிட்ட முகாமையான ஆளுமைகள் பங்கேற்கும்
* கருத்தரங்குகள்
* புகைப்படக் கண்காட்சி
* பாவரங்கம்
* கலை நிகழ்ச்சிகள்
* நிறைவரங்கம்
* வரலாற்றை வடிவமைக்கும் தீர்மானங்கள்
வாருங்கள் தமிழர்களே !!!
அழைக்கிறது,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT