உத்திரப்பிரதேசத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை!
திராவிட மாடல் அரசு திருந்துவது எப்போது?
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தமிழ்நாட்டு வேலை, தொழில், வணிகம், கல்வி அனைத்தும் தமிழர்களுக்கே என்ற கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாகப் போராடி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டங்களும் திட்டங்களும் இருக்கின்றன என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி விளக்கி இருக்கிறோம். அதற்கான வெளியீடுகளை வெளியிட்டு இருக்கிறோம்; கருத்தரங்கங்கள் மாநாடுகள் நடத்தி விளக்கி இருக்கிறோம். தமிழ்நாடு அரசு அதை இன்று வரையிலும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் - தனியார் வேலை வாய்ப்பு உட்பட - 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும், நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும், அவர்கள் அதைச் செயல்படுத்த முன்வரவில்லை. மாறாக, இந்திக்காரர்களுக்கும் இந்தி மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கே ஊக்குவிப்பு திட்டங்கள், குடியிருப்பு திட்டங்கள் ஏற்படுத்தி, அவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கி, அவர்களை நிலைப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், தீவிர இந்தியத்தேசியத்தை முன்வைத்து பா.ச.க. ஆளக்கூடிய உத்தரப் பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கு, பல சட்ட திட்டங்களை அங்கே நடக்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறது.
இந்திய அரசின் திட்டமான உலகத் திறன் மேம்பாட்டு மையம் (Global Capability Center) எல்லா மாநிலங்களிலும் மாநில அரசின் வழியாகவே செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திறன் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் செயல்படுகிறது. அத்திட்டத்தை, உத்திரப்பிரதேச அரசு செயல்படுத்தும்போது, மண்ணின் மக்களுக்கான திட்டமாக மாற்றி அமைத்து, 2025 மே முதல் செயல்படுத்துகிறது. இதன்படி, திறன்வாய்ந்த உத்திரப் பிரதேச மண்ணின் மக்களைப் பணியில் அமர்த்திக் கொள்ளும் நிறுவனங்களுக்கு அவர்களது "நிலைமூலதனச்" (Fixed Capital) செலவில், 25 விழுக்காடு தொகை உ.பி. அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. பின் தங்கிய மாவட்டங்களில், மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க முன்வரும் நிறுவனங்களுக்குக் கூடுதல் மானியம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இது தவிர, தொழில் முனைவோரும், பணியாற்றக் கூடிய தொழிலாளர்களும், உத்திரப்பிரதேச மண்ணின் மக்களாக இருந்தால், அவர்களுக்கு இதே திட்டத்தில் கூடுதல் மானியங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 1 இலட்சம் வரையிலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மானியமாக வழங்க திட்டங்களை அறிவித்திருக்கிறார் உ.பி. முதலமைச்சர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உள்ளூர் மக்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக இருந்தால், மாதம் தோறும் ரூ. 3000 ஊக்கத்தொகை வழங்குவது என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி, குறிப்பாக ஒவ்வொரு தொழில் சார்ந்த உள்ளூர் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்து, உத்தரபிரதேசம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த மாநிலத்தில் நூற்பாலைகள், துணி ஆலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், பின்னலாடைகள் தொழில்கள் ஆகியவற்றில் 50 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களில், முழுவதும் உள்ளூர் மக்களை வேலைக்கு வைத்துக் கொண்டால், அந்நிறுவனங்களுக்கு, தனித்த ஊக்குவிப்புத் தொகை வழங்குகிறார்கள்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் மண்ணின் மக்களுக்கான வேலை வழங்கு வாரியம் என்ற திட்டத்தை முன்மொழிந்து பரப்புரைகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
இதே திட்டத்தை உத்திரப்பிரதேச அரசு 2022இல் இருந்து அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
வேலை வாய்ப்பு தேடும் உள்ளூர் மக்கள் தங்கள் பெயர்களைத் தங்களுடைய தொழில் திறன் கல்வி தகுதி ஆகியவற்றுடன் தங்களுடைய தொடர்பு முகவரியோடு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே இணையதளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று தேடக்கூடிய நிறுவனங்கள், என்னென்ன கல்வித் தகுதியில் / திறன்களில் தங்களுக்கு எவ்வளவு பேர் தேவை என்பதைப் பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடுவோர் அந்த இணையத்தைப் பார்த்து தங்களுக்குப் பொருத்தமான வேலையில் சேர்ந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
வேலைக்கு ஆட்களைத் தேடக்கூடிய நிறுவனங்கள் தங்களுக்குப் பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்து கொள்வதற்கு அந்த இணையம் பயன்படும். இதுபோன்ற, வேலை வழங்கு வாரியம், அதற்கான இணையம் என்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகக் கூறி வருவதை, உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
மதவாதம் பீடித்த உத்தரப்பிரதேச அரசு கூட, தனது மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கான நிதி ஒதுங்குகிறது.
ஆனால் எல்லோருக்கும் எல்லாம் என்ற அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சிப் பாதைக்கு நாங்கள் தான் உலகத்திற்கே வழிகாட்டி எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மாடல் தி.மு.க. அரசு, எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பார்க்கிறோம். தொடர்ந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாம் மண்ணின் மைந்தர்க்கே வேலை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதனுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் தி.மு.க.வே தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அதை அறிவித்தது. ஆனால் அதைச் செயல்படுத்தாது, அதற்கு மாறாக எதிர் திசையில் இந்திக்காரர்களை இங்கே நிலைப்படுத்துவதற்கான முயற்சியில் தான் இறங்கி கொண்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திராவிட மாடல் அரசு திருந்தி, இனியாவது மண்ணின் மக்களுக்கான வேலை வழங்கும் சட்டங்களையும், திட்டங்களையும், ஊக்குவிப்பு மானிய அறிவிப்புகளையும் வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Post a Comment