உடனடிச்செய்திகள்

Wednesday, October 8, 2025

உச்ச நீதிமன்றத் தலைமைநீதிநாயகம்பி.ஆர். கவாய் மீதுதாக்குதல் தொடுத்த நபரைக்கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம்

பி.ஆர். கவாய் மீது தாக்குதல் தொடுத்த நபரைக்

கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

 

புதுதில்லியில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிநாயகம் உயர்திரு. பி.ஆர். கவாய் அவர்கள் மீது 06.10.2025 அன்று முற்பகல், இந்துத்துவா வெறியர் ஒருவர் தனது காலணியைக் கழற்றி வீசியுள்ள இழிசெயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

 

நேற்று முன்தினம் (06.10.2025) முற்பகல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய்நீதிநாயகம் கே. வினோத் சந்திரன் அமர்வு, வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய நிலையில், தில்லியைச் சேர்ந்த 71 அகவை வழக்குரைஞரான ராகேஷ் கிஷோர் என்பவர், தலைமை நீதிபதியை நோக்கித் தனது காலணியை வீசியுள்ளார். நீதிபதிகள் தங்கள் தலையை சாய்த்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள். மற்றவர்கள் அந்நபரைத் தடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை விசாரித்துவிட்டு, அந்நபரை விடுவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

அந்த ராகேஷ் கிஷோர் என்ற நபர், மத்தியப்பிரதேசத்தில் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் கஜூராகோ கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஜவாரி கோயிலில், விஷ்ணு சாமி சிலையை நிறுவக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்துள்ளார். அதை விசாரித்த தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய் அவர்கள், அவ்வழக்கின் தன்மையை விசாரித்துப் புரிந்து கொண்டு, அதைத் தள்ளுபடி செய்துள்ளார்.

 

அவ்வழக்கின் செயற்கைத் தன்மையை உணர்ந்து கொண்ட கவாய், "இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; இச்சிக்கலைத் தீர்க்க நீங்கள் வாதாடும் கடவுளிடம் கோரிக்கை வையுங்கள்!" என்று அப்போது கூறியுள்ளார். இதற்குப் பழிவாங்க மேற்படி இந்துத்துவா வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், இழிசெயலில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்துத்துவா அரசியலுக்கு ஆத்திச்சூடி எழுதிய சாவர்க்கரைத் துதிப்போரின் ஆட்சி இந்தியாவில் நடப்பதால், ஆரியத்துவா ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவே கொண்டாட துணிந்து விட்டார்கள். இப்போது, உச்ச நீதிமன்றத்தின் தற்சார்பைவர்ணாசிரமத்திற்கு உட்பட வலியுறுத்தும் நோக்கத்துடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.

 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகத்தை அவமானப்படுத்திய ராகேஷ் கிஷோர் மீது உரிய வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT