மேட்டூர் அணையை முதல்வரே திறக்கும்
தன் விளம்பர மோகத்தைக் கைவிட்டு,
வல்லுநர் குழு பரிந்துரை பெற்று திறக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் இன்று (26.08.2026) த ஞ்சையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், பி. தென்னவன், க. விடுதலைச்சுடர், மா. மணிமாறன், க. செம்மலர், வெற்றித்தமிழன், இரா. வேல்சாமி, வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன், கதிர்நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் - 1
வல்லுநர் பரிந்துரை பெற்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும்!
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அணைகள் நிரம்பிய பின்னும் திறந்துவிட மறுக்கிறது கர்நாடக அரசு. கர்நாடக அரசைக் கண்டித்து, இந்திய அரசை வலியுறுத்தியும் காவிரி நீர் பெற துரும்பும் கூட அசைக்காத தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், நாளை மறுநாள் (28..08.2026) மேட்டூர் அணையை திறக்க செல்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய நிலையில் 88 அடிதான் மேட்டூர் அணையில் தண்ணீர் இருக்கிறது. நீண்ட அனுபவம் உள்ள மூத்த பாசனப் பொறியாளர்கள் வேளாண் துறை வல்லுநர்கள் அறிவுரை பெறாமல் தன் விளம்பர மோகத்தோடு, மேட்டூர் அணையை 28.08.2026 அன்று திறக்க முடிவு செய்தது சரியான செயல்பாடு அல்ல!
தன் விளம்பர மோகத்தில் மூழ்கித் திளைத்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகை வெள்ளத்தால் நிரம்பிய மேட்டூர் அணையை ஆண்டுதோறும் தான் போய் திறந்து வைத்து தன் விளம்பரம் செய்து கொண்ட நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் இப்போது உள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மேட்டூர் அணைத் திறப்பு உள்ளது.
முதலமைச்சர் அவர்கள் 28.08.2026 மேட்டூர் அணை திறக்கும் திட்டத்தைக் கைவிட்டு, வல்லுநர்கள் அறிவுரை பெற்று அதன்படி செயல்படுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் - 2
கர்நாடக எல்லையில் மூன்று தமிழர்கள் படுகொலை :
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு நீதி பெற்றுத்தர வலியுறுத்தல்!
கடந்த 2026 ஆகத்து 15 அன்று, கர்நாடக வனப்பகுதியில் எல்லையோரத் தமிழர்களான அந்தோணி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (43), செபஸ்டின் டேவிட் குமார் (35) ஆகிய மூவர் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இக்கொலை தொடர்பாகக் குற்றவாளிகளான வனத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) முறையாகப் பதியப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். பதியப்படும் வழக்கு வெறும் கொலை வழக்காக மட்டுமின்றி, தமிழர்கள் மீதான இனரீதியான வன்முறை மற்றும் சித்திரவதைக்கான கடுமையான சட்டப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
1991இல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற காவிரி கலவரத்தின்போது, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உடமைகளை இழந்து, இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி விரட்டியடிக்கப்பட்டனர். அத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட கன்னட வெறியர்கள் மீது கூட அம்மாநில அரசு முறையாக விசாரணை நடத்தி தண்டிக்கவில்லை. அண்மையில் 2016இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். பேருந்துகளை பட்டப்பகலில் கொளுத்திய கன்னட இனவெறியர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு இப்போதாவது மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் உடனடியாகத் தலையிட்டு, மூத்த அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி களநிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும்; அவ்வழக்கை நேரடிக் கண்காணிப்பில் நடத்தி, குற்றமிழைத்த கன்னட அதிகாரிகளுக்கு உச்சபட்சத் தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடும் அரசுப் பணியும் பெற்றுத்தர வேண்டும் என இத்தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் - 3
வடலூர் வள்ளலார் பெருவெளி சிதைப்புத் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கிறோம்! பெருவெளியைப் பழைய நிலைக்குச் சீரமைக்க வேண்டும்!
வடலூரில் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் அருட்பிரகாச வள்ளலார் அமைத்த “வள்ளலார் பெருவெளி” நிலத்தைச் சிதைக்கும் நோக்கில், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சற்றொப்ப 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பன்னாட்டு மையம்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தை பெருவெளிக்குள் நடத்தாமல் வெளியே நடத்த வேண்டுமெனக் கோரியும், பெருவெளியைப் பாதுகாப்பதற்காகவும் பார்வதிபுரம் கிராம மக்களுடன் இணைந்து நமது வள்ளலார் பணியகமும், தெய்வத் தமிழ்ப் பேரவையும் தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தன.
இந்நிலையில், மக்களின் இடைவிடாத போராட்டங்களின் தொடர்ச்சியாகவும், கடந்த தி.மு.க. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும், தற்போது அமையப்பெற்றுள்ள த.வெ.க. அரசு வடலூர் பன்னாட்டு மையக் கட்டுமானத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளதை இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் முழுமனதாக வரவேற்கிறது.
· ஆயினும், வள்ளலார் பெருவெளியின் எந்தப் பகுதியிலும் எவ்வித அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதைச் சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
· பெருவெளியைப் பாதுகாக்க அறவழியில் போராடிய பார்வதிபுரம் மக்கள், வள்ளலார் பணியக அன்பர்கள் மீது முந்தைய அரசால் போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
· கட்டுமானப் பணிகளுக்காகப் பெருவெளியில் தோண்டப்பட்ட ஆழமான குழிகள் அனைத்தையும் உடனடியாக மூடி, வள்ளலார் பெருவெளியை அதன் முழுமையான இயற்கை மற்றும் ஆன்மிகப் புனிதப் பழைய நிலைக்குச் சீரமைத்துத் தர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் – 4
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்
திருக்குடமுழக்கை தமிழிலேயே நடத்த வேண்டும்!
சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா வரும் 2026 செப்டம்பரில் (17.09.2026) நடைபெறுவது வரவேற்கத் தக்கது. அக்குடமுழுக்கு விழாவை, முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், அதனைப் புறக்கணித்துவிட்டு கடந்த தி.மு.க. அரசின் வழியில், சமற்கிருத வழியிலேயே குடமுழக்கை நடத்திட த.வெ.க. அரசு முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழில் பாதி – சமற்கிருதம் மறுபாதி என குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டுமென பலமுறை தீர்ப்பளித்துள்ளது. அண்மையில், 21.04.2026 அன்று, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரி கரூர் வழக்கறிஞர் இரா. இராசேந்திரன் தொடுத்த வழக்கில் (வழக்கு எண்: W.P. (MD) No: 11386 of 2026) தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி அவர்கள், கருவறை – வேள்விச் சாலை – கோபுரக் கலசம் ஆகிய முகாமையான மூன்று நிலைகளிலும் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கை நடத்த வேண்டுமெனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, இத்தீர்ப்பை ஏற்று, சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட முன் வர வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக வலியுறுத்திக் கோருகிறது!
===============================
தலைமைச் செயலகம்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================



