காவிரி உரிமையை தட்டிப்பறிக்க
இந்திய அரசின் பச்சைக் கொடி!
காவிரி உரிமை மீட்புக்குழு கண்டனம்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இந்திய ஆட்சியில் அனாதையாக்கப்பட்ட இனம்தான் தமிழினம் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் மேகேதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் இந்திய அரசு கருத்து வெளியிட்டிருக்கிறது.
மேகேதாது அணை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வினா எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசு “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகை கட்டமைப்பை மேற்கொள்வதாக இருந்தாலும், தமிழ்நாடு கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா?“ எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விடை அளித்த இந்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜபூஷன் சௌத்திரி “காவிரியின் குறுக்கே எந்தவகைக் கட்டமைப்பையும் நிறுவிக் கொள்வதற்கு கர்நாடக மாநிலம், தமிழ்நாடு கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் உரிமை அதிகாரம் அல்லது ஆற்றலை குறைக்கவோ, பாதிக்கவோ கூடாது. இத் தீர்ப்பாயத்தின் உத்திரவுக்கு முரண்படாதவகையில் அந்த மாநில எல்லைக்குள் உள்ள நீரின் பயன்களை அனுபவிக்கும் அதன் உரிமையை அது பாதிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறது” என்றார்.
மேகேதாது அணை குறித்து தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், கர்நாடகம் தொடர்ந்து செயல்படலாம் என்று வெளிப்படையாக இதன் மூலம் இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
காவிரி சிக்கலைக் கூர்ந்து கவனித்தால், கர்நாடகம் மட்டுமின்றி இந்திய அரசு, தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம், அனைத்திந்தியக் கட்சிகள் ஆகிய அனைத்துமே சூழ்ந்து நின்று தமிழினத்தைத் தாக்கி வருவது தெளிவாகும்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும், அவர்களைப் பின்பற்றி ஆட்சி செய்யும் விஜயின் த.வெ.க. ஆட்சியும் காவிரி உரிமையைக் காட்டிக் கொடுப்பதில் துரோகப் போட்டி நடத்திவருவதை வரலாறு உறுதி செய்துள்ளது.
நர்மதை ஆற்றுநீர்ப் பகிர்வு சிக்கலிலோ, கிருஷ்ணா ஆற்று சிக்கலிலோ, துங்கபத்திரா நீர்ப் பகிர்வு சிக்கலிலோ இந்திய அரசு ஏதோ ஒரு மாநிலத்தின் பக்கமாகச் சாய்ந்து செயல்பட்டதில்லை. தீர்ப்பாயங்களும் உச்ச நீதிமன்றமும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை.
ஆனால், ஆரியத்துவ இந்திய அரசு காவிரி சிக்கலில் தொடர்ச்சியாக கர்நாடகத்தின் இனவெறி அடாவடிக்குப் பக்கத் துணையாக இருந்துவருகிறது.
மாநிலங்களுக்கிடையே ஆற்றுநீர்ப் பகிர்வு சிக்கல் தொடர்பான “மாநிலங்களிடை நீர் தகராறு சட்டம் 1956” இன் படி அமர்த்தப்படும் தீர்ப்பாயங்கள் மேற்சொன்ன எந்த ஆற்றுநீர்த் தகராறிலும் காவிரித் தீர்ப்பைப்போல படுமோசமான அநீதித் தீர்ப்பை வழங்கியதில்லை.
காவிரி ஆற்றில் ஒப்பந்தம் செயலுக்கு வந்ததிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 361 ஆ.மி.க. நீர் பங்கீடு பெற்றுவந்த தமிழ்நாட்டுக்கு காவிரி தீர்ப்பாயம் 205 ஆ.மி.க. என்று இடைக்காலத் தீர்ப்பில் தடாலடியாகக் குறைத்தது. இறுதித் தீர்ப்பில், 192 ஆ.மி.க என்று இன்னும் வெட்டியது. மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தன்பங்கிற்கு மேலும் குறைத்து 177.25 ஆ.மி.க. என்று அறிவித்தது. இந்தத் தீர்ப்பும் கூட 15 ஆண்டுகள்தான் உயிரோடு இருக்கும் . அதன் பிறகு மீளாய்வு செய்ய வேண்டும் என்று அறிவித்தது.
இந்த அநீதித் தீர்ப்புகள் ஒவ்வொரு முறை வந்தபோதும், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தீர்ப்பு நகல் எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தின.
இந்த அநீதித் தீர்ப்புகளிலும் கூட அவரவர் விருப்பத்திற்கு விளக்கமளித்துக் கொள்ளக் கூடிய வகையில் வழவழ வாக்கியங்களை வழங்கியது. அதனால்தான் இந்திய அரசு அன்றன்றைக்குத் தேவையான கர்நாடகத்தின் வாய்ப்புக்கு இணங்க அவ்வப்போது விளக்கம் அளிக்கிறது.
இதே அன்புமணி ராமதாசுக்கு 2015-இல் அன்றைய இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எழுதிய கடிதத்தில் தீர்ப்பாய தீர்ப்பின் 13-ஆம் பத்தியைச் சுட்டிக்காட்டி, கீழ்பாசன மாநிலத்தின் பாசன தேவை எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு எனக் கூறியிருந்தார். தீர்ப்பாய தீர்ப்பின் பத்திகள் 11, 13, 18 ஆகியவற்றுக்கு இடையே உள்ள தன்முரண்பாட்டை கர்நாடகமும் அதற்கு ஆதரவான இந்திய அரசும் பயன்படுத்திக் கொள்கின்றன.
இணை அமைச்சர் சௌத்திரி எடுத்துக்காட்டும் பத்தி 18 கூட அவரவர் பங்கு நீரைப் பயன்படுத்திக் கொள்ள அவரவர் எல்லையில் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது இந்த இறுதி தீர்ப்பே கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரை கர்நாடகம் தீர்ப்பின்படி எப்போதுமே திறந்து விட்டது இல்லை என்று கண்டிக்கிறது.
கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் அந்த உபரி நீரைதான் கர்நாடகம் திறந்துவிட்டு வருகிறது. இது நாடறிந்த உண்மை. இப்போது அந்த உபரி நீரையும் தமது எல்லையிலேயே மடக்கிப் போடத்தான் மேக்கேதாட்டில் அணைகட்ட முயல்கிறது கர்நாடகம் தனக்குரிய பங்கு நீரை தாண்டி உபரி நீரை பயன்படுத்த கட்டமைப்பு எதையும் ஏற்படுத்த தீர்ப்பின் பத்தி 18 அனுமதி அளிக்கவில்லை அமைச்சர் செளத்திரி சொல்லும் விளக்கம் தீய உள்நோக்கம் உள்ளது.
முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த ஆற்று நீர் வழக்கிலும் சொல்லாத வகையில் தீர்ப்புக்கு 15 ஆண்டுகள்தான் வாழ்நாள் என்று வரம்புகட்டியிருப்பதும் குழப்பமான சொற்களை திட்டமிட்டே பயன்படுத்தி இருப்பதும், இந்தியக் கட்டமைப்பே தமிழினப் பகை கட்டமைப்புதான் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
தொடக்கத்திலிருந்தே தமிழ்நாட்டின் தி.மு.க. அ.தி.மு.க. அரசுகள் காவிரி வழக்கை ஏனோதானோ என்று நடத்திய முறை இந்த இன ஆதிக்கத்திற்கு தோதாக அமைந்தது.
இப்போது கர்நாடகம் மேகேதாது அணை கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவரும் நிலையில் அந்த அணை கட்ட கர்நாடகம் தமிழ்நாட்டின் இசைவைப் பெற வேண்டிய சட்டத்தேவை இல்லை என விளக்கமளிப்பது கர்நாடகத்தின் அடாவடிக்கு வெளிப்படையாகப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.
தமிழ்நாடு அரசு இந்திய அரசின் இந்த வஞ்சகத்தை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும்.
தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு உழவர்களும் இளையோரும் காவிரி உரிமை மறுப்பு என்பது தமிழின அழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொண்டு களம் காண வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

