உடனடிச்செய்திகள்

Monday, February 4, 2013

மதுரையில் இந்தி பெயர் பலகைகள் வைக்கமாட்டோம் என ஆட்சியர் அறிவிப்பு - த.தே.பொ.க. கோரிக்கை வெற்றி!




மதுரை மாநகரில் இந்திப் பெயர் பலகைகள் வைக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா முகநூல் வழியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மதுரை மாநகரில், இந்தி - ஆங்கிலம் - தமிழ் ஆகிய மும்மொழிகளிலும், சுற்றுலாப் பயணிகளின் வசத்திக்காக பெயர் பலகைகள் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் திரு. ஆர்.நந்தகோபால் அவர்கள் 20.01.2013 அன்று கூறியதாக தினமணி நாளேட்டில் செய்தி வெளிவந்தது. 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் வீதிகளில் இந்தி பெயர் பலகைகள் வைப்பது தமிழ் உணர்வாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 1938லும் 1965லும் இந்தி கூடாது என உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாளான மொழிப் போர் நாள் 25.01.2013 அன்று, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் தமிழ் உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

இது குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைகைம கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் அவர்கள் எழுதிய கடிதம் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரது முகநூல் முகவரிக்கு அனுப்பப்பட்டது. நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, அக்கடிதத்திற்கு ஆதரவுத் தெரிவித்து விருப்பங்களும், கருத்துகளும் அங்கு பதியப்பட்டு வருகின்றன.

தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பாளர் திரு ராஜ்குமார் பழனிசாமி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கா.திருமுருகன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட தமிழின ஆதரவு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் நமது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக கருத்துகளை அப்பகத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், முகநூல் வழியாக பதில் அளித்த, மதுரை மாவட்ட ஆட்சியர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத்தான் அத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அதில் வேறு உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார். இந்நிலையில், இன்று மாலை இந்திப் பெயர் பலகைகள் வைக்கும் முடிவை கைவிடுவதாக அவர் முகநூல் வழியாக அவர் அறிவித்துள்ளார். 

அவரது அறிவிப்பை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மகிழ்வுடன் வரவேற்கிறது. கோரிக்கைக்காக மதுரையில் 25.01.2013 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. தோழர்களுக்கும், முகநூல் வழியாக கருத்துப் போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது..!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT