உடனடிச்செய்திகள்

Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (13.03.2019) காலை முதல் மாலை வரை குடந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, க. அருணபாரதி, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. முருகன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை. செயபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மறைந்த நாட்டுப்புறப் பாவலர் திரு. வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 -  ஐட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக!

தமிழ்நாட்டின் கடலோரத்திலுள்ள மரக்காணம் தொடங்கி வைத்தீசுவரன் கோயில் வரையிலும், குறிஞ்சிப்பாடி தொடங்கி வேளாங்கண்ணி அருகிலுள்ள புஷ்பவனம் வரையிலும் – 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலோரக் கிராமங்களையொட்டிய ஆழமற்ற கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்திற்கும், வேளாண் விளைநிலங்கள் அமைந்துள்ள பகுதிகளை 700 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ள இந்திய அரசு ஏலம் விட்டுள்ளது.

காவிரிப்படுகையையும், கடலோரத்தையும் ஒட்டுமொத்தமாக நாசாமாக்கும் இத்திட்டத்திற்கு எதிராக, திருக்காரவாசல் கிராமத்தில் அங்குள்ள மக்கள் ஒன்று திரண்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தை முன்னெடுத்து அறவழியில் குரல் கொடுத்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் ஐட்ரோ கார்பன் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தியும், காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் – கரியாப்பட்டிணம் கிராமத்தில் கடந்த 03.03.2019 முதல், அக்கிராம மக்களும், செட்டிபுலம், மருதூர், வேதாரணியம், வாய்மேடு, தானிக்கோட்டகம், குரவப்புலம், தென்னம்புலம், கருப்பம்புலம், தகட்டூர் உள்ளிட்ட 10 கிராமங்களின் மக்களும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 09.03.2019 நள்ளிரவில் காவல்துறையினர் அடாவடியாகப் புகுந்து போராட்டப் பந்தல்களை சிதைத்ததுடன், போலி வழக்குகள் புனைந்து, அறவழிப் போராட்ட முன்னிலையாளர்கள் 7 பேரை அவர்கள் வீடுகளுக்குச் சென்று கதவைத் தட்டி எழுப்பிக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, அங்குள்ள பெண்கள் கழனியப்ப அய்யனார் கோவிலிலும், சந்தன மாரியம்மன் கோவிலிலும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில் சந்தன மாரியம்மன் கோயிலை காவல்துறை அடாவடியாக இழுத்து மூடியுள்ளது.

ஒருபக்கம், தனது அமைச்சர்களை அனுப்பி - மக்கள் எதிர்க்கும் திட்டங்களைக் கொண்டு வர மாட்டோம் எனப் பேசி வரும் தமிழ்நாடு அரசு, இன்னொருபுறத்தில் காவல்துறையை அனுப்பி போராடும் மக்களை ஒடுக்குகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?

தமிழ்நாடு அரசு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்கள் உரிமையை அனுமதிக்க வேண்டும். ஐட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

நில வளத்தையும், நீர் வளத்தையும் காப்பாற்றிட – காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இப்பகுதியில் எண்ணெய் – எரிவளி – நிலக்கரி எடுக்கும் பணிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என இத்தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை கோருகிறது!

தீர்மானம் 2 - ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி ஆறு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

காந்தியடிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட கோபால் கோட்சேவை 14 ஆண்டுகளில் மகாராட்டிர காங்கிரசு அரசு விடுதலை செய்தது. 257 பேர் கொல்லப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைபட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் வெறும் ஆறு ஆண்டுகளே சிறையிலிருந்த நிலையில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

இராசீவ் கொலை வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதி கே.டி. தாமஸ், இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் கவனிக்காமல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, எனவே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென அறிவித்துள்ளார். பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன், பேரறிவாளன் கூறிய அசல் வாக்கு மூலத்தைப் பதிவு செய்யாமல், தன் விருப்பத்திற்கேற்ப வாக்கு மூலத்தைப் பதிவு செய்து தவறு செய்து விட்டதாக ஊடகத்தாரிடம் கூறினார். அத்துடன், உச்ச நீதிமன்றத்திற்கும் இது தொடர்பாக மனு அனுப்பியுள்ளார். அவர் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய இராணுவ உளவுப்பிரிவு அறிக்கை, இராசீவ் காந்தி கொலைத் திட்டம் குறித்து இவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என கூறியுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற சிறையாளிகளின் தண்டனையைக் குறைக்கவோ அல்லது அவர்களை விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்றும், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு விரும்பினால் அப்பிரிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளன.

இருபத்தெட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய மறுப்பது இந்திய ஆட்சியாளர்களின் வன்நெஞ்சத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும்தான் காட்டுகிறது. அவர்கள் சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடிக்கவில்லை என்பது வெளிக் காட்டுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவை ஓரு மனதாக ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றி ஆறு மாதங்கள் ஆன பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதில் கையெழுத்திடாமல் இருப்பது, தமிழ்நாடு அரசின் அதிகாரத்தைப் பறிக்கின்ற செயலாகவும், சட்டத்திற்குப் புறம்பாக தமிழர்களை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

சட்டப்படி அமைந்துள்ள மாநில அமைச்சரவை முடிவை ஆதரித்துக் கையொப்பமிட ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்ற விதியை, கெட்ட உள்நோக்கத்தோடு – பழிவாங்கும் நோக்கில் ஆளுநர் பயன்படுத்தக் கூடாது!

தமிழ்நாடு ஆளுநர் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளித்து, தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தில் கையெழுத்திட்டு, ஏழு தமிழர்களை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 3- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் - அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்!

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை பாலியல் பணயக் கைதிகளாக வைத்திருந்து சீரழித்த கயவர்கள் குறித்து வரும் செய்திகள், நெஞ்சைப் பதற வைக்கின்றன. பிடிபட்டுள்ள நான்கு கயவர்களையும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காப்பாற்ற முயல்வதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சீரழித்து வந்துள்ள இந்த கயவர் கூட்டம் குறித்து, காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் ஒன்றுமே தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை. மக்களுக்காகப் போராடும் இயக்கங்களையும், தலைவர்களையும் சீருடை அணியாத காவலர்களை விட்டு ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வரும் தமிழ்நாடு உளவுத்துறைக்கு, இந்த கயவர் கூட்டத்தை உளவறிந்து சொல்வதில் ஏன் பின்னடைவு?

பிடிபட்ட நான்கு பேரையும் உடனடியாகக் காவலில் எடுத்து விசாரித்து, அவர்களின் பின்னுள்ள அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகள் யாரெனக் கண்டறிய வேண்டியதில் முனைப்பு காட்டாத காவல்துறை, “பிடிபட்டவர்களுக்கு அரசியல் பின்னணியே இல்லை” என அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. பொள்ளாட்சி புறநர் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் இந்த அறிவிப்பே, இவ்வழக்கில் அரசியல் பின்னணி உள்ளதென பலரையும் ஐயப்பட வைத்துள்ளது.

முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய நால்வரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்வது, அவர்களை யாரும் விசாரிக்க முடியாதபடி பாதுகாத்து ஆறு மாதங்கள் கழித்து விடுதலை செய்யும் நடவடிக்கையாகத் தெரிகிறதே தவிர, உண்மைகளை வெளிக் கொணரும் முயற்சியாகத் தெரியவில்லை.

பிடிபட்ட நான்கு பேர் மட்டுமே ஏழாண்டுகளாக இக்குற்றச் செயல்களை நடத்தினார்கள் என்ற காவல்துறையின் கூற்றும் நம்பும்படியாக இல்லை. இக்குற்றம் குறித்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் குறித்து இரகசியம் காக்க வேண்டிய காவல்துறையினர், அதை வெளிப்படையாக்கியதும், புகார் அளித்த பெண்ணின் சகோதாரனைத் தாக்கிய அ.தி.மு.க. பிரமுகரை அடுத்த நாளே பிணையில் செல்ல அனுமதித்ததும் நம் ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.

ஆளுங்கட்சி பிரமுகர்களைக் காப்பாற்றி, புகார் அளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் காவல்துறையினரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!

ஆளுங்கட்சி – எதிர்கட்சி எனப் பெரும் அரசியல் புள்ளிகள் இக்குற்றக் கும்பலின் பின்னுள்ள நிலையில், நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை(சி.பி.ஐ.)க்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், இதில் உண்மைகள் கண்டறியப்படுமா என்பதும் ஐயமாக உள்ளது.

எனவே, சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை நடைபெறுவது போல், நீதிமன்றத்தின் நேரடி பார்வையின் கீழ் நேர்மையான அதிகாரிகள் தலைமையில் சுதந்திரமான விசாரணைக் குழு அமைத்து, இவ்வழக்கிலுள்ள உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்! பிடிபடும் கயவர்கள் மீது காலதாமதமின்றி, உடனடியாகக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தீர்மானம் 4 - தமிழ்நாடு தொடர்வண்டித் துறை தொழிலகங்களில் வடமாநிலத்தவரை சேர்க்கக் கூடாது! பொன்மலையில் நடந்த நேர்காணலை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசின் தொடர்வண்டித் துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,765 தொழில் பழகுநர்களில் 1,600 பேர் வடமாநிலத்தவர் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெறும் 9 விழுக்காட்டு இடங்களே தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான நேர்காணல் திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் நடந்து முடிந்துள்ளது.

இதேபோல், கடந்த வாரம் (04.03.2019) வெளியான இந்திய அரசின் குரூப் - டி தேர்வில், சென்னை மண்டலத்தில் அதிகமான அளவில் வடமாநிலத்தவர்களே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குறித்த பல கேள்விகள் கேட்கப்படும் அத்தேர்வில் வடமாநிலத்தவரே அதிகமாகத் தேர்ச்சி பெற்றிருப்பது, அத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதையே காட்டுகிறது!

முறைகேடான வழிகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைக் குடியமர்த்தும் இந்திய அரசின் இச்சதிச் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும்! உடனடியாக இவ்விரு தேர்வுகளையும் முழுவதுமாக இரத்து செய்து, இந்திய அரசுத் தொழிலகங்களிலும் அலுவலகங்களிலும் 90 விழுக்காட்டு இடங்களுக்கு மண்ணின் மக்களாகிய தமிழர்களையே தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, இவற்றை வேடிக்கைப் பார்க்காமல், இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்!

தீர்மானம் 5 - சூழலியல் மற்றும் மண்ணுரிமைப் போராளி முகிலனை உடனடியாகக் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்!

கூடங்குளம் அணு உலையைத் தடை செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், தாது மணல் - ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற சிக்கல்களில் உடனுக்குடன் எதிர்வினையாற்றி போராடி வந்த சமூகச் செயல்பாட்டாளர் தோழர் முகிலன் காணாமல் போய், 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தமிழ்நாடு காவல்துறை அவரை தேடிக் கண்டுபிடிக்காமல் அலட்சியம் காட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கருவிலிருந்து கல்லறை வரை ஒருவரின் உயிருக்கும் வாழ்வுரிமைக்கும் பொறுப்பேற்க வேண்டியது அரசின் சட்டக்கடமையாகும்.

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி வலியுறுத்தி கடந்த 2018 மே 22 அன்று, அறவழிப் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றது. காவல்துறையின் இச்செயல் தற்காப்புக்கானதும் இல்லை - தற்செயல் நிகழ்ச்சியும் இல்லை – நபர்களைக் குறிவைத்து திட்டமிட்டு சுட்டுக் கொல்வதாகும் என்று அம்பலப்படுத்தும் வகையில் ஒளிப்பட சான்றுகளுடன் ஆவணப்படம் தயாரித்து அதனை கடந்த 15.02.2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் ஊடகத்தார் முன்னிலையில் வெளியிட்டார். அன்றிரவே, அவர் காணாமல் போயிருப்பது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அக்கறையோடு செயல்பட்டிருந்தால் முகிலனின் நிலை குறித்து, இந்நேரம் உண்மை நிலையை வெளிப்படுத்தியிருக்கலாம். உயர் நீதிமன்றமும், என்றி தீபேன் அவர்கள் தொடுத்த ஆட்கொணர்வு மனுவில் தீவிரம் காட்டாமல் நீண்ட இடைவெளி கொடுத்து வாய்தா போட்டுக் கொண்டே உள்ளது. உடனடியாக காணாமல் போன முகிலனை மீட்பதிலும், அவருடைய உண்மை நிலையை அறிவிப்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி மக்களுக்கு உண்மையை நிலைநாட்ட வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT