ஈழத்துப் பிரகடனம்
ஈழப் போராளிகளுடன் செய்த எந்த உடன்பாட்டையும் சிங்கள இனவாத அரசுகள் செயல்படுத்தியதில்லை. உலக நிர்பந்தத்திற்காய் பணிந்து அந்த உடன்பாடுகளில் சிங்கள அரசின் அதிபர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் சிங்கள இனவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளின் காரணமாக, சிங்கள ராணுவத்தின் வெறி காரணமாக, அந்த உடன்பாடுகளை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். இவைதான் கடந்த பல பத்தாண்டுகளாக ஈழ மக்கள் கண்ட அனுபவம்.
உடன்பாடுகளால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ் இனத்தையே அழிக்கின்ற ஈனச் செயலை சிங்கள அரசும் ராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே வேறு வழியின்றி "ஈழப் பிரச்சினைக்குத் தனி ஈழம் தான் தீர்வு" என்று மாவீரர் எழுச்சி நாளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கிறார்.
சிங்கள இனவாதத்திற்குச் சேவை செய்யும் சில தமிழ்ப் புல்லுருவிக் குழுக்கள் உண்டு. அந்த குழுக்கள் கொழும்பு நகரில் இனவாத அரசின் அரவணைப்பில் அச்சத்தோடு இருக்கின்றன. அவர்கள்தான் ஈழத்துப் பிரதிநிதிகள் என்று ராஜபட்சேக்கள் நாடகமாடுகிறார்கள். ஈழத்தமிழர்களெல்லாம் புலிகள் அல்ல என்று ராஜபட்சே புதிய தத்துவம் சொல்லியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள்தான் ஈழமக்கள் ஏற்றுக்கொண்ட தளபதிகள். அதனால் தான் ஜெனிவாவில் சிங்கள அரசின் பிரதிநிதிகள் ஈழப்போரளிகளின் பிரதிநிதிகளுடன் பேசினார்கள். ஆனால் கொழும்பிற்கு வந்தால் குரலை மாற்றிக் கொள்கிறார்கள். "அரசு பயங்கரவாதம்" என்றால் என்ன என்பதற்கு இன்றைக்கு ஈழத்தில் சிங்கள இனவாத அரசு இலக்கணம் எழுதிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஊரையும் இரண்டாகப் பிரித்து சிங்கள ராணுவம் முகாம் போட்டிருக்கிறது. ஆங்காங்கே ஈழத்தமிழர்களை சிறை வைத்திருக்கிறது. நடமாடுவதற்குக் கூட அவர்களுக்கு உரிமை இல்லை. பாடிப் பறந்த தமிழ் குயில்கள் ராணுவச்சிறைக்குள் அடைக்கப்படுகின்றன. யாழ்ப்பாண நெடுஞ்சாலை அடைக்கப்பட்டதால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு எல்லா உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ இஞ்ஜி விலை 2 ஆயிரம் ரூபாய். ஒரு முட்டை விலை 50 ரூபாய். இப்படி செயற்கை பஞ்சத்தை உருவாக்கி ஈழ மக்களை உயிரோடு சித்திரவதை செய்கிறது.
ஈழத்து இளைஞர்களுக்கோ, பெண்களுக்கோ எந்தப் பாதுகாப்பும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில்தான் விடுதலைப் புலிகள் தயாராகிறார்கள் என்று ஒரு அபாண்டத்தை இப்போது அவிழ்த்து விட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவெனில் அந்தப் பல்கலைக் கழகத்தை சிங்கள இனவாத அரசு மூடுவதற்கு முயற்சிக்கிறது என்று பொருள்.
சிங்கள இனவாத கட்சிகளுக்கு ராஜபட்சே கொத்தடிமையாகிவிட்டார் என்று அண்மையில் சந்திரிகாவே குற்றம் சாட்டியிருப்பது நினைவிருக்கலாம். எனவே ராஜபட்சேக்களின் பரிபாலனத்தில் ஈழத்து மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை. எனவே ஈழமக்களுக்கு தனி நாடுதான் வழி என்ற நிலைக்கு அவர்களை சிங்கள இனவாதிகளே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதனைத்தான் மாவீரர் நினைவு தினத்தில் பிரபாகரன் பிரகடனம் செயிதிருக்கிறார்.
தமிழர்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு சிங்களத் தலைவர்கள் நியாயமான தீர்வினை ஒருபோதும் முன் வைக்க மாட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. ஆகவே நடக்க முடியாத காரியத்தில் நம்பிக்கை வைத்து அதே பழைய பாதையில் (பேச்சுவார்த்தை) நடப்பதற்கு இனியும் நாங்கள் தயாராக இல்லை. அதில் பயனும் இருக்கப் போவதில்லை என்று அவர் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.
இது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போது சிங்கள அதிபர் ராஜபட்சே இன்னொரு நாடகம் நடத்துகிறார். ஈழ மக்களுக்கு எந்த அளவு உரிமை அளிப்பது என்பதனை ஆராய அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்திருக்கிறார். அந்தக் குழுவில் ஈழப் போராளிகளுக்கு இடமில்லை. நாடாளுமன்ற ஈழ உறுப்பினர்களுக்கு இடமில்லை. சிங்கள அரசுக் கட்சி, எதிர்க்கட்சி, இரண்டு சிங்கள இனவாதக் கட்சிகள், ஈழ மக்கள் குப்பைத் தொட்டியில் வீசிவிட்ட சில கண்காணிக் குழுக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் குழுவின் பணி என்ன தெரியுமா? இலங்கையில் பஞ்சாயத்துக்களுக்கு எப்படி உரிமை அளிப்பது? எவ்வளவு உரிமை அளிப்பது? என்று தீர்மானிப்பதுதான் இந்தக் குழுவின் வேலையாகும். இந்தக் குழுவினர் அண்மையில் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்தனர். அப்படியே பஞ்சாயத்துராஜ் மத்திய மந்திரி மணிசங்கர அய்யரையும் சந்தித்தனர்.
ஈழ மக்கள் தங்கள் ஊராட்சிகளுக்கு அதிகாரம் கேட்டா போராடுகிறார்கள்? சிங்கள மக்களுக்கு ஈடாக தங்களுக்கு சம உரிமை கோரிப் போராடுகிறார்கள். ஆனால் இல்லாத ஊருக்குப் போகாத வழியை ராஜபட்சேக்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களை தங்கள் நாட்டுக் குடிமக்களாக அங்கீகரிப்பதற்குக்கூட மறுக்கிறார்கள். ஆகவே அரசியல் உரிமைக்காகப் போராடும் ஈழ மக்களை ஊருக்கு ஊர் பிளவுபடுத்த ஆலயங்களையும், மாதா கோவில்களையும் ராணுவப் பாசறைகளாக்கி இருக்கிறார்கள்.
ராஜபட்சே அதிபராக பொறுப்பேற்ற பின்னர்தான் ஈழம் முழு ராணுவமாகியது. ஈழப்பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதற்கே விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. எனவே மண்ணின் மானம் காக்க ஈழப்போராளிகளை ராஜபட்சே உருவாக்கி இருக்கிறார். அவர்கள் இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் தீர்வுக்கு வழி தெரியவில்லை. ராணுவத்தை நம்புகிறார்கள். இதுவரை எவரிடமும் உதவி கோரி ஈழப்போரளிகள் கையேந்தி நின்றதில்லை. அமரர் எம்.ஜி.ஆர் தந்த நிதியை மட்டும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இஸ்ரேலின் இனவாத வெறியை எதிர்த்து பாலஸ்தீன வீரர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்குப் பின்னே அரபு நாடுகள் அணிவகுக்கின்றன. அதே போல் லெபனானில் போராடி வரும் இஸ்புல்லா போராளிகளுக்குப் பின்னே அண்டை நாடுகள் துணை நிற்கின்றன. ஆனால் ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக எந்த நாடும் நிற்கவில்லை. எந்த நாடும் உதவி செய்ததில்லை. ஆனால் உலகம் முழுமையும் பரவியிருக்கும் உணர்வுள்ள தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். உலகத் தமிழர்களின் உதவி தேவை என்று முதன்முதலாக பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தங்களது ஆதரவுக் குரலைத் தொடர்ந்து வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இரத்த உறவுக்காரர்களின் உதவியைத்தான் அவர் நாடுகிறார். ஈழப்பிரச்சினையில் இன்றைய மைய அரசு சிங்கள இனவாத அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தமிழக அரசிற்குத் தெரியாமலே கோவையில் சிங்கள காவல்துறையினருக்குப் பயிற்சி அளித்தன; அதனைச் சட்டமன்றத்திலேயே கலைஞர் கண்டித்தார்.
அடுத்து அந்த போலிஸ்காரர்களை பெங்களூருக்கு அனுப்பி பயிற்சி கொடுத்தார்களே தவிர தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இன்றைக்கு போர் விமானங்களை ஓட்ட சிங்கள விமானப் படையினருக்கு சண்டிகாரில் பயிற்சி அளிக்கிறார்கள். அந்த விமானங்கள் நாளை ஈழத்தின்மீதுதான் குண்டுமாரி பொழியும். இதனைத் தெரிந்தே செய்கின்ற மைய அரசின் பெரிய அதிகாரிகள் நாளை என்ன சொல்வார்கள்? தனி ஈழக்கோரிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்பார்கள்.
அவர்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்திற்கு சுயாட்சி என்ற நிலையை இதுவரை சிங்கள அரசிடம் இந்திய அரசு தெரிவித்து வந்தது. அந்த யோசனையை இன்றுவரை அந்த அரசு ஏற்றுக்கொண்டதில்லை. அதன் விளைவுதான் தனித்தமிழ் ஈழம்தான் ஒரே வழி என்ற ஈழப்போராளிகளின் பிரகடனமாகும்.
நன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007
Post a Comment