உடனடிச்செய்திகள்

Tuesday, July 14, 2009

திருச்சியில் எழுச்சியுடன் நடந்த ”தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு” (படங்கள்)

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று(12.07.09) நடத்தப்பட்ட ”தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு” சிறப்பாக நடந்தேறியது. தமிழினத்தின் தேசிய எழுச்சியை ஒரு எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஈழ உணர்வாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.



ஓவியங்கள் மற்றும் புகைப்படக் காட்சி

பாவலர் சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் காலை 9 மணியளவில் மாநாடு தொடங்கியது. அதன் பின்னர், ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இதனை தணிக்கை அறிஞர் மு.குமரசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் ஓவியர்கள் கவிபாஸ்கர், ஆவுடி கண்ணன், திருமலை, க.ஆனந்த் ஆகியோரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கலைஞர் நியாஸ் அகமது அவர்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஈழத்தமிழர் படும் அவலங்களை காட்சிப்படுத்தும் படங்கள் அரங்கம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய அரங்கு

காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியிள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி பேசினார். ஈழத்தில் இன அழிவிற்கு முழு முதற் காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை என்பதை விளக்கினார்.

பின்னர் ”உலகமயமும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் பேசினார். ஈழத்தில் நடந்த இன அழிவிற்கு உலகமய நாடுகள் எப்படி காரணமாக விளங்கின என்பது பற்றியும் உலக நாடுகளின் சதிகள் பற்றியும் அவர் விளக்கினார். அவருக்குப் பின், ”மொழிக் கொள்கை” குறித்து முனைவர் அரசேந்திரன் பேசினார். தமிழ்த் தேசியத்தின் மொழிக் கொள்கை ஒரு மொழிக் கொள்கையே என்றும் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவை மோசடிகள் என்றும் அவர் விளக்கினார். அதன் பின்னர், மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமன் ”இழந்த நில, நீர் உரிமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருப்புக் குரல் நாடகம்

(ஓவியர் புகழேந்தி உரையாற்றும் பொழுது)

(கருப்புக் குரல் நாடகத்திலிருந்து....)

(கருப்புக் குரல் நாடகத்திலிருந்து....)

பிற்பகல் 1.30 மணியளவில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்திய கருப்புக்குரல் கலை நிகழ்வு நடைபெற்றது. ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். பாடலுடன் தொடங்கிய இந்நாடகத்தில் ஓட்டு அரசியல்வாதிகளின் முகத்திரைக் கிழிக்கும் வண்ணம் காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நாடகத்தை திரு. ஐந்து கோவிலான் இயக்கியிருந்தார். வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் நிலையை காட்சிப்படுத்தியிருந்த விதம் பார்வையாளர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.

கலை நிகழ்ச்சி

(கலை நிகழ்ச்சியிலிருந்து....)

இதன் பின்னர், அரியமங்கலம் இலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி நடந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “சங்கே முழங்கு” பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.

பாவீச்சு

(கவிஞர் கவித்துவன் பாவீச்சு நடத்துகிறார்...)

(கவிஞர் கவிபாஸ்கர் கவிதை வாசித்த பொழுது...)

இந்நிகழ்விற்குப் பின்னர், பல்வேறு கவிஞர்கள் பங்கு கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வை “திருக்குறள்” முருகானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார். கிறார். இப்பாவீச்சில், பாவலர்கள் தமிழேந்தி, கவித்துவன், கவிபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்தனர்.

படத்திறப்பு
அதன் பின்னர், அண்மையில் காலமான புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களது திருவுருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி செந்தமிழர் இயக்க அமைப்பாளர் தோழர் ந.மு.தமிழ்மணி அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். திருமுருகனாரின் சிறப்பான குணங்களையும் தமிழ் இலக்கணத்தில் அவரது அறிவாற்றலையும் விளக்கி அவர் பேசினார். குடந்தைத் தமிழ்க் கழகத்தின் அமைப்பாளர் தோழர் சா.பேகன் அவர்கள் படத்தை திறந்து வைத்து உரை நல்கினார்.

கொடி எரிப்பில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு

(மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி உரையாற்றும் போது...)



(கொடி எரிப்பில் சிறை சென்ற தஞ்சை த.தே.பெ.க. நகரச் செயலாளர்
பழஇராசேந்திரன் அவர்கள் பாராட்டப்பட்ட போது...)

இந்நிகழ்விற்குப் பின், ஈழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள இந்திய - சிங்கள கூட்டுப் படையினரைக் கண்டித்து இந்திய இலங்கைக் கொடிகளை எரித்து சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி அவர்கள் தோழர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பித்தார்.

தீர்மானங்கள் முன்மொழிவு

(தோழர் கோ.மாரிமுத்து தீர்மானங்களை முன் வைக்கிறார்...)


(தோழர் மதுரை ஆனந்தன் தீர்மானங்களை முன் வைக்கிறார்...)


(தோழர் குழ.பால்ராசு தீர்மானங்களை முன் வைக்கிறார்...)

மாநாட்டுத் தீர்மானங்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு அவர்கள் படித்தார். முதல் தீர்மானத்தை த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து படித்தார். இரண்டாம் தீர்மானத்தை மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் ஆனந்தன் வாசித்தார். மூன்றாம் தீர்மானத்தை சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் வாசித்தார். தீர்மானங்கள் பலத்த கருவொலியுடன் நிறைவேற்றப்பட்டன.

“தமிழீழ அரங்கு” - கருத்தரங்கம்

இதன் பின்னர், தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு “இப்படிக்கு” இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது தலைமையுரையில், கொலைகாரக் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியை பற்றியும் ஈழத்திற்கு இந்தியத் தேசியம் விளைவித்த தீமைகள் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.

(முனைவர் வீ.ந.சோமசுந்தரம் பேசுகிறார்...)

(தோழர் க.அருணபாரதி பேசுகிறார்...)

(தோழர் கண.குறிஞ்சி பேசுகிறார்...)

இதன் பின்னர், ”ஈழத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் தோழர் க.அருணபாரதி பேசினார். ”தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலே ஈழத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்கும் உதவும் கருத்தியல்” என்பதை சாரமாகக் கொண்டு அவரது பேச்சு அமைந்திருந்தது. “இந்தியமும் ஈழமும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் உரைநல்கினார். இந்தியத்தேசிய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. “ஈழமும் உலகநாடுகளும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி அவர்கள் ஈழத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்நிலையை பற்றியும், உலக நாடுகள் ஈழப்பிரிச்சினையில் அக்கறை கொள்ளாதது பற்றியும் கருத்துரையாற்றினார்.

நிறைவரங்கம்

(நிறைவரங்க மேடையில் தலைவர்கள்...)

மாலை 7 மணியளவில் நிறைவரங்கம் தொடங்கியது. இந்நிகழ்விற்கு பாவலர் பரணர் அவர்கள் தலைமை தாங்கினார்.

(பாவலர் பரணர் பேசிய பொழுது...)


(தோழர் அமரந்தா பேசிய பொழுது...)

(தோழர் நா.வைகறை பேசிய பொழுது...)


(தோழர் மதுரை அருணா பேசிய பொழுது...)

தமிழக இளைஞர் முன்ணனி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை அவர்கள் தமிழ்த்தேசியமே இனி எதிர்கால வரலாற்ரைறத் தீர்மானிக்கும் என்று பேசினார். லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத் தலைவரும், மார்க்சிய எழுத்தாளருமான தோழர் அமரந்தா ஈழப்பிரச்சினையில் தவறான முடிவெடுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அது குறித்து நடந்த கலந்துரையாடல்களைப் பற்றி பேசினார். மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா அவர்கள் தமிழ்த் தேசியத்தில் பெண்களின் பங்கு குறித்து விளக்கிப் பேசினார்.


(தோழர் கொளத்தூர் மணி பேசிய பொழுது...)

(தோழர் தியாகு பேசிய பொழுது...)

சிறப்புரையாக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் உரையாற்றினார். பின்னர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் தமிழ்த்தேசியம் சாத்தியமே என்ற சாரத்தில் உரை நிகழ்த்தி சிறப்பித்தார்.


(தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றுகிறார் ...)

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி கூறினார்.

மாநாட்டு ஏற்பாடுகளை திருச்சி மாநகர த.தே.பொ.க. அமைப்பாளர் தோழர் கவித்துவன் மற்றும் திருச்சி மாநகர தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் தோழர் இராசாரகுநாதன், தி.மா.சரவணன், பி.ரெ.அரசெழிலன் உள்ளிட்ட பலரும் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.

Unknown said...

Thank you friend.


- Kiri

செங்குட்டுவன் said...

தமிழகத்து மரகட்டைகளுக்கு உணர்வு எப்போ வருமோ ?
இந்த நாதியத்த ஈழத்தமிழனுக்கு எப்போ விடிவு வருமோ ?அப்போதுதான்
ஈகி முத்துகுமாரின் ஆத்மாவுக்கு சாந்தி வரும்...
உணர்வாளர்களுக்கு நன்றி....
இராம. செங்குட்டுவன் .
www.maathiyosee.blogspot.com

புரட்சிகர தமிழ்தேசியன் said...

எந்த இனத்திலும் இல்லாத இழவு இது! இது தமிழினத்திற்கே உரித்தானது!! தமிழனுக்கு தண்ணீர் தரகூடாது என்றால் கன்னடனுக்குள் இருக்கிற லிங்காயத்து முதல் தலீத் வரை அனைவரும் ஒற்றுமையாக தமிழனுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்..முல்லை பெரியாறு என்றால் தமிழனுக்கு எதிராக மலையாளி நாயர்.. மேனன் என்று பிரிந்து நிற்பது இல்லை.. தமிழினை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்று செயல்படுகிறார்கள்..இன்னும் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.. தமிழன் தன்மானத்தோடு வாழ தனி தமிழ்நாடு என்ற கருத்துருவாக்கம் உருபெற்று வரும் இவ்வேளையில் சிலர் சாதி முதலில் தேசியம் பிறகு என்று குழப்புகிறார்கள்..அதாவது சாதியை ஒழித்துவிட்டு தமிழ் தேசியத்தினை வளர்க்க வேண்டுமாம்..அதாவது 3000 ஆண்டுகளாக பிரித்துவைத்த பார்பணியத்தினை ஒரே நாளாளில் தமிழக மக்களை மாற்றி விட்டு நாம் தமிழ் தேசியம் பேச வேண்டுமாம்.. அதாவது இன்னும் நாம் 300..400.. ஆண்டுகள் இந்திக்காரனிடம் அடிமையாக இருந்து விட வேண்டும் என்பதே கட்டுரையாளரின் எண்ணம்.. இவ்வளவு பேசும் இவர்கள் புதியதாக பிறக்கும் தமிழ் தேசியத்தினுடைய சட்டதிட்டங்களை வரையறுக்கலாமே? சாதி ஆதிக்க வெறி குறித்து மிககடுமையான தண்டனைகளை முன் மொழியலாமே? தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் தமிழ் தேசிய வரைவு அறிக்கை குறித்து வெளியான ஆலோசனைக்கு இவர்கள் அளித்த ஆலோசனைகள் என்ன? என்பதை தெரிந்த்து கொள்ள ஆசை! சாதியை ஒழித்துவிட்டுதான் இப்போதைக்கு தமிழ்தேசியம் பேசவேண்டுமென்றால் இந்திகாரனிடம் இன்னும்300 400 ஆண்டுகள் அடிமையாகவே இருக்கவேண்டும்..உள்வீட்டு பிரச்சனையை பிறகு நமக்குள் கூடி ஆலோசனை செய்து கொள்ளலாம்.. இனத்தின் பிரச்சனை என்ன என்பதனை கவனிக்கவேண்டும்.. காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் பெரும்பாலும் கூலிவேலை செய்த தலித்துகள் அடித்து விரட்டபட்டார்கள்..அப்போது அங்குள்ள தலித்துகள் யாரும் குரல் கொடுக்கவில்லை.. பிரச்சனைகளே பிரச்சனைக்கு தீர்வு!இன்று ஈழ விடுதலை போராட்டத்தால் ஈழதமிழர் அனைவரும் சாதிய அடையாளங்களை மறந்து பொது பிரச்சனைக்காக போராடுகின்றனர்..அதே போல் இந்தி தேசியதினை எதிர்த்து இங்கு நாம் போராட புறப்படும் போது இங்கும் அவ்வாறான சிக்கல் உருவாகும் போது.. நமக்கும் இழப்புகள் ஏற்படும்! அப்போது நிச்சயம் அனைவரும் தமிழராய் ஒன்றினைவோம்! வாழ்க தமிழ் தேசியம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT