உடனடிச்செய்திகள்

Saturday, October 10, 2009

இலங்கை செல்லும் தி.மு.க. கூட்டணிக் குழு இராசபட்சேவின் விருந்தினர் குழுவே - த.தே.பொ.க. குற்றச்சாட்டு

இலங்கை செல்லும் தி.மு.க. கூட்டணிக் குழு
இராசபட்சேவின் விருந்தினர் குழுவே
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
வன்னி வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களில், பட்டினியால், நோயால் அன்றாடம் பலர் மடிகிறார்கள். விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று இளைஞர்களைச் சிங்களப்படையினர் சுட்டுக் கொல்கிறார்கள். அனைவரும் குடிநீரின்றித் தவிக்கின்றனர். கழிப்பிடம் செல்ல மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். மழை வெள்ளம் புகுந்து கூடாரங்களை அடித்துச் செல்கிறது. பெண்களைப் படையாட்கள் பாலியல் வன்முறை செய்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளை அன்றாடம் மேற்கத்திய ஏடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன. பல நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசைக் கண்டித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஊடகத்துறையினர், மனித உரிமை அமைப்பினர் அடங்கிய பார்வையாளர் குழுவை வன்னி முகாம்களுக்கு அனுப்பி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் இந்தக் கோரிக்கை உள்ளது.

இப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஈழம் சென்று பார்த்தனர். இந்தியப் பிரதமர் அனுமதித்துள்ளார் என்ற செய்தி வந்துள்ளது.

நாடாளுமன்றக் குழுவை அனுப்புவதெனில் அனைத்திந்திய அளவில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்புவதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டுக் குழுவும் அனைத்துக் கட்சிக் குழுவாக இல்லாமல் ஆளுங்கட்சியின் கூட்டணிக்கட்சிகளின் குழு என்பது உண்மை அறியும் குழுவாகத் தெரியவில்லை. பாசிஸ்ட் இராசபட்சேவின் விருந்தினர் குழுவாகத்தான் தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு காங்கிரஸ் ஆட்சி பல வகைகளில் உதவி செய்தது. அந்த உதவிக்குத் துணை நின்றது. தி.மு.க. ஆட்சி. இக்கட்சிகளின் தோழமைக் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. இக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசின் விருந்தினர்களாகச் சென்று திரும்பும் போது எப்படிப்பட்ட அறிக்கை கொடுப்பார்கள் என்ற ஐயம் வலுவாக உள்ளது. அங்கு நடக்கும் கொடுமைகளை மூடிமறைக்கும் அறிக்கையாகவே அது இருக்க வாய்ப்புண்டு.

எனவே ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட அனைத்திந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்ப வேண்டும் என்று இந்திய, தமிழக அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT