உடனடிச்செய்திகள்

Monday, October 3, 2011

மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்க சென்னையில் 05.10.2011 அன்று த.தே.பொ.க. உண்ணாப்போராட்டம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் சாவுத் தண்டனையை நீக்க

தமிழக அரசே அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றுக!

05.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அடையாள உண்ணாப்போராட்டம்

 

பேரறவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் சாவுத் தண்டனையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 05.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒருநாள் அடையாள உண்ணாப்போராட்டம் நடக்கிறது.

 

இராசீவ் கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும், பேரறவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களுக்கு இந்திய அரசு சாவுத் தண்டனையை உறுதி செய்தது.

 

முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கில் ஈழதமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசுக்கு அனைத்து வகை உதவிகளையும் செய்த இந்திய அரசு, அதன் இரத்த வெறி அடங்காமல் இந்த மூன்று தமிழர்களுக்கும் சாவுத் தண்டனையை உறுதி செய்ததை கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர்.

 

இதன் காரணமாக தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை கண்டு அஞ்சிய தமிழக அரசு, சட்டப்பேரவையில் மூவர் தூக்கை நிறுத்தி வைக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் மூவர் தூக்கிற்கு 8 வார கால இடைக்காலத தடையாணை வழங்கியது.

 

இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161இன் பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, தமிழக அரசு தனது அமைச்சரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இக்கோரிக்கையை ஆதரித்து வரும் புதன் (05.10.2011) அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ கெரேஜில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாப்போராட்டம் நடக்கிறது.

 

இப்போராட்டத்தை த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கி தொடக்கி வைக்கிறார். த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசுகிறார்.

 

இதில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள குழ.பால்ராசு, மதுரை அ.ஆனந்தன், க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தஞ்சை பழ.இராசேந்திரன், பெண்ணாடம் க.முருகன், கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, சிதம்பரம் அமைப்பாளர் ஆ.குபேரன் உள்ளிட்ட அமைப்பின் பல்வேறு நிர்வாகிளும், திரளான தோழர்களும் கலந்து கொள்கிறார்கள்.

 

தமிழின உணர்வாளர்களும், மனித நேயர்களும் இவ்வுண்ணாப் போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டுமென தமிழ்த தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

 

 

செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT