உடனடிச்செய்திகள்

Thursday, October 6, 2011

பேரறிவாளன், முருகன்ஈ சாந்தன் மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழ்ச்சி - பெ.மணியரசன் பேச்சு!











"பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும்
வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழச்சி நடக்கிறது"
சென்னையில் த.தே.பொ.க. பட்டினி்ப்போராட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு!


"இந்திய அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. அதனை நாம் முறியடிப்போம்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

சென்னை கோயம்பேட்டில், மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அமைப்புகள் பங்குகொள்ளும் 40 நாட்கள் தொடர் பட்டினிப் போராட்டம் நடந்து வருகின்றது. அதன் 14ஆவது நாளான இன்று(05.10.2011) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் உண்ணாப் போராட்டம் நடந்தது.

காலை 9 மணியளவில், மூவர் தூக்கை எதிர்த்துத் தீக்குளித்தத் தழல் ஈகி தோழர் செங்கொடியின் படத்திற்கு ஈகச்சுடரேற்றி போராட்டம் தொடக்கப்பட்டது. த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேராசிரியர் அறிவரசன்  உண்ணாப் போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

மாலையில், நடந்த நிறைவரங்கத்தில் தமிழின உணர்வாளர் திருச்சி சவுந்திரராசன் கலந்து கொண்டு பேசினார். இறுதியில், பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

அவர் பேசும் போது, "1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தமிழ் மாணவர்கள் 300 பேரை இந்திய அரசு சுட்டுக் கொன்றது. 1987இல் இராசீவ் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழீழத்திற்குச் சென்ற இந்திய அமைதிப் படை 6000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்றொழித்து, நம் தமிழ்ப் பெண்களை சீரழித்தது. அதே இந்தியப் படை தான் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் 600 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதைப் பார்த்து இரசிக்கிறது. 2009இல் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவனுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது, இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்திய அரசு இரத்தவெறி அடங்காமல் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தமிழினத்திற்கு மான உணர்ச்சி இருக்கிறதா என சோதித்துப் பார்க்கிறது இந்திய அரசு.

இந்திய அரசின் கைக்கூலிகளான சில காங்கிரசாரை வைத்துக் கொண்டு, இம்மூவர் தூக்கை இரத்து செய்யக் கோரும் வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. சோனியா காந்தி மறைமுகமாக தலையி்ட்டு, இம்மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தனக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கும் வேறொரு மாநில நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை மாற்ற முயற்சிக்கிறார். இந்த சூழ்ச்சியை நாம் புரிந்து கொண்டு வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது என்று நாம் போராட வேண்டும். இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்" என்று பேசினார்.

போராட்டத்தில், ஓவியர் புகழேந்தி, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை அ.ஆனந்தன், ஓசூர் கோ.மாரிமுத்து, நா.வைகறை, க.அருணபாரதி, தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் ஆ.குபேரன், கீற்று இணையதள ஆசிரியர் குழுத் தோழர் கீற்று நந்தன், தமிழ்ச்சமரன், பெருஞ்சித்திரன்(த.ஓ.வி.இ.), தஞ்சை மகளிர் ஆயம் தோழர் இலெட்சுமி, சென்னை அருணா, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த உணர்வாளர்கள் அருட்தந்தை அருண் ஏபேஸ், கதிரவன், பால் டேனியல் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர்கள் கவிபாஸ்கர், முழுநிலவன் ஆகியோர் மரண தண்டனைக்கு எதிரான கவிதைகள் வாசித்தனர். உண்ணாப்போராடத்திற்கு இடையே, தழல் ஈகி செங்கொடியின் இறுதி நிகழ்வும், பேரறிவாளன் அற்புதம் அம்மையாரின் செவ்வியும் அடங்கிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

போராட்டத்தில் திரளான இளைஞர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT