உடனடிச்செய்திகள்

Friday, October 14, 2011

கூடங்குளம் அணுஉலைநை நிறுத்தக் கோரி தமிழகமெங்கும் த.தே.பொ.க. போராட்டங்கள்! - பெ.மணியரசன் அறிவிப்பு!


கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்! 

தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!


இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் செயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத் தொழில் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு மின்சாரம் மிகவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கூடங்குளத்தில் உற்பத்தியாகவுள்ள 2000 மெகாவாட் மின்சாரத்தில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அணுஉலைத் திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத்தின் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் 'வேதனை'ப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் திடீரென்று இவ்வளவு அக்கறை ஏற்பட்டது பெரும் புதிராக உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன்சிங்கிற்கு உண்மையில் அக்கறை இருக்குமானால் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டும். நெய்வேலி மின்சாரம் ஒரு நாளைக்குப் பதினோரு கோடி யூனிட் கர்நாடகத்திற்கும், ஒன்பது கோடி யூனிட் கேரளத்திற்கும், ஆறு கோடி யூனிட் ஆந்திரப் பிரதேசத்திற்கும் தரப்படுகிறது. இம்மாநிலங்கள் முறையே காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, பாலாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள உரிமைகளை மறுத்து, வேளாண்மை, குடிநீர் மற்றும் நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம் இராம குண்டத்திலிருந்து 3 கோடி யூனிட் மின்சாரம் ஒருநாளைக்குத் தமிழகத்திற்கு வருகிறது. தமிழக நெய்வேலியிலிருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒரு நாளைக்கு ஒன்பது கோடி யூனிட் போகிறது. 6 கோடி யூனிட் கூடுதலாகத் தமிழகம்தான் தருகிறது.

தமிழ்நாட்டிற்கு இப்பொழுது மின்சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் ஆகும். கர்நாடக, கேரள, ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 26 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் போகிறது. நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குக் கொடுத்தால் இப்பொழுதே, மின் உற்பத்தியில் தமிழ்நாடு உபரி மாநிலமாக இருக்கும்.

தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலியம், எரிவளி முழுவதையும் இந்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைத்தால், தமிழ் மக்கள் பெட்ரோல், டீசல், எரிவளி ஆகியவற்றிற்கு அன்றாடம் உயரும் அதிக விலை கொடுக்க வேண்டிய தேவை எழாது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை உச்சநீதிமன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகியவை உறுதி செய்துத் தீர்ப்பளித்த பின்னும் அத்தீர்ப்புகளைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, தமிழகத்திற்குரிய தண்ணீரை, அம்மாநிலங்களே எடுத்துக் கொள்கின்றன. உச்சநீதிமன்ற – தீர்ப்பாயத் தீர்ப்புகளைச் செயல்படுத்த நடுவணரசுக்கு அதிகாரம் இருந்தும் சுட்டு விரலைக் கூட அசைக்காத பிரதமர் மன்மோகன்சிங் இப்பொழுது, கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிட்டால், தமிழ்நாட்டுத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று 'வேதனை'ப்படுவது முதலைக் கண்ணீர் வடிப்பது தவிர வேறல்ல.

உண்மையில் கூடங்குளம் பெருந்திட்ட அணுமின் நிலைய உற்பத்தியானது தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வர உள்ள பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காகத்தான்! தமிழக மக்களுக்கும், தமிழகச் சிறு தொழில் முனைவோருக்கும் தருவதற்காகக் கூடங்குளம் அணுமின் திட்டம் உருவாக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் உயிருக்கு உலை வைத்து, சாதாரண காலங்களில் கூட கதிர்வீச்சால் புற்று நோய் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கூடங்குளம் அணுமின் உலைகள் உண்டாக்கும் அத்தனை இழப்புகளையும் தமிழர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.  ஆனால் கூடங்குளம் அணுமின்சாரம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குப் பயன்படவேண்டும்.  இதுதான் இந்திய அரசின் திட்டம்.

தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ஓர் உறுதியான எதிர்நிலை முடிவுக்கு வரவேண்டும். கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் ஆதரவு, அதே வேளை கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கும் ஆதரவு என்ற இரட்டை நிலைபாட்டை நீண்ட காலம் அவர் எடுக்க முடியாது.

தமிழக மின்சாரத் தேவைக்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்குமாறு தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.  காற்று, கதிரவன் ஒளி, கடல் அலை, கழிவுப் பொருட்கள் போன்றவற்றின் மூலம் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைத் தான் நாட வேண்டும்.  சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது மிக மிக முகாமையானது.

கூடங்குளம் அணுமின் திட்டத்தை மூட வலியுறுத்திப் போராடும் மக்களுடன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து கொள்கிறது. கூடங்குளம் அணு மின்திட்டத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தித் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 அன்று சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், ஓசூர், திருத்துறைப்பூண்டி, திருச்செந்தூர், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை
நாள்: 14.10.2011


செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT