ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு தனியார் பள்ளி இடஒதுக்கீட்டை
விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!
கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தன்நிதி தனியார் பள்ளிகளிலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தனது 12.04.2012 நாளது தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
ஆயினும், இத்தீர்ப்பு இச்சட்டப்பிரிவிலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகளுக்கு விலக்களித்திருப்பது சமூகநீதியின்பாற்பட்டதல்ல. இது மறுஆய்வுக்கு உட் படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகள் உள்ளிட்டு அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் விலக்கின்றி இச்சட்டம் செயலுக்கு வரவேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், சென்ற கல்வி ஆண்டிலேயே இச்சட்டச் செயலாக்கம் குறித்து பள்ளிகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் 25 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைப்பதை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து உறுதிப்படுத்த வேண்டும்.
இதனை செயல்படுத்தும் போது, நடைமுறையில் இதனை பயனற்றதாக்கும் சூழ்ச்சியில் தன்நிதிப் பள்ளி நிர்வாகங்கள் இறங்கக் கூடும். எடுத்துக்காட்டாக, இடஒதுக்கீட்டு மாணவர்களை தனி வகுப்புப் பிரிவாக(செக்ஷன்) பிரித்து வைத்து, பிற மாணவர்களுடன் இணைய விடாமலும் அவ்வகுப்புப் பிரிவுகளை ஏனொதானோவென்று நடத்திப் புறக்கணிப்பதிலும், அந்நிர்வாகங்கள் ஈடுபடக் கூடும். இவ்வாறு நிகழாமல் இச்சட்டம் முறையாகச் செயல்பட தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும்.
வரும் கல்வியாண்டில் இதை செயல்படுத்துவதிலிருந்து தவிர்ப்பதற்காக பல தனியார் கல்வி நிறுவனங்கள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை முடித்து விட்டதாக அறிகிறோம். அவ்வாறான பள்ளிகளில், விலக்கின்றி வரும் கல்வியாண்டே இச்சட்டம் முழுமையாக செயலாவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளின் இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்துப் பருவச் சீட்டு(இலவச பஸ் பாஸ்) தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இச்சட்டத்தின் பயன் தொடர்புடையவர்களுக்கு சென்று சேரும். இதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
தங்கள் உண்மையுள்ள,
கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சென்னை
Post a Comment