உடனடிச்செய்திகள்

Monday, April 16, 2012

கூடங்குளம் அணுஉலைச் சிக்கலில் தொடரும் சி.பி.எம்.மின் பித்தலாட்டம் - த.தே.பொ.க. அறிக்கை!

கூடங்குளம் அணுஉலை:

தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பித்தலாட்டம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 


கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற பித்தலாட்ட நாடகம் தொழில்முறைப் பொய்யர்களைக் கூடப்பின்னுக்குத் தள்ளி விடும்.

 

அண்மையில், கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அனைத்திந்திய மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூடங்குளம் அணுஉலைத் திறப்பதை தாங்கள் ஆதரிப்பதற்கான 'விசித்திரமான' காரணத்தை  முன்வைத்தார்.

 

"செய்தாப்பூர் அணுஉலை என்பது தனியார் நிறுவனத்தின் அணுஉலை என்பதாலும், அமெரிக்க அணு ஆயுதத் திட்டத்தோடு இந்தியாவை இணைக்கும் என்பதாலும் செய்தாப்பூர் அணஉலையை சிபி.எம். எதிர்த்த்து. ஆனால் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் அப்படியானதல்ல. இது சோசலிச சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். எனவேதான் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை நாம் ஆதரித்தோம்" என்று அவர் பேசியுள்ளார்.

 

அணுஉலையிலும் அதில் வெளியிடும் அணுக்கதிரியக்கத்திலும் தத்துவ வேறுபாடு எதுவுமில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் அணுஉலை அணுக்கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது, முதலாளிய அணுஉலை தான் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமில்லை. யார் நிறுவினாலும் அணுஉலை அணுஉலை தான். தீமை விளைவிப்பவை தான்.

 

மேலும், பிரகாஷ் காரத் சொல்லுவது போல் இப்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுஉலை கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது அல்ல. 1988இல் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்நாடு சிதறுண்டதுடன் காலாவதியானது. எனவே, பொதுவுடைமையைக் கைவிட்டு முதலாளியத்திற்குத் திரும்பிய இரசிய நாட்டுடன் 2001ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தமாகும்.

 

அதை செயல்படுத்தும் இப்போதைய இரசியக் குடியரசுத் தலைவர் புடின், இரசியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னடி குயனைவ் அவர்களை தோற்கடித்து பதவிக்கு வந்தவராவார். அவருடைய ஆட்சி தான் கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்தப் போகிறது. எனவே, பிரகாஷ் காரத் குறிப்பிடுவதைப் போல் கூடங்குளம் அணுஉலையோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிக் கொண்டிருக்கவில்லை.

 

கூடங்குளம் அணுஉலையை ஆதரிப்பதற்கு அப்பட்டமான பொய்யையும், அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் துணைக் கொள்கிறார் பிரகாஷ் காரத்.

 

காரத்துக்கு முன்னால் சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். அக்கட்சியின் தமிழக மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்த போது, சிறப்புரையாற்றிய ஜி.இராமகிருஷ்ணன், "கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசிய அணுஉலை செய்தாப்பூரில் நிறுவப்பட இருந்த பிரஞ்சு அணுஉலையை விட உயர்த் தொழில்நுட்பத்தில் இயங்குவது. அதில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. எனவே தான் செய்தாப்பூர் அணுஉலையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறது" என்று கூறினார்.

 

வி.வி.இ.ஆர். 1000 தொழில்நுட்பம், 13 உடனடியாக சரி செய்யவேண்டிய முக்கியமான பாதுகாப்புக் கோளாறுகளை உள்ளடக்கியது என இரசிய நாட்டு அணுஉலை அறிவியலாளர்களே அறிவித்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமரிடம் கடந்த 2011 சூன் மாதம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை அது இயங்கத் தொடங்கிய 2ஆவது ஆண்டிலிருந்தே பாதுகாப்புக் கோளாறுகளில் சிக்கிக் கொள்ளும். அதில் உள்ள கட்டுப்பாட்டுக் கம்பி(Control Rod) இயங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அணுஉலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் உயர்ந்து சிறுக் கீறல் முதல் பெரு வெடிப்பு வரை நிகழ் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளனர்.

 

அது மட்டுமின்றி வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையில் மையக்கலனில் உள்ள பற்றவைப்புகள் (Welding) பலவீனமானது என்றும் தொடர்ச்சியான அணுத்துகள்களின் மோதல்களின் விளைவாக அவை இற்றுப்போக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர்.

 

உண்மை இவ்வாறிருக்க, வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை பாதுகாப்பானது என்பதற்கு திரு. ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கிருந்து அறிவியல் சான்று கிடைத்த்தோ தெரியவில்லை. தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவை ஞயாயப்படுத்த எந்தப் பொய்யையும் சொல்வதற்கு இவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.

 

கோழிக்கோடு மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சித்தாராம் யெச்சூரி, தங்கள் முடிவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். "கைகா அணுஉலையைப் போல கூடங்குளம் அணுஉலை ஏற்கெனவே இயக்கத்தில் இருப்பது. அதிலிருந்து ஏற்கெனவே மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. ஆனால்,  செய்தாப்பூர் அணுஉலை இனிமேல் தான் நிறுவப்பட வேண்டும். எனவே தான் கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.

 

கூடங்குளம் அணுஉலையில் இனிமேல் தான் எரிபொருள் நிரப்ப வேண்டும். அதன் பிறகு தான் மின்சார உற்பத்தி நடக்கும் என நாள்தோறும் அரசு அறிவித்துக் கொண்டுள்ள நிலையில், எல்லா செய்தித்தாள்களிலும் அச்செய்தி வந்து கொண்டிருக்கும் போது, இந்த அடிப்படைத் தகவல் கூட தெரியாமல் சீத்தாராம் யெச்சூரி பேசுவதாக நம்பமுடியவில்லை. ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி தங்கள் முடிவை ஞாயப்படுத்த, மக்களைக் குழப்ப அக்கட்சியின் தலைவர்கள் முனைகிறார்கள். அதில் ஒன்று தான் யெச்சூரியின் கூற்று.

 

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய்விட்டார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடிந்தகரைக்கே வருவதாக அறிவித்தார். அக்கட்சித் தலைமை கட்டளையிட்டதன் அடிப்படையில் கடைசி நேரத்தில் அப்பயணத்தைத் தவிர்த்துக் கொண்டார்.

 

இவ்வாறு, கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் பித்தலாட்டம் அளவிட முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. 


தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சிதம்பரம்,

நாள்: 16.04.2012போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT