உடனடிச்செய்திகள்

Tuesday, April 24, 2012

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா? - பெ.மணியரசன் கேள்வி!

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி!

 

இந்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரெங்கராசன், சென்னையில் தனியே ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தி 22.04.2012 அன்று செவ்வி கொடுத்துள்ளார். அதில், "இலங்கையில் உள்ள தமிழர் அமைப்புகள், தமிழர் அரசியல் தலைவர்கள், தமிழ்ப் பொதுமக்கள் யாரும் தனிஈழத்தை விரும்பவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமையுடன் கூடிய அரசியல் தீர்வையே விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.

 

சிங்கள இனவெறி அரசு நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, தமிழர்களின் ஊர்களில் சிங்களர் குடியேற்றப்பட்டு, தமிழர்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இயல்பான குடிவாழ்க்கை வாழ முடியாமல் இராணுவத்தினர் தமிழர்கள் பகுதியெங்கும் நிரப்ப்ப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அனுமதியின்றி, திருமணச் சடங்குகள், இறப்புச் சடங்குகள் கூட நடத்த முடியாத கெடுபிடிகள் தொடர்கின்றன. மறுவாழ்விற்கான துயர் துடைப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்த மனித உரிமை மீறல் குற்றம் புரிந்தோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள இனவெறியாட்டம் தொடர்கிறது.

 

இந்த அவலங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தாமல், தனி ஈழத்தைத் தமிழர்களே கோரவில்லை என்பதைக் கண்டறிந்ததாகக் கூறி, தமிழ்நாட்டுத் தமிழர்களையும், உலக சமுதாயத்தையும் குழப்புவதே இந்திய நாடாளுமன்றக் குழுவின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது.

 

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைத் திருத்தத்துடன் ஆதரித்து வாக்களித்ததற்காக, இலங்கை இனவெறியன் இராசபட்சேயிடம் மன்னிப்புக் கேட்காதது மட்டும்தான் பாக்கி. மற்ற எல்லா விளக்கங்களையும் பணிந்து சொல்லிக் கொண்டுள்ளது இந்தியா. பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்து இராசபட்சேக்கு மடல் எழுதினார்.

 

இவை எல்லாம் போதாதென்று ஒரு நல்லெண்ணத் தூதுக்குழுவாக, சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்றக் குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்தக் குழுவும் இந்திய அரசின் விருப்பத்தை அது எதிர்ப்பார்த்ததைத் தாண்டி நிறைவேற்றியுள்ளது.

 

ஈழத்தமிழர்கள் யாரும் தனிநாடு கோரவில்லை என்று கூறினார்கள் என்பது உண்மையெனில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்துமாறு, சுஷ்மா சுவராஜ் கோரியிருக்கலாம். டி.கே.ரெங்கராசனும், சுதர்சன நாச்சியப்பனும் கோரியிருக்கலாம்.

 

இன அழிப்பு செய்த இராணுவத்தின், 24 மணி நேர தீவிரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் கருத்தைப் பகிரங்கமாக கூறும் நிலை ஈழத்தில் இல்லை. பரிவாரங்கள் இல்லாமல் தனித்தனியே மக்களைச் சந்தித்துக் கேட்டிருந்தால் அவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்லியிருப்பார்கள்.

 

தமிழ் ஈழ விடுதலைக்காகப் புலிப்படையில் சேர்ந்து 40 ஆயிரம் புலிகள் உயிரீகம் செய்துள்ளார்கள். மக்களின் கோரிக்கையாக, தனித் தமிழீழம் இல்லையென்றால், வீட்டுக்கொருவர், இருவர் என்று கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலிருந்தும் புலிப்படையில் சேர்ந்திருப்பார்களா? தமிழீழத் தேசியத் தலைவராகப் பிரபாகரன் அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? முள்ளிவாய்க்கால் வரை அவருடன் இலட்சக்கணக்கான தமிழர்கள் வந்திருப்பார்களா? முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட போது அங்கும் புலிக்கொடி ஏற்றியிருப்பார்களா?

 

தமிழ்நாட்டிலிருந்து பலர் தமிழ் ஈழப்பகுதிகளுக்குப் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எந்தப் பரிவாரங்களும் இல்லாமல் தனித்தனியே தமிழர்களைச் சந்தித்து வருகிறார்கள். அப்போது, ஈழத்தமிழர்கள் சொன்னது "இனி மேலும் சிங்களன்களோடு வாழ முடியாது. நாட்டு விடுதலை ஒன்று தான் ஒரே தீர்வு" என்பது தான்.

 

ஈழத்தில் பகிரங்கமாக விடுதலைக் கருத்தைக் கூறமுடியாத நெருக்கடி இருப்பதால், புலம் பெயர்ந்த நாடுகளில் தான், ஈழவிடுதலை இலட்சிணம் இப்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாடுகளில்தான் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகக் கருத்துக் கூறும் நிலை உள்ளது.

 

ஈழத்தில் இருக்கும் இராணுவ நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, டி.கே.ரெங்கராசன், தமிழ் ஈழத்தைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார். இது இராணுவம் கருத்துரிமையைப் பறித்ததற்குச் சமமான கருத்துரிமைப் பறிப்பாகும். இதற்காக இவ்வாண்டிற்குரிய லங்கா ரத்னா விருது டி.கே.ரெங்கராசனுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழவிரும்புகிறார்கள் என்று கூறும் ரெங்கராசன் அந்த சமஉரிமையைப் பெற்றுத்தர அவரது கட்சி என்ன செய்கிறது? அதற்காக இந்தியா என்ன செய்கிறது?

 

சமஉரிமை என்ற கானல் நீரைக்காட்டி, ஈழத்தமிழர்களின் விடுதலை தாகத்தைத் தணிக்கச் சொல்லி மடைமாற்றுவதே இந்தியாவின் தந்திரம்! சி.பி.எம். கட்சியின் தந்திரமும் அதுவே. ஈழத்தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். தமிழகத் தமிழர்கள் குழம்ப வேண்டாம்.


தோழமையுள்ள,

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம் சென்னை 

நாள் 25.04.2012


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT