உடனடிச்செய்திகள்

Friday, April 12, 2013

புல்லார் வழக்குத் தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை அரசமைப்பு விதி 161 ன் படி தமிழக அரசே இரத்து செய்க ! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை !



புல்லார் வழக்குத் தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும்
பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை
அரசமைப்பு விதி 161 ன் படி தமிழக அரசே இரத்து  செய்க !
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை !

 தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜெ. முகபாத்தியாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றப் பிரிவு 12-04-2013 அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமையையும் குறித்து அக்கறைப்படு வோரிடையே  பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத் தீர்ப்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராசிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் தொடர்பான கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்து 11-08-2011 அன்று ஆணையிட்டார். இம் மூவரைத் தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்க தமிழகமே போர்க் கோலம்பூண்டது. குமரி முதல் கும்முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங்கள் நடை பெற்றன.  இப் போராட்டங்களின் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி 28-08-2011 அன்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.

இச் சூழலில் 30-08-2011 அன்று இது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இத்தடை ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் முன்மொழிய, தமிழக சட்ட மன்றம் இம் மூவர் தூக்கு தண்டணையை இரத்து செய்ய வலியுறுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது.

 ஆனால், இவ்வழக்கில் எவ்விதத் தொடர்புமில்லாத எல்.கே.வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இம் மூவர் மரணதண்டனைகுறித்த வழக்கை தன் விருப்பமாக(suo mato) உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொண்டது.

அரசமைப்புச் சட்ட விதி 139 (A) (1) க்குப் பொருந்தாதக் காரணங்களைக் குறிப்பிட்டு நீதிபதிகள் சிங்க்வி , முகப்பாத்தியாயா ஆகியோர் இவ்வழக்கை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.

“கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டை தேவேந்திர பால் சிங்புல்லார் வழக்கிலும், மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே இவ்வழக்கிலும் சென்னை யர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. பெரிதும் ஒத்தத் தன்மையுள் சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இந் நீதிமன்றம் கருதுகிறது “என இம் முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.

ந்நிலையில் புல்லார் வழக்கில் "கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது'' என்ற வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றப் பிரிவு புல்லார் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

புல்லார் வழக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே  நீதிமன்றம் வரையறுத்துவிட்டதால் புல்லார் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே மூன்று தமிழர் வழக்கிலும் மரணதண்டனையை உறுதிசெய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.

ந்நிலையில் இம் மூன்றுதமிழர் உயிர் காக்க இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு தமிழக அரசின் கைகளில்தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டவிதி 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து மாநில ஆளுனர் வழியாக பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது தூக்குதண்டனையை இரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

30-08-2012 அன்று தமிழக  சட்ட மன்றத்தில் முதலைமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்றுத் தமிழர் உயிர் காக்கும் தீர்மானத்துக்கு உயிர் கொடுப்பதாகவும் இது அமையும் என சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்புரையோ, அரசமைப்புச் சட்டவிதி 257 (1) ன் படியான இந்திய அரசின் ஆணைகளோ குறுக்கிட வாய்ப்பில்லாத அதிகாரமே 161-ன் படியான ஆளுரின் அதிகாரம் ஆகும்.

அரசமைப்புச் சட்ட விதி 257 இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள நிர்வாக உறவுகளைப்பற்றிப் பேசுகிறது. இதற்கும் விதி 161 ன் படியான ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கும் தொடர்பேதும் கிடையாது. 161 என்பது தனித்த அதிகாரமுள்ள விதியாகும்.

மன்னிப்பு வழங்கும் ஆளுரின் இந்த அதிகாரமோ, இந்திய தண்டனை சட்டவிதி 54 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 ஆகியவற்றின் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரமோ, கட்டற்றவை ஆகும். 

எனவே, தமிழக முதலைமைச்சர் அரசமைப்புச் சட்ட விதி 161 ன் படி பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் துக்குதண்டனையை இரத்து செய்து ஆணை பிறப்பித்து தமிழ் நாட்டுமக்களின் பெருவிருப்பத்தை நிறைவேற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                                                          தோழமையுடன்,
கி. வெங்கட்ராமன்,
 பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT