உடனடிச்செய்திகள்

Monday, April 1, 2013

தமிழர் தவிர்த்த இந்தியரும், சிங்களரும் ஒரே இனம் என்று இலங்கைத்தூதர் கூறியது உண்மையே! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை




தமிழர் தவிர்த்த இந்தியரும், சிங்களரும் ஒரே இனம் என்று
இலங்கைத்தூதர் கூறியது உண்மையே!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் சிங்களர்கள் இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள், தமிழர்களைத் தவிர்த்த இந்தியர்களும் சிங்களர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்,சமற்கிருதம், வங்காளி, இந்தி ஆகிய மொழிகள் வழியாக உருவானது தான் சிங்களமொழி, எனவே இந்தியர்கள் சிங்களர்களை எதிர்க்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கரியவாசம் கூறியது தவறான கருத்து என்றும், இந்தியர்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது  என்றும்  தமிழகத் தலைவர்கள் மறுப்புக் கூறிவருகிறார்கள்.

ஆனால், கரியசம் கருத்து பற்றி இந்திய அரசு சார்பில் யாரும் மறுப்புக் கூறவில்லை; வட இந்தியத் தலைவர்களும், தென்மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் மறுப்புக் கூறவில்லை.

தமிழர்களைத் தனிமைப்படுத்தி, சிங்களத் தூதர் கருத்து கூறும் போது, அதை மறுக்க வேண்டும் என்ற முனைப்பு இந்திய ஆட்சியாளர்களுக்கும், வடஇந்தியத்தலைவர்களுக்கும் ஏற்படாதது ஏன்?

கரியசம் ஒரு வரலாற்று உண்மையைத் தான் கூறியுள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது.

சிங்களர்கள் ஆரிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள்; தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள். இலங்கைக் குடியரசுத் தலைவராகஇருந்த ஜெயவர்த்தனே, 1980களில் தமிழின அழிப்புப் போரைத் தொடங்கிய காலத்தில், "இந்தியர்களும் ஆரியர்கள், சிங்களர்களும் ஆரியர்கள். யாருக்கேனும் இதில் சந்தேகம் ஏற்பட்டால் என் மூக்கையும், இந்திரா காந்தி மூக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்" என்றார்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று ஒரு தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.. கோரிய போது, அதற்காக மக்களவைத் தலைவர் மீராக்குமார், 20.03.2013 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட, பா..., சி.பி.எம்., சி.பி.., சமாஜ்வாதிக் கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய சனதாதளம், காங்கிரசு என அனைத்துக் கட்சிகளும் இலங்கையில் நடந்ததுஇனப்படுகொலைப் போர் என்று தீர்மானம் நிறைவேற்ற முடியாது, இலங்கை நமது நட்பு நாடு என்று கூறி மறுப்புத் தெரிவித்துவிட்டன.

அனைத்துக் கட்சிகளின் இம்மறுப்பு எதைக் காட்டுகிறது? மிகவும் பிரபலமாக உள்ள வடநாட்டு மனித உரிமை அமைப்புத் தலைவர்கள் இந்த இனப்படுகொலை மீது, இராசபக்சே கும்பலுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு கோரி இயக்கம் எதுவும் நடத்தாததும், வலுவானக் கோரிக்கை வைக்காததும் எதைக் காட்டுகிறது?

சேனல் – 4 தெலைக்காட்சியும், மனித உரிமைக் கண்காணிப்பாகமும்(Human Rights Watch -US) ஈழத்தில் அப்பாவித தமிழ் மக்க்களும், போர் முடிந்த பிறகு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதையும் வெளியிட்டு உலக மனச்சான்றை தப்பி எழுப்பியுள்ளனர். தமிழக ஊடகங்கள் பலவும் அவற்றை வெளிப்படுத்தி, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வடநாட்டு ஊடகங்கள் இந்த இனப்படுகொலை சாட்சிகளையும், செய்திகளையும் உரியவாறு வெளியிடாத்து ஏன்?

இந்தியர்களும், சிங்களர்களும் ஒரே இனம் என்று கரிய வாசம் கூறியதைத் தானே மெய்ப்பிக்கிறது.

2008-2009இல் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களுக்காக எங்களிடம் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டுமல்ல, ஒருகண்டனத்தைக் கூட எதிர்பார்க்காதீர்கள் என்று தமிழர்களை நோக்கி கூறியதாகத்தானே இம்மறுப்பு அமைகிறது?

இந்திக்காரர்களோ, மலையாளிகளோ, வேறு வடநாட்டவர்களோ எங்காவது ஒரு நாட்டில் ஒரு நூறு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தால், இந்த வடநாட்டுஅரசியல் கட்சிகளும், தமிழகம் தவிர்த்த தென்னாட்டு அரசியல் தலைமைகளும், இப்படி நடந்து கொண்டிருப்பார்களா?

இலங்கைத் தூதர் கரியசம், தமிழரைத் தவிர்த்த அனைத்து இந்தியர்களும், சிங்களர்களும் ஒரே இனம் என்பது தானே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

சிங்கள வீரர்களையும் உள்ளடக்கிய .பி.எல். கிரிக்கெட் அணி சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதலமைச்சர் செயலலிதாஅறிவித்தார். உடனடியாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சிங்களர் அடங்கிய விளையாட்டுக் குழுவை கேரளத்தில் அனுமதிக்கத் தயார், அந்த அணி இங்குவந்து விளையாடினால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று அறிவித்தார்.

தமிழர்களும், மலையாளிகளும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தோ, அல்லது இந்தியர் என்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தோ உம்மன்சாண்டிக்கு இருந்தால், அவர் இப்படிச் சொல்வாரா?

எந்த ஒரு நாட்டு அரசுக்கும், ஓர் இனச்சார்பு இருக்கும். அந்த இனத்தின் பண்பாட்டுச் சார்பு இருக்கும். இந்தியா, ஆரிய இனச்சார்பும், ஆரிய பண்பாட்டுச் சார்பும்கொண்டது. இலங்கையும் அப்படிப்பட்டதே.

தமிழர்களைத் தவிர்த்த, காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்த, இதர வடநாட்டு தேசிய இனங்கள் அனைத்தும் தங்களின் முன்னோர்களாக ஆரியர்களை பெருமையுடன் கருதிக் கொள்கிறார்கள். தமிழகத்தைத் தவிர்த்த இதர தென்னாட்டு தேசிய இனங்கள், ஆரியக் கலப்பினால் உருவானவை.ஆரியச்சார்பிலும், சமற்கிருத மொழி கலப்பிலும் பெருமிதம் கொள்பவை தான் இந்த வடநாட்டு - தென்னாட்டு தேசிய இனங்கள்.

வரலாறெங்கும் ஆரியம் தமிழினத்திற்கு பகை சக்தியாகவே செயல்பட்டிருக்கிறது. இனம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் இன்றும் ஆரியர் - தமிழர் மோதல்நடந்து கொண்டுள்ளது. இந்த மோதலின் வெளிப்பாடு தான் இந்திய - சிங்கள அரசியலில் ஒரு பக்கமாகவும், தமிழர் அரசியல் எதிர் பக்கமாகவும் மோதிக்கொள்ளும் போக்கு. தமிழர்களைப் பொறுத்தவரை சம உரிமை என்பதைத் தான் நாடுகிறோமே தவிர, யாரையும் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை;முனையவில்லை.

ஆனால், ஆரியம் என்பது தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களின் இன, மொழி, அடையாளங்களை அழிப்பதிலும் தமிழர்கள் மீது அரசியல் ஆதிக்கம்செலுத்துவதிலுமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல வடிவங்களில்  போர் நடத்துகிறது. இந்த உண்மை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து ஈழத்தமிழர்களைஅழிப்பதில் பளிச்சென தெரியவந்துள்ளது. 600 தமிழக மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக் கொல்வதற்கு இந்தியா பக்கபலமாக இருப்பது, மேலும் இந்தஇனமோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை போன்ற தமிழர்களின் மரபு உரிமைகளைப் பறிக்கும் கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும் இந்தியா துணை நிற்கிறது.இவற்றில் சட்ட ஆட்சியை செயல்படுத்த, இந்தியா விரும்பவில்லை. இவையெல்லாம் ஆரிய இந்தியாவின் தமிழின பகைப் போக்கின் அடையாளங்கள்.

இனியும் தமிழர்களை இந்தியர் என்ற அடிமை வளையத்திற்குள் சிக்க வைக்க தமிழகத் தலைவர்கள் முயலக்கூடாது. ஏதோ சிறப்பாக செயல்படுகின்றஇந்தியர்ஒற்றுமையை சீர்குலைக்க, சிங்களக் கரியசம் புதிதாக முனைந்து விட்டதைப் போல் கண்டனம் எழுப்புவதில் பொருளில்லை.

இந்தியரும் சிங்களரும் ஒரே இனம் தான். இவ்விருவரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தமிழர்கள் ஒரு சேரப் போராடும் போது தான் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT