உடனடிச்செய்திகள்

Thursday, April 11, 2013

இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்று உலக நாடுகள் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்
“இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்று
உலக நாடுகள் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்

ஈழத் தமிழர்களுக்கெதிராக 2008-2009 ஆம் ஆண்டுகளில் சிங்கள இராணுவம் நடத்திய போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததும் உலகின் கவனத்திற்கு வந்து, ஐ.நா. மனித உரிமை மன்றமும் அவை பற்றி புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.

இந்நிலையில் சிங்கள இராணுவ தலைமைத் தளபதி ஜெகத் செயசூரியா இராணுவ நீதிமன்றம் அமைத்து அதன் மூலம் போர்க்குற்றம் நடந்ததா என்று கண்டறிய ஆணையிட்டாராம். அந்த இராணுவ நீதி மன்றம், நடந்து முடிந்த போரில் குடி மக்களில் ஒருவர் கூட இராணுவத்தால் கொல்லப்படவில்லை என்று தீர்ப்பளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் முதல் பாகத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராசபட் சேயிடம் செய சூரியா கொடுத்துள்ளார்.

சிங்கள அரசின் அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள், இராணுவ நீதிமன்றத் துறையினர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் எந்த அளவு சொந்த மனச்சான்றை கொலை செய்யக்கூடியவர் என்பதும், இலங்கையில் எழுதப்பட்டுள்ள சட்டத் திட்டங் களுக்கும், பன்னாட்டு மனித உரிமை சட்டத் திட்டங்களுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் கட்டுப்படாத அரம்பர்கள் (rowdies) என்பது இந்த இராணுவ நீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் மீண்டும் மெய்பிக்கப்பட்டுள்ளது.

பான்கீ மூன் அமைத்த மூவர் குழு போரின் கடைசி நாட்களில் 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் சிங்கள இராணுவம் செய்த போர்க் குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறியுள்ளது.  இராசபட்சே அமர்த்திய கற்றுக்கொண்ட பாடங் களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணையம் கூட கீழ் நிலை இராணுவ அதிகாரிகள் போர்க் குற்றம் புரிந்துள்ளார்கள் என்று அறிக்கை வெளியிட்டது.

மனிதர்கள் உள்ளிட்ட மற்ற விலங்குகளை முழுமையாக விழுங்கும் முதலையைப் போல  சிங்கள இராணுவ நீதிமன்றம் குடிமக்களில் ஒருவர் கூட கொல்லப் படவில்லை. (zero civilian casualty) என்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்பது உண்மையாகுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அரசுடன் தூரதரக உறவை துண்டித்துக் கொண்டு அதன் மீது இனப்படுகொலை குற்ற விசாரணை நடத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு தனது குற்றச்செயல்களை நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதற்கு எள்ளளவும் இனி இடமில்லை என்பதை உலக நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
 பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT