உடனடிச்செய்திகள்

Tuesday, February 25, 2014

காவிரி உருவாகும் குடகு வனப்பகுதியில் மரங்களை வெட்டும் இந்திய அரசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்! த.தே.பொ.க. பங்கேற்பு!


காவிரி உருவாகும் குடகு வனப்பகுதியில் மரங்களை வெட்டும் இந்திய அரசைக் கண்டித்து
முற்றுகைப் போராட்டம்! த.தே.பொ.க. பங்கேற்பு!


காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், மடிக்கரையில், காவல்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நேற்று(24.02.2014) பிற்பகல் 12 மணியளவில் மடிக்கரை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற, பெருந்திரளான மக்கள் மடிக்கரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இம்முற்றுகைப் போரட்டத்திற்கு, போராட்டக்குழுத் தலைவர் முனைவர் நஞ்சப்பா தலைமையேற்றார். திரு. நஞ்சுண்டேஸ்வர கவுடா தலைமையிலான விவசாய சங்கம், மைசூர் மாண்டியா விவசாய சங்கம் உள்ளிட்ட கர்நாடக உழவர் சங்கங்களும், தமிழ்நாட்டு விவசாய சங்கங்களும், திரளான குடகு இனப் பொது மக்களும், பல்வேறு கன்னட அமைப்பினரும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இப்போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு காவிரிச் சேனை அமைப்பின் தலைவர் திரு. இரவி செங்கப்பா தலைமை தாங்கினார்.

தமிழகத்திலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், இப்போராட்டத்தில் கலந்து கொள்ள, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அங்கு சென்றிருந்தனர்.

போராட்டத்தின் போது அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசப் , பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, குடகு இன மக்கள், கன்னட இன மக்கள், தமிழின மக்களை வஞ்சிக்கும் விதமாக இந்திய அரசுக்கு சொந்தமான பவர் கிருட் கார்ப்பரேசன் தன்னிச்சையாக கோழிகூட்டிற்கு மின்சாரம் கொண்டு செல்வது என்பது, மூன்று இன மக்களையும் வஞ்சிப்பதாகவே உணர்கிறோம் என்றும், இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, மாற்றுப் பாதையில் இதை இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினார்.

பேராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தோழர்கள் ரமேஷ், மு.வேலாயுதம், சதீஷ் பாபு, நிகரன், தமிழக உழவர் முன்னணி லிங்கனம்பட்டி அமைப்பாளர் தோழர் தூருவாசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.





போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT