தமிழ்வழிப்
பள்ளிகளுக்கு மாற்றாக ஆங்கிலவழிக்
கல்வியைப் புகுத்தியது சாதனையா? தமிழக
முதல்வர் செயலலிதாவின் சட்டமன்ற அறிவிப்புக்கு
தமிழ்வழிக்
கல்வி கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் கேள்வி!
நேற்று
(03.02.2014) தமிழக சட்டப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்
மீதான விவாதங்களுக்கு தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் விடையளித்துப் பேசினார். அப்போது
“தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 6594 பள்ளிகளில் 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளில்
ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் ஆங்கில
மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தனியார் பள்ளிகளில் பெற்றோர் சேர்க்கின்றனர்.
அவர்களது நிதிச்சுமையை குறைக்கும் வகையில் அரசே ஆங்கில வழிப் பிரிவுகளை தொடங்கியுள்ளது”என்று மிகப்பெருமிதத்தோடு
சாதனைப் பட்டியல்களில் ஒன்றாக ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கியதை சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்
தமிழக முதல்வர் செயலலிதா. .
தமிழ்வழிப்
பள்ளிகளுக்கு மாற்றாக ஆங்கிலவழிக் கல்வியைப் புகுத்தியது சாதனையா? அது சாதனையல்ல. தமிழை
நீக்கும் வேதனை !
ஆங்கில
வழிப்பிரிவுகள் தொடங்கப்படும் போது அப்பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளுக்கு மாணவர்கள்
சேர்க்கை மிகவும் குறைந்து விடுகிறது அல்லது சில பள்ளிகளில் தமிழ் வழிப் பிரிவுகளில்
மாணவர்களே சேருவதில்லை. தமிழ்வழிப் பிரிவுகளில் மாணவர்கள் சேராதது பற்றி முதலமைச்சர்
கருத்து எதுவும் கூறவில்லை.
தி
இந்து - தமிழ் நாளேடு, கடலூர் மாவட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி அம்மாவட்டத்தில்,
162 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு தமிழ் வழிப்பிரிவில் ஒரு மாணவர் கூட சேர
வில்லை என்றும், 21 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு தமிழ்வழிப் பிரிவில் 1
மாணவர் கூட சேரவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வகுப்புகளில் தமிழ்வழிப்பிரிவே
இல்லை என்றாகிவிட்டது. தமிழகத்தில் உள்ள இதர மாவட்டங்களிலும் இது பற்றி கணக்கெடுத்தால்,
அங்கெல்லாம் எத்தனைப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகள் மூடப்பட்டுவிட்டன என்ற செய்தி
தெரியவரும்.
வரும்
கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகள் மேலும் அதிக வகுப்புகளுக்கு
கொண்டு செல்லப்படும். அப்போது, தமிழை பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகள் பல்லாயிரக்கணக்கான
பள்ளிகளில் அறவே இல்லாத நிலை உருவாகும். அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் தமிழ்
பயிற்றுமொழி வகுப்புகள் இல்லாத நிலை உருவாகும். தமிழக அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாம்
வகுப்பு வரை தமிழ்மொழி பயிற்றுமொழி என்ற நிலையை இழந்து விடும்.
கல்வித்துறையில்
நீக்கம் செய்யப்பட்ட பின் அடுத்து ஆட்சித்துறையிலும் தமிழ் நீக்கம் செய்யப்படும். இவ்வாறாக,
தமிழ்நாட்டில் “தமிழ்“
தேவையற்ற ஒரு மொழியாக மாற்றப்பட்டு விடும்.
தமிழ்நாட்டின்
அரசுப் பள்ளிகளில் இருந்து தமிழை வெளியேற்றுவதற்கு தமிழக அரசே அகலமாக, கதவு திறந்துவிட்டுள்ளது.
இதை ஒரு சாதனை போல் முதலமைச்சர் பட்டியலிடுகிறார். 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்
ஆட்சிமொழி சட்டம் இதன் மூலம் செல்லாக் காசாக்கப்படுகிறது.
பெற்றோர்கள்
ஆங்கில வழிப்படிப்பை விரும்புகிறார்கள், அதற்காக தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம்
செலுத்தி பிள்ளைகளை சேர்க்கிறார்கள், அந்த சுமையை நீக்குவதற்காகவே அரசுப் பள்ளிகளில்
ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சொல்கிறார்.
தனியார்
நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளை பெற்றோர் நாடுவதற்குரிய காரணங்கள் யாவை என்று ஆய்வு
செய்து, அக்காரணங்களைப் போக்கி அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக் கூடிய வகையில்
தீர்வுகள் காணப்பட வேண்டுமே தவிர, அரசே ஆங்கில மெட்ரிக்குலேசன் பள்ளிகள் நடத்த முயலக்கூடாது.
தமிழ்வழியில்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 80 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற வேண்டும்.
அதைப் போலவே, பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மருத்துவம்
– பொறியியல் போன்ற உயர் தொழிலியல் கல்வி மாணவர் சேர்க்கையில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு
என சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் கட்டாயம் விளையாட்டுத் திடல், தகுந்த
ஆய்வுக் கூடம், கழிப்பறை, முழு நேரத் துப்புரவு ஊழியர் என்று உள்கட்டமைப்பு வசதிகளை
உருவாக்க வேண்டும். இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றிற்கு தனித்தனி ஆசிரியர்கள் அமர்த்த
வேண்டும். இவை போன்ற ஏற்பாடுகளை செய்தால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்
சேர்க்கவே விரும்புவார்கள்.
அவ்வாறு,
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் செயல்திட்டங்களை முன் வைக்காமல் ஆங்கிலவழிப் பிரிவுகளைத்
தொடங்குவது, தமிழை – தமிழ் மண்ணிலேயே நீக்கம் செய்யும் நடவடிக்கையாகும்.
மேற்கண்ட
மாற்றுத் திட்டங்களை தமிழக அரசிடம் முன்வைத்து, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் பல்வேறு
போராட்டங்களை நடத்தியுள்ளது. இக்கோரிக்கைகளை, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொறுப்பாளர்கள்
தலைமைச் செயலகத்தில் 24.01.2014 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து மனுவாக
அளித்தோம். அதேபோல், இன்னொரு மனுவை அதே நாளில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களிடமும்
அளித்தோம். தமிழக அரசு, தனது ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை மறு ஆய்வு செய்யுமென்று
எதிர்பார்த்தோம்.
ஆனால்,
முதலமைச்சரே மிகப்பெருமிதத்தோடு சாதனைப் பட்டியல்களில் ஒன்றாக ஆங்கிலவழி வகுப்புகள்
தொடங்குவதை சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்.
அரசுப்
பள்ளிகளில் தமிழ் வழிப்பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன, அவற்றில் தங்கள் பிள்ளைகளை
சேர்க்க விரும்புவோர் சேர்க்கலாம் என்று ஒரு வாதம் எழுப்பக்கூடும். குழந்தைக்கு முன்னால்
பருப்பும் – நெய்யும் கலந்த அமுது போன்ற சோற்றை ஒரு தட்டிலும், ஐஸ்கீரிமை இன்னொரு தட்டிலும்
வைத்தால் அது ஐஸ்கீரிமை தான் முதலில் எடுத்து சாப்பிடும். அதுபோல், எதிர்காலம் பற்றிய
பாதுகாப்பும் நம்பிக்கையும் அற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் படித்தால்
சிறந்த வேலை கிடைத்து சிறப்பாக வாழ்வார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் முன், எதிர்காலப்
பாதுகாப்புக்குரியத் திட்டத்தை தமிழ்வழியில் படிப்போருக்கு வைக்க வேண்டுமே தவிர ஆங்கில
மொழியை வைக்கக் கூடாது. ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக வைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.
தமிழக
அரசின் மேற்படி நடவடிக்கை முழுக்க முழுக்க தமிழ் மொழிக்கு எதிரானது. தமிழ் மொழிக்கு
எதிரான ஒரு திட்டம், தமிழ் இனத்திற்கும் எதிரானது தான். தமிழர்கள் கல்வியில் தங்கள்
தாய் மொழியை இழந்து விட்டால், எதிர்காலத்தில் தங்கள் இன அடையாளத்தையும் இனக் கட்டுக்கோப்பையம்
பண்பாட்டுப் பெருமிதங்களையும் இழந்து விடுவார்கள். இனத்தை இழந்த தமிழர்கள், தங்கள்
சொந்த மண்ணிலேயே ஆதிக்கம் செய்யும் இந்தி போன்ற அயல்மொழி பேசும் பிற இனத்தாரை அண்டிப்பிழைக்கும்
நிலைக்குத் தாழ்ந்து போவார்கள்.
மாற்று
அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தோர் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்தார்கள்
என்றும், அவர்களே ஆங்கில வழி மெட்ரெிக்குலேசன் பள்ளிகள் நடத்துகிறார்கள் என்றும் முதலமைச்சர்
சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த மாற்று அரசியல் இயக்கத்தினரின் ஆங்கிலச் சார்பு நிலை
முழுக்க முழுக்க தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் எதிரானது என்று தமிழ்வழிக் கல்விக்
கூட்டியக்கம் சுட்டிக்காட்டுகிறது.
மொழிச்சிக்கலில்,
எதிர் தரப்பு அரசியலார் செய்த தவறு, தமது அரசின் தவறை நியாயப்படுத்தி விடாது என்பதை
தமிழக முதலமைச்சர் அவர்கள் உணரவேண்டும்.
எனவே,
தமிழக அரசு தமிழ் இனத்திற்கு எதிரான ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை உடனடியாகக் கைவிட
வேண்டும் என்றும், மேலும் நாம் சுட்டி காட்டியவாறு தமிழ்வழிக் கல்விக்கு ஆக்கம் சேர்க்கும்
வகையில் சட்டங்கள் இயற்றி அரசுப் பள்ளிகளின் உள்கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும்
என்றும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Post a Comment