தமிழினப் பேரரசன் இராசராசன் எழுப்பிய
தஞ்சைப் பெரிய கோவிலுக்கு
மராத்திய பான்ஸ்லே பரம்பரை அறங்காவலரா?
பான்ஸ்லேயை வெளியேற்றக் கோரி
தஞ்சையில் எழுச்சிமிகுப் பேரணி!
தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் சோழப் பேரரசர்கள் எழுப்பிய இதர கோயில்கள் உள்ளிட்ட 88 கோயில்களை கொண்ட அரண்மனைத் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக தஞ்சை மண்டலத்தை ஒரு காலத்தில் ஆக்கிரமித்த மராத்திய இனத்தை சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவர் இருக்கிறார். இன்றைக்கும் அவர் மேற்கண்ட கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக இருப்பது இந்து அறநிலைய சட்டத்திற்கும் முரணானது, வரலாற்று உண்மைகளுக்கும் எதிரானது, தமிழர் தன்மானத்திற்கும் பாதகமானது.
பாபாஜி பான்ஸ்லே சோழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தஞ்சையை ஆண்ட மாராத்திய அரசர்களின் சட்டப்பூர்வ வாரிசும் அல்லர். ஒருவர் சொந்தமாக கோயிலைக் கட்டி அதற்கு தன் சொத்துக்களை எழுதி வைத்து அதனுடைய அன்றாட வழிப்பாட்டு செலவுகளுக்கு பணம் கொடுத்து பராமரித்து வந்தால்தான் அவர் ஒரு கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும் என்பது இந்து அறநிலையச் சட்டம் விதிக்கும் நிபந்தனையாகும்.
எனவே மேற்கண்ட மூன்று கூறுகளுக்கும் பொருந்தாத மாராத்திய பாபாஜி பான்ஸ்லேயை தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக வைத்திருப்பது சட்ட விரோதமாகும். தமிழக அரசு இதில் தலையிட்டு பாபாஜி பான்ஸ்லேயை பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கி மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களை தமிழக அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும்.
இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, பல்வேறு அமைப்புகளையும் உள்ளடக்கி கடந்த 2005ஆம் ஆண்டு 'தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு' என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்ப் பேரரசன் இராசராசன் சதய விழா நடைபெறும் இன்று (02.11.2014), “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” சார்பில், எழுச்சிமிகுப் பேரணி நடைபெற்றது.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு, “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” தலைவர் திரு. அயனாவரம் சி. முருகேசன் தலைமையேற்றார். செயலாளர் திரு. வெண். வீரமுருகு. வீரசிங்கம் முன்னிலை வகித்தார். பேரணியின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் இராசராசன் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவுரையாற்றினார்.
பேரணியில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்கழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, தோழர் விடுதலைச்சுடர், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி, நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு.முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழின், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தேவதாசு, மாவட்டச் செயற்குழு தோழா ரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் தோழர் ம.இலட்சுமி, தோழர் அமுதா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Post a Comment