சென்னை பாரிமுனையில் மார்வாடிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின் சாலைமறியல் போராட்டம்!
சென்னையில் விதிமுறைகளை மீறி எழுப்பப்பட்டுள்ளக் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ.வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி முதல் 14,600 கட்டடங்களில் சி.எம்.டி.ஏ, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 98 சதவீத கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன எனக் கண்டறிந்தனர். இந்த அறிக்கை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையின் இதரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் அளவுகளிலிருந்து சிறிது விலகி கட்டிடம் கட்டப்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கின்ற அரசு நிர்வாகம், ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள 98% கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கு விடையில்லை. இது போதாதென்று, தற்போது அப்பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப்பெரும்பாலானவை வடநாட்டு மார்வாடிகளுக்கு சொந்தமானதாகும்.
ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ள லிங்கச் செட்டி தெரு, தம்பு செடி தெரு போன்ற தெருக்கள் ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதை முறை கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும் சென்னையின் இதரபகுதிகளில் பகல் நேரங்களில் தடை செய்யப்பட்டுள்ள கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மட்டும் தாராளமாக வந்து செல்கின்றன. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த இந்தப் பகுதியில் இவர்கள் சரக்குகளை கையாள்வது சாலைகளில் நடந்துச் செல்வோரின் உயிருக்கு அச்சுறுத்தலாய் விளங்குகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சவால் விடும் வகையில் பல வட இந்தியர்களும், வணிக நிறுவனங்களும் அவர்களின் கட்டிடத்திற்கு முன்பு உள்ள சாலையின் பெரும்பகுதியை தங்களின் வாகனம் நிறுத்துமிடமாக அறிவித்து (Parking Area) பொது மக்களின் நடமாட்டத்தையே பெருமளவில் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சட்ட விரோதமான செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் குறிப்பாக போக்குவரத்து காவல்துறையினர் மெளனமாக இருப்பதற்கு அவர்களுக்கு கிடைத்து வருகின்ற மாதாந்திர கையூட்டு தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும்.
இவ்வாறு அதிகாரிகள் கையூட்டு பெறுவதினாலும், அவர்களுடைய கையாளாகாத்தனத்தினாலும் பாதிக்கப்படுவது பொது மக்களும், வழக்கறிஞர்களும் தான். இனிமேலும் இத்தகைய இழிவான காரியங்களை அனுமதிப்போமேயானால் நாமும் குற்றவாளிகளாக கருதப்படுவோம் என்ற வகையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்த அநீதிகளுக்கு எதிராக, இன்று வீதியில் களமிறங்கினர்.
ஜார்ஜ் டவுன் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க, அரசு அதிகாரிகளை, போக்குவரத்து காவல்துறையை வலியுறுத்தும் வகையில் இன்று (24.11.2014) திங்கள் கிழமை காலை 11 மணி அளவில், வீதி வீதியாகச் சென்று அத்துமீறல்களை நேரடியாகத் தட்டிக் கேட்டனர். இதன் இறுதியில், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இதன் போது, உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து வழக்கறிஞர் சேசுபாலன் தலைமையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பேரணியாக, ஆர்மேனியன் தெரு, லிங்குச் செட்டி தெரு, தம்புச்செட்டி தெரு ஆகிய தெருக்களின் வழியாக சென்று அங்கு போக்குவரத்துக்கு இடையூராக இருந்த மார்வாடிகளின் வாகனங்களை முழக்கங்கள் எழுப்பி அப்புறப்படுத்தினர்.
இதன் இறுதியில், உயர்நீதிமன்ற முதன்மைச் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. உடனடியாக அங்கு வந்த, காவல்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குலள் இச்சிக்கல்களில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பாவேந்தன், ரசினி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் வி.கோவேந்தன், தோழர் நல்லன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
Post a Comment