அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து சிங்களத் தூதரகம் முற்றுகை!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது.
தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.
இந்த அநீதியைக் கண்டித்து, இன்று (31.10.2014) வெள்ளிக்கிழமை - காலை 10 மணிக்கு, பல்வேறு கட்சி - இயக்கங்கள் உறுப்பு வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிங்களத் தூரகத்தை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ரூட்டி திரு. தி. வேல்முருகன் அவர்கள் ஒங்கிணைத்தார்.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு. ஜெகன்மூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் தமிழினி கி.வீரலட்சுமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர்.
கொடுங்கோலன் இராசபட்சேயின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
”விடுதலை செய், விடுதலை செய் அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்”, ”மோடி அரசே, இலங்கையுடன் கூடிக் குலவாதே” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் உள்ளிட்ட திரளான தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.
கைதாகியுள்ள தோழர்கள் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment