உடனடிச்செய்திகள்

Sunday, August 2, 2015

கலிங்கப்பட்டியில் காவல்துறையினர் வன்முறை அ.இ.அ.தி.மு.க.ஆட்சி மக்களுடன் மோதும் மூர்க்கத்தனம். - பெ. மணியரசன் கண்டணம்


கலிங்கப்பட்டியில் காவல்துறையினர்  வன்முறை அ.இ.அ.தி.மு.க.ஆட்சி  மக்களுடன் மோதும் மூர்க்கத்தனம் தமிழ்த் தேசியப் பேரியக்கத்  தலைவர் பெ. மணியரசன் கண்டணம்

கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வெடித்த காவல்துறையின் வன்முறைச் செயலை, தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் அன்னையார் 90 அகவையைக் கடந்த நிலையில் நேற்று (01.08.2015) கலிங்கப்பட்டி மதுக்கடையை மூட வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரிக்கை வைத்தும், அறவழியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மது ஒழிப்புப்போராளி சசிபெருமாள் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதே இன்னுயிர் ஈந்து (31.07.2015) ஈகியானபின் தமிழ்நாடெங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தித் தன்னெழுச்சியாக மக்கள் போராடிக் கொண்டுள்ளனர். சேலத்தில் ஈகி சசிபெருமாள் மனைவி, மகன், மகள் உட்பட மதுவிலக்கு கோரி அறவழியில் முழக்கமிட்டவர்களை இன்று காலை தமிழ்நாடு அரசு கைது செய்தது.

இந்தச் சூழ்நிலையில், மக்கள் உணர்வுகளை மதித்து, அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களிடம் இணக்கமான அணுகுமுறையைக் கையாள்வதற்கு மாறாக செயலலிதா அரசு, தனது வலிமையை மக்களிடம் காட்டும் மூர்க்கத்தனமான அணுகுமுறையைக் கையாள்கிறது. அடுத்தடுத்து அ.இ.அ.தி.மு.க ஆட்சி என்னென்ன வன்முறையை ஏவிவிடுமோ என்ற பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மக்கள் உணர்வை மதிக்கும் ஆட்சியாக செயலிலிதா ஆட்சி இருந்திருக்குமேயானால் இன்று கலிங்கப்பட்டி மதுக்கடையை வீம்புக்காக திறந்திருக்காது. சில நாட்கள் அந்தக் கடை மூடப்பட்டிருந்தால் அதனால் செயலலிதா அரசுக்கு எந்த அவமானமும் ஏற்பட்டிருக்காது. மதிப்புதான் ஏற்பட்டிருக்கும். மாறாக, இன்று அங்கு மதுகடையை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்ட செயல், “கேடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே” என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.

இப்பொழுது கலிங்கப்பட்டியில் வைகோ ,திருமாவளவன் போன்ற தலைவர்களையும், மக்களையும் கைது செய்ய முனைவது சிக்கலை மேலும் தீவிரமாக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தம்முடைய அடுத்த கட்ட நடவடிக்களை நிதானமாகத் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டும் ஒழுக்கம், அறம், வாழ்க்கைப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சீர்குலைக்கும் மதுக்கடைகளைத் திறந்து வணிகம் செய்து ஆட்சி நடத்துவது சமூகத் தீங்கு என்பதை உணர்ந்தும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முழு அடைப்பில் பங்கேற்பு

வருகின்ற 04.08.2015 அன்று மது ஒழிப்புப்போராளி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் முறையிலும், தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை செயல்படுத்தக் கோரியும் நடைபெறுகின்ற தமிழகம் தழுவிய முழு அடைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கமும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு கோருகின்ற கட்சிகளும், அமைப்புகளும், இந்த முழு அடைப்பை வெற்றிபெறச் செய்வது கட்டாயக் கடமை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT