“உலவக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வெளியேறு!” சென்னையில் கல்வி உரிமைப் பேரணி
கல்வியை வணிகப் பொருளாக மட்டுமின்றி, உலகச் சந்தையில் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கட்டுப்பாட்டில் கல்வியை ஒரு விற்பனைப் பொருளாகவும் மாற்ற, இந்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
உலக வணிகக் கழகம் (WTO) அமைப்பின் சேவை வணிகத்திற்கான பொது ஒப்பந்தத்தில்(GATS) கல்வியையும் வணிகப் பொருளாக்கி, அதை இறுதி செய்யும் வகையில், இவ் ஆண்டின்(2015) இறுதியில் திசம்பர் மாதம் கென்யா தலைநகர் நைரோபில், உலக வணிகக் கழகத்தின் 10ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.
அதில் கலந்து கொண்டு, கல்வியை வணிகப் பொருளாக அறிவிக்கும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வரும் இந்திய அரசைக் கண்டித்தும், கல்வியை வணிகப்பொருளாக்க விருப்பம் தெரிவித்த இந்திய அரசு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இன்று(09.08.2015), சென்னையில் “கல்வி உரிமை காக்க மக்கள் பேரணி” நடைபெற்றது.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில், சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடலிலிருந்து தொடங்கி நடைபெற்ற இந்த பேரணியை, அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் பு.பா. பிரின்ஸ் கசேந்திரபாபு ஒருங்கிணைத்தார்.
மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ச. முத்துக்குமரன், முனைவர் வே. வசந்திதேவி, மேனாள் இந்திய ஆட்சிப் பணி திரு. எம்.ஜி. தேவசகாயம், கல்வியாளர் முனைவர் ச.சீ. இராசகோபாலன், தமிழகத் தமிழாசிரியக் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடைத் தலைவர் முனைவர் பி. இரத்தினசபாபதி, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத் தலைவர் திரு. செ. அருமைநாதன், கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு தேசிய செயற்குழு உறுப்பினர் திரு. ஐ.பி.கனகசுந்தரம், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன் பேரணியில கலந்து கொண்டு உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பழ.நல். ஆறுமுகம் தலைமையில், தென்சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்குமரன், வடசென்னை செயலாளர் தோழர் இரா. செந்தில், தென்சென்னை தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் நல்லசிவம், சுரேசு, ஜீவா உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் பேரணியில் பங்கேற்றனர். நிறைவில், தோழர் உதயம் நன்றி கூறினார்.
இசுலாமிய மாணவர் அமைப்பு, முற்போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
“உலக வர்த்தகக் கழக அமைப்பே
எங்கள் கல்வியை விட்டு வெளியேறு!”
Post a Comment