உடனடிச்செய்திகள்

Sunday, May 15, 2016

நன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள்

நன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள்

'தமிழக அரசியல்' வார இதழுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  தோழர் பெ. மணியரசன் வழங்கிய பேட்டி !

அடிமைப்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் - தங்கள் அடிமை நிலையை உணராமல் இருப்பதற்காக வெள்ளையர்கள் கொண்டு வந்த அதே தேர்தல் முறையை, ஆதிக்க இந்திய அரசு நம்மீது திணிக்கிறது என்றுகூறி, அதிகாரமில்லா தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் ஏமாற்றுப் பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடந்த பிப்ரவரி 20 அன்று தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் அளித்துள்ள பேட்டி, “தேர்தலே ஒரு நாடகம்” என்ற தலைப்பில் 'தமிழக அரசியல்' வார ஏட்டில் இன்று வெளியாகியுள்ளது.

அப்பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது :

“முதலில் நாம் ஏன் வாக்களிக்கிறோம்? எதற்காக வாக்களிக்கிறோம்? யாருக்காக வாக்களிக்கிறோம்? என்ற கேள்விகள் நம் மக்கள் முன் இருக்கிறது. அதற்கு முன் இந்த சட்டமன்றம் எப்படி உருவானது என்பதை சொல்கிறேன்.

வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் 1919-ஆம் ஆண்டு மாண்டே செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட காலனி ஆட்சிக்குரிய சட்டமன்றம்தான் இப்போது உள்ள சட்டப்பேரவை. முதலில் இந்த சட்டப்பேரவை வெள்ளையர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தது. இப்போது டெல்லி அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. அதுதான் உண்மை.

நாம் ஏன் வாக்களிக்கிறோம்? தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்களித்து என்ன முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறோம்? ஏழை ஏழையாகதான் இருக்கிறான். பணக்காரன் பணக்காரனாகத்தான் இருக்கிறான். எந்த முன்னேற்றமும் இல்லை.

நம்முடைய வாழ்க்கையை முன்னேற்ற இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? நம்முடைய 234 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நம் தமிழக மக்களுக்காக ஒரு மசோதாவை முதலில் சட்டமன்றத்தில் இயற்ற முடியுமா?

அதற்கு முதலில் டெல்லி அரசின் மூலமாக நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும். அதுவும் அந்த சட்டம் மத்திய அரசுக்கு எதிராக இருந்தால் ஆளுநர் கையெழுத்து போட மாட்டார். பிறகு எப்படி நம் வாழ்க்கையைம் வளமும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலால் முன்னேறும்?

நம் மக்களின் பிரச்சினைகளான காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை, பாலாற்று உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, மீனவர்கள் உரிமை என எந்த உரிமைகளை நாம் இதுவரை வாக்களித்த கட்சிகள் பெற்றுத் தந்தன? இவையனைத்தும் நம்மைவிட்டு பறிபோனதுதான் மிச்சம். பிறகு ஏன் இவர்களை நம்பி நாம் வாக்களிக்கிறோம்?

நம் வாழ்வு சிறக்க வேண்டும். நம் மண் சிறக்க வேண்டும் என்றுதானே வாக்களிக்கிறோம். அதில் ஏதாவது ஒன்றாவது நடந்ததா? ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்கள் பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் கோடி எவ்வளவு? இந்த பணமெல்லாம் யாருடைய பணம்? ஒவ்வொருவரின் வரலாற்றையும் திருப்பி பாருங்கள். அப்போது அவர்களின் உண்மை முகம் தெரியும். நம் மக்களின் பணத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்கள் தளபதி என்றும் தமிழினத் தலைவர், புரட்சித் தலைவி என்றும் அவர்களை பிரகடனப்படுத்திக் கொள்ள நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நம் மக்கள் இங்கு மின்சாரப் பற்றாக்குறையால் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் போது இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, தினசரி நாளொன்றுக்கு கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் 11 கோடி அளவுக்கு கொடுத்து பக்கத்து மாநிலங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தார்களே? அதற்காகவா நீங்கள் இவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?

இப்போது தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளின் உண்மை முகங்களை ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். நாம் நன்றாக ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போகமாட்டார்கள்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன், தமது பேட்டியில் தெரிவித்துள்ளார். 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT